நாட்டின் எதிர்காலம் காக்கும் தாய்பால்

பதிவு செய்த நாள் : 03 ஆகஸ்ட் 2017

மனிதர்களுக்கு முதல் உணவு தாய்பால். தாய்ப்பால் தரும் ஆரோக்கியமே மனிதனின் எதிர்கால ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. தாய்ப்பால் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது..

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த ஐ.நா சபை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடி வருகிறது.
தாய் – குழந்தை - ஆரோக்கியம் – வளர்ச்சி ஆகிய பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக தாய்ப்பால் பற்றிய கட்டுரை ஒன்று முன்னர் வெளியானது.
தாய்ப்பால் கொடுப்பதன் அரசியல், பொருளாதார முக்கியத்துவம், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளால் நாடு சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை இந்த கட்டுரை முன்வைக்கிறது.


இந்தியாவில் தாய்பால் வாரம்:

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தாய்ப்பால் வாரம் தேசியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் கல்லூரிகள் என அனைவரும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.  

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 46 சதவீத குழந்தைகளுக்கே தேவையான அளவு தாய்பால் கொடுக்கப்படுகிறது. 54 சதவீத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. அதனால் இந்தியாவில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் அவசியமாகிறது.

தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு உடல் வளர்ச்சி, ஆரோக்கியத்தை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. அதனால் குழந்தைகள் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடுகள், மாசுகள், அழுக்குகள் குப்பைகள், குடிநீருக்கு பயன்படுத்தும் ஆற்றில், குளத்தில் ஏரியில் கழிவுநீரை கலப்பது முதலிய செயல்கள் நிறைந்த நம் நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பு கவசம் மிகவும் அவசியம். அந்தக் கவசம்தான் தாய்ப்பால்.

அதனால் குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை கட்டாயமாக தாய்ப்பால் வழங்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாய்ப்பால் ஏன் கிடைப்பதில்லை? 

தாய்ப்பால் தாய்தான் தரவேண்டும், தாயால் பால் தர முடியாவிட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பது மிகவும் கஷ்டம், தாயின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்க வாய்ப்புகள் இல்லை

இந்தியாவில் 75 சதவீத பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை மற்றும் அறியாமை காரணமாக நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை தேடிச் சாப்பிட முடிவதில்லை. தாயாகும் முன்பே சத்துணவுப் பற்றாக்குறை. இந்த நிலையில் பிள்ளையையும் பெற்றுக் கொண்டால் தாயின் உடல் நிலை இன்னும் மோசமாகும். அதனால் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்க வழியில்லை, இது குழந்தையைக் கடுமையாகப் பாதிக்கிறது. வளர்ச்சியின்மை, பற்றாக்குறை நோய்கள் குழந்தையை ஒன்றன் பின் ஒன்றாகத் தாக்குகின்றன,

ஒரு பெண்ணுக்கு கருச் சுமக்கும் காலத்தில் சத்துணவு கட்டாயம் தேவை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் அம்மாவுக்கு இயல்பான அளவைவிட இன்னும் கூடுதலாகச் சத்துணவு தேவை. இந்த காலக்கட்டத்தில் தாய்மார்கள் நன்றாக சாப்பிடவேண்டும். ஆனால் இந்த விவரம் தெரியாத பல பெண்கள் சரியாக சாப்பிடாமல் உடல்நிலையை கெடுத்து கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பால் சுரப்பது குறையும் அல்லது தடைப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே வருமானம் உள்ள குடும்பங்களில் தாய்களுக்கு மூன்று வேளை உணவே கிடைப்பதில்லை. அவர்கள் போதுமான அளவு ஊட்டச் சத்துள்ள உணவைத் தேடிச் சாப்பிடுவது சாத்தியமில்லை.

வீட்டில் ஆண்களுக்கு எல்லாவற்றிலும் முதலிடம் என்ற பாலியல் சார்பு நிலையை நமது சமுதாயம் தொடர்ந்து கற்றுக்கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, மாமா, அப்பா, சகோதரன், கணவனுக்கு வேண்டும் என்பதற்காக பெண்கள தாமாக உணவை மறுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

நம் நாட்டில் குழந்தை திருமணங்கள் இன்றும் அதிகளவில் நடக்கின்றன. அதன் காரணமாக 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பலர் தாய்மை அடைகின்றனர். அத்தகைய இளம் தாய்மார்களில் பெரும்பாலனவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருப்பது கிட்டத்தட்ட இயல்பு ஆகிவிட்டது.. அந்த தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பலவீனம், அறியாமை ஆகியவற்றால், பிறக்கும் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்பால் கிடைக்காமல் போகிறது.

