கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 87

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2017
எம்.ஜி.ஆராக நாம் இல்லையே என்று ஏங்குபவர்களில் கவனத்திற்கு!

எம்.ஜி.ஆராக நாம் இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்? குறிப்பாக, மிதமிஞ்சிய செல்வாக்கு உள்ள சினிமா வர்க்கத்திற்கும் அதில் அரிதாரம் பூசிய அல்லது பூசும் கலைஞர்களுக்கும், அஸ்திவாரம் இல்லாமல் அரசியல் கட்டடங்கள் எழுப்ப நினைப்பவர்களுக்கும், 'எம்.ஜி.ஆர்'. என்ற பெயர், வானம் வசப்படும் என்பதைக் காட்டும் ஒரு சின்னம்.  

அவருடைய பிராபல்யம் யாருக்கு வரும்? அதன் அடிப்படையில் அவருக்கிருந்த அரசியல் செல்வாக்கு யாருக்கு கிடைக்கும்? பிறந்தால் எம்.ஜி.ஆரைப் போல் பிறக்க வேண்டும்... இருந்தால் அவரைப்போல் புகழின் உச்சியில் இருக்க வேண்டும்... ‘‘மாபெரும் சபைகளில் நான் நடந்தால் எனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்.’’  

உடல் நலமில்லாத போதும், பேசுவதற்குக் கூட அவர் கஷ்டப்பட்டபோதும் மூன்று வருடங்கள் அவரை முதல்வராக மக்கள் கொண்டார்களே, கொண்டாடினார்களே!

‘‘பெயர்ல என்ன இருக்கு, விளம்பரம் வேதனை தரும் ஒரு சோதனை. ஒருத்தனுக்கு புகழ்மேல் வெறி ஏற்பட்டுட்டா, அது அவனையே அழிச்சிடும். இப்போ நான் விருப்புவெறுப்புகள் இல்லாத கவிதைகள் எழுதிக்கிட்டிருக்கேன்,’’ என்று  'ஆனந்த ஜோதி'யில் எம்.ஜி.ஆர். பேசிய வசனம், வெறும் வசனம்தான் என்பது யதார்த்தத்தை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

‘பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்’   என்பதுதான் நவீன காலத்தின் தாரக மந்திரம். விளம்பரம் இல்லாதவன் உயிரில்லாதவனுக்கு சமம் என்பது ஊடகங்களில் இருக்கும் கடைசி ஆளுக்கும் புரியும்!

ஆனால்,  எம்.ஜி.ஆர். என்றால் வரம்புகள் இல்லாத வசியத்தின் சமத்காரம் மட்டும்தானா? அவர் தொட்ட சிகரங்கள் மட்டும்தான் எம்.ஜி.ஆர் என்றால், அவர் பரிதவித்த பள்ளத்தாக்குகள் யார்? இலக்குகள்தான் எம்.ஜி.ஆர். என்றால் இடையில் வந்த பாலைவனங்கள் யார்?

எம்.ஜி.ஆராக ஆக நினைக்கும் நபர்கள், அரிதாரம் பூசும் வெளிச்சத்தில் மட்டும் இருக்க நினைப்பார்கள், அரியணை மயக்கத்தில் மட்டும் இருப்பார்கள். அவர் கடந்து வந்த பாதைகள் கண்ணுக்குத் தெரியாது.

'ஆனந்த ஜோதி'யில் சிறுவன் கமல்ஹாசனைப் பார்த்து எம்.ஜி.ஆர். பேசும் கட்டம்.

‘‘பாலு...எங்கப்பா எவ்வளவோ சம்பாதிச்சார். அதெல்லாம் எப்படியோ போயிடுச்சு. எங்கம்மா சொல்லிக்கொடுத்த நல்லதெல்லாம்தான் என் கூடவே இருக்கு. பாலு, நீயும் பெரியவங்க சொல்ற நல்லதெல்லாம் மனசுல வச்சு அதுபடியே நடக்கணும்,’’ என்ற வார்த்தைகள், படத்தில் வரும் டிரில் மாஸ்டர் ஆனந்தனுக்கு மட்டும் சொந்தமானவை இல்லை! அவை படத்தின் கதை, வசனகர்த்தா ஜாவர் சீதாராமனின் கற்பனையில் உதித்த வசனங்களும் இல்லை. அவை, திரைக்கதையின் இடையிலே வெளியிடப்பட்ட எம்.ஜி.ஆரின் சுயகதை.  எம்.ஜி. ராமச்சந்திரன் என்ற நடிகர், தன்னுடைய தந்தை மெலகத் கோபால மேனன் குறித்தும் மருதூர் சத்யபாமா என்ற தாயைக் குறித்தும் கூறியவை.

