ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 2–8–17

பதிவு செய்த நாள் : 02 ஆகஸ்ட் 2017

கமலுடன் இளையராஜா நடத்திய நாடகம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

இந்த பாடல் பதிவு நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த நாளன்று வெளி­யூ­ரில் இருந்து நிறைய கல்­லுாரி மாணவ மாண­வி­கள் ஸ்டூடி­யோ­விற்கு ஷூட்­டிங் பார்க்க வந்­தி­ருந்­தார்­கள். அப்­ப­டியே இளை­ய­ரா­ஜா­வின் ரிக்­கார்­டிங் நடக்­கி­றது என்று கேள்­விப்­பட்­ட­வர்­கள் அனு­ம­தி­யு­டன் ரிக்­கார்­டிங் தியேட்­ட­ருக்­குள் வந்­தி­ருக்­கி­றார்­கள்.

இளை­ய­ராஜா கண்­டக்ட் செய்து கொண்­டி­ருக்­கி­றார். அமை­தி­யாக நின்று எல்­லோ­ரும் வேடிக்கை பார்த்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அப்­போது திடீ­ரென்று கமல்­ஹா­சன் வந்­து­விட்­டார். ரிகர்­சல் முடிந்து எல்­லோ­ரும் அமை­தி­யாக நிற்க இளை­ய­ராஜா தான் மியூ­சிக் எழு­திய பேப்­பரை கையில் எடுத்து கொண்டு கம­லி­டம் சென்று சற்று சத்­த­மாக, “கமல் சார்! எல்­லாம் நீங்­கள் சொன்­னது போல எழுதி ரிகர்­சல் செய்து விட்­டேன். சரியா இருக்கா? இல்லே வேறு எதா­வது மாத்­த­ணுமா? பார்த்­துட்டு சொல்­லுங்க” என்­றி­ருக்­கி­றார். கொஞ்­ச­மும் இதை எதிர்­பார்க்­காத கமல் சற்று சுதா­ரித்­துக் கொண்டு, “எல்­லாம் சரி­யாக இருக்­கி­றது. ஆனால், இந்த இடத்­தில் மட்­டும் கொஞ்­சம் மாற்­றுங்­கள், நான் எழு­தி­யது போல வர­வில்லை. கொஞ்­சம் மாற்­றி­னால் ெபர்­பெக்ட்­டாக வந்­து­வி­டும்” என்று ஒரு இடத்தை சுட்­டிக்­காட்டி சொல்ல, ஆர்க்­கெஸ்ட்ரா குழு­வி­ன­ருக்கு இவர்­க­ளின் நாட­கம் புரிந்­த­தால் தங்­க­ளுக்­குள்­ளேயே சிரித்­துக் கொண்­டார்­கள்.

பார்த்­துக் கொண்­டி­ருந்த மாணவ மாண­வி­க­ளுக்கு இவர்­க­ளின் நாட­கம் புரி­யா­த­தால் அதை அப்­ப­டியே நம்­பி­விட்­டார்­கள். “அய்யே, இவ்­வ­ள­வு­தானா? கமல்­ஹா­சன் சொல்­வ­தைத்­தான் இந்த இளை­ய­ராஜா செய்­கி­றா­ராக்­கும்” என்று தங்­க­ளுக்­குள் மெல்­லிய குர­லில் பேசிக்­கொண்டே கலைந்து சென்­றி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் வெளியே போகும் வரை அமை­தி­யாக இருந்­து­விட்டு, அதற்­கப்­பு­றம், கம­லும் இளை­ய­ரா­ஜா­வும் அப்­ப­டி­யொரு சிரிப்பு சிரித்­தி­ருக்­கி­றார்­கள்.

இந்த அள­விற்கு ஜாலி­யாக இருக்­கும் இளை­ய­ராஜா, இசை விஷ­யத்­தில் எப்­போ­துமே மிக­வும் கண்­டிப்­பா­ன­வர். இசை­யில் மட்­டும் ஏதா­வது தவறு வந்­து­விட்­டால் பொறுத்­துக் கொள்­ள­மாட்­டார் –  அது யாராக இருந்­தா­லும்! இதை எதற்­கா­கச் சொல்­கி­றேன் என்­றால், ஒரு முறை தனது அண்­ண­னான பாஸ்­கர் மீதே கோபப்­பட்­டி­ருக்­கி­றார்.