பல பெண்கள் குறிப்பாக கிராமப்புறங்களில், முதல் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிவதற்குள் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைகிறார்கள். அவர்களால் இரு குழந்தைகளுக்கும் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.

இன்று பல பெண்கள் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை பிறந்த பின் தேவையான அளவு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதில்லை. அதிகபட்சம் மூன்று மாதங்களே மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகின்றது. ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தக் காலகட்டத்தில் மற்ற உணவுகளைவிட தாய்ப்பால்தான் அதிகம் கொடுக்க வேண்டும். ஆனால் வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் உள்ள பெண்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.

தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் இளமை குறைந்துவிடும் என்ற வதந்திகள், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதன் சிரமங்கள், தாய்ப்பால் கொடுப்பதற்கான கால அளவு மற்றும் தாய்பாலை சேமித்து வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களாலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது பாதிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் தாய் விரும்பும் இடத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சிறப்பு வசதிகள் கிடைக்கின்றன. தமிழகத்திலும் தாய்களுக்கு இத்தகைய வசதிகள் கிடைக்க சிறப்பு அறிவிப்புகள் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது வெளியாகின. அவை தொடர்ந்து கவனத்தோடு அமல் செய்யப்படுவது அவசியம்.

தாய்ப்பால் கொடுக்காததால் நாடு சந்திக்கும் ஆபத்துகள்

குழந்தைகள்தான் ஒரு தேசத்தின் வருங்கால தூண்கள். அந்த தூண்கள் வலிமையில்லாமல் இருந்தால் அந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

சமீபத்தில் ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி நம் நாட்டில் ஆண்டு தோறும் ஒரு லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. பெரும்பாலான குழந்தைகள் வயிற்றுபோக்கு, நிமோனியா போன்ற எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்களால் இறக்கின்றன. இந்த குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் வழங்கியிருந்தால் அவர்களின் இறப்பை தடுத்திருக்க முடியும் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

குழந்தைகளின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்திய பொருளாதாரத்தில் ஓராண்டில் சுமார் 1,400 கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்படக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

இதை தடுக்க சிறந்த வழி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் விழிப்புணர்வை அதிகரிப்பது தான்.

தாய்ப்பால், குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் சொட்டுமருந்து போன்றது. அதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஈடு இணையில்லை. குழந்தைகளை ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்கும் மகத்தான உணவு தாய்ப்பால் மட்டுமே.

தாய்ப்பாலுக்கு பதிலாக பசும்பால் மற்றும் கடைகளில் கிடைக்கும் பால் பவுடர் போன்றவற்றை வழங்குவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவற்றைக் கொடுப்பதால் பல பிரச்சனைகள் உண்டாகலாம்.

பசும்பால், பால் பவுடரில் இருக்கும் புரதம் மற்றும் கொழுப்பு குழந்தைகளுக்கு ஒத்துகொள்ளாமல் போகலாம். ஒவ்வாமை, உடல் பருமன், ஆஸ்துமா, போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பசும்பால், பால் பவுடரில் கலப்படம் இருக்கவும் வாய்ப்புள்ளது. அது குழந்தையின் உடல்நலனை பாதிக்கும். குழந்தைகளுக்கு இது போன்ற எந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தாத பாதுகாப்பான உணவு தாய்ப்பால் தான்.

மேலும், குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெண்களின் உடல்நலனுக்கும் தாய்பால் கொடுப்பதால் நன்மை கிடைக்கும். தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே குழந்தைகள் மற்றும் தாய்களின் நலனைப் பாதுகாக்க தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்தில் பல நாடுகளில் இந்த பிரச்சனை உள்ளது. 194 நாடுகளில் 23 நாடுகளில் மட்டும்தான் 60 சதவீததிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.

எனவே சர்வதேச அளவில் தாய்பால் வழங்கும் மதிப்பீட்டை  2025ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 5,20,000 குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்படும். உலகளவில் நோய்களின் தாக்கம், மருத்துவ செலவுகள் குறையும், பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

எனவே இந்தியாவில் தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. நாம் தாய்ப்பாலில் செய்யும் முதலீடுகள் நம் நாட்டின் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்கும். அம்மாவையும் குழந்தைகளையும் வாட விட்டு விட்டு வளமான எதிர்காலத்தை எப்படி உருவாக்க முடியும்?


கட்டுரையாளர்: - நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation