2024 ஒலிம்பிக் பாரீஸ்: 2028 ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சலஸ்

பதிவு செய்த நாள் : 02 ஆகஸ்ட் 2017 08:47


லாஸ் ஏஞ்சலஸ் : 

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களை விருப்பத்தின் பேரில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்யும். போதிய கட்டமைப்பு, பொருளாதார வசதிகள் இருக்கும் நகரங்களுக்கு ஒலிம்பிக் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வகையில் வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கும், பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கும் இடையே கடும்போட்டி இருந்துவந்தது.

வாக்கெடுப்பு நடந்தால் சிக்கலாகும் என்பதால், பாரீஸ், லாஸ்ஏஞ்சலஸ் நகரங்கள் பரஸ்பரம் சுமுக முடிவுக்கு வந்துள்ளன. இதன்படி 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கை பாரீசில் நடத்துவது என்றும், 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கை லாஸ்ஏஞ்சலஸ் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லாஸ்ஏஞ்சலஸ் நகர் மேயர் எரிக் கார்செட்டி கூறும்போது, ‘ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்துள்ளதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக 1992, 2008 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் பாரீஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் போட்டியில் பங்கேற்று, போதிய வாக்குகள் இல்லாமல் தோல்விய டைந்தது. இந்தமுறை 2024ம் ஆண்டு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.