ரிக்­கார்­டிங்­கின் போது காங்கோ என்ற இசைக்­க­ரு­வியை பாஸ்­கர் வாசிப்­பார். சில சம­யம் அவ­ரது இஷ்­டப்­படி வாசித்து விடு­வார். அதை வேண்­டாம் என்று இளை­ய­ராஜா சொன்­னா­லும், தம்­பி­தானே என்ற எண்­ணத்­திலோ அல்­லது அவரை வேண்­டு­மென்று வெறுப்­பேற்­றவோ மீண்­டும் தவ­றாக வாசிப்­பார். இளை­ய­ரா­ஜா­விற்கோ கோபம் தலைக்­கே­றி­வி­டும். சத்­தம் போட்டு வெளியே அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

இந்த சம்­ப­வம் போலவே நடந்த இன்­னொரு சம்­ப­வத்­தைப் பற்றி இளை­ய­ரா­ஜாவே சொன்­னது...

“ஒரு சம­யம் ஒரு பாடல் பதி­விற்கு ஓபோ என்ற ஒரு இசைக்­க­ரு­வி­யை­யும் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தேன். அதற்­காக கணே­சன் என்­ப­வர் வாசிக்க வந்­தி­ருந்­தார். அவரை நாங்­கள் 'கணே­சண்ணா' என்­று­தான் அன்­போடு அழைப்­போம். நான் இசை­ய­மைப்­பா­ளர் என்ற நிலைக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக கிடார் வாசித்த காலத்­தில் என்­னோடு எத்­த­னையோ upக்கார்­டிங்­கில் வாசித்­தி­ருக்­கி­றார். ஒரே டாக்­சி­யில் போய் வந்­தி­ருக்­கி­றோம்.

இந்த பாடல் பதி­வின்­போது வரும் அந்த பிட் மியூ­சிக், நான் எதிர்­பார்த்­த­து­போல் வர­வில்லை. இருந்­தா­லும் அந்த இடத்­தில் நான் எதிர்­பார்த்­த­படி வர­வேண்­டும் என்று பல­முறை கேட்­டும், ரிகர்­சல் கொடுத்­தும் வர­வில்லை. கோவர்த்­தன் மாஸ்­ட­ரும் சில முறை ரிகர்­சல் கொடுத்து “இது எப்­படி இருக்கு என்று கேளு” என்­றார். எனக்கு நூற்­றில் இரு­பத்து ஐந்து சத­வீ­தம்­கூட சரிப்­ப­ட­வில்லை. கடை­சி­யில் “அவர் வாசிக்­க­வேண்­டாம். போகட்­டும்” என்று சொல்­லி­விட்­டேன்.

எத்­த­னையோ கால அனு­ப­வம் உள்­ள­வர். எவ்­வ­ளவோ இசை­ய­மைப்­பா­ளர்­க­ளைப் பார்த்­த­வர். இதெல்­லாம் எனக்கு பெரி­தா­கப்­ப­ட­வில்லை. இதில் நான் நினைத்­த­படி வர­வில்லை என்­றால், வேண்­டாம்... எதற்கு அந்த வாத்­தி­யம்? இது­தான் என் பக்க நியா­யம்.

அவர் கொஞ்ச நேரம் அமை­தி­யாக வாடிய முகத்­து­டன் இருந்­து­விட்டு டாக்சி வந்­த­தும் வாத்­தி­யத்தை எடுத்­துக்­கொண்டு கிளம்­பி­விட்­டார். அப்­போது வருத்­தப்­ப­டாத என் மனம், பல நாட்­க­ளுக்­குப் பிறகு நினைத்து நினைத்து வருந்­தி­யது.

தன் இசை­யில் 'காம்ப்­ர­மைஸ்' என்ற பேச்­சுக்கே இடம் கிடை­யாது, கூடப் பிறந்த அண்­ணனே ஆனா­லும் தவ­றாக வாசித்­தால் வெளியே போய்­விட வேண்­டி­ய­து­தான் என்­பதை இசைக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ரும் தெரிந்து வைத்­தி­ருந்­தார்­கள். இத­னால் சரி­யாக வாசிக்க வேண்­டும் என்ற எண்­ணத்தை இவர்­க­ளுக்­குள் ஏற்­ப­டுத்தி ஒரு ஒழுக்­கத்­தைக் கொண்­டு­வர செய்­தி­ருந்­தார் இளை­ய­ராஜா.