திருச்சூரில் சட்ட அதிகாரியாக இருந்த கோபால மேனன், ஒரு வழக்கில் சிக்கி சமூக பகிஷ்காரத்திற்கு உள்ளானதும், கடைசியில் கண்டி தேயிலைத் தோட்டத்தில் தஞ்சம் அடைந்ததும் எம்.ஜி.ஆர். பிறப்பதற்கு முன் நடந்த சங்கதிகள். அதைத்தான் தன்னைப் பற்றிய வசனத்தில், ‘அப்பா சேர்த்த சொத்தெல்லாம் எப்படியோ போச்சு’ என்றார்.

எம்.ஜி.ஆர். பிறந்த இரண்டு ஆண்டுகளில் கோபால மேனன் மறைந்துவிட்டார். அப்போது அவருக்கு என்ன வயது? அதெல்லாம் கடந்த காலத்தில் கரைந்துபோன செய்திகள். அவர் கண்டியில் கல்லூரி முதல்வராக இருந்தார் என்பதெல்லாம் இன்றுவரை நிரூபணமாகவில்லை!

'ஆனந்த ஜோதி' வந்த அறுபதுகளில் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் ஒரு உன்னத நட்சத்திரம். தான் பிறப்பதற்கு முன்பு, ஏன், தன்னுடைய தாய், தன் தந்தையை மணப்பதற்கு முன்பே  தந்தை இருந்த நல்ல நிலையை அவரால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது! மனிதாபிமானம் இல்லாத உறவினர்களின் புறக்கணிப்புகளைத் தாண்டி, தன்னுடைய தாயார் தனக்குச் சொல்லித்தந்த பண்புகளை நினைத்து அவரால் மகிழ முடிந்த காலம் அது. அது உண்மையாகவே போற்றுதலுக்கு உரியதுதான். கஷ்டப்படும் காலத்தில் நல்ல குணங்களைக் காப்பவர்கள்தானே சிறந்தவர்கள்!

ஆனால், சமூகத்தின் கடைக்கோடியில் சின்னஞ்சிறுவனாக  தனுஷ்கோடியில் இறங்கிய வேளை...பல அவலங்களுக்கு இடையே கும்பகோணத்தில் சிறு பையனாக வாழ்க்கையைத் தொடங்கிய தருணம்....வயிற்றை கழுவுவதற்கு கூட வக்கில்லாதவர்களுக்கு படிப்பு ஒரு கேடா என்று மூன்றாம் வகுப்பிற்குப் பிறகு பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த கட்டம்... இவையெல்லாம் நல்ல நிலை அடைந்தபிறகு சொல்லிக் கொள்வதற்கான, கண்ணீரை வரவழைக்கும் நல்ல கதைகளாக இருக்கலாம்...ஆனால் வாழ்ந்து பார்ப்பதற்கு அவை மிகவும் கடினமானவை... சுயகவுரவத்தையும் தன்னம்பிக்கையையும் தகர்க்கக்கூடியவை.

தன்னுடைய உச்சநிலையிலிருந்து துச்ச நிலையில் இருப்பவர்களை எம்.ஜி.ஆர். சில பொழுது நேரடியாக நெருங்கிப்பார்த்தார் என்றால், அவருடைய இந்த நிதர்சனமான வறுமை அனுபவங்கள் ஒரு முக்கிய காரணம். இளம் நாடக நடிகனாக தனக்கிருந்த மனோநிலையைக் குறித்தெல்லாம் எம்.ஜி.ஆர். தனக்கே உரிய பாணியில், ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற சுய வாழ்க்கைத்தொடரில் விவரித்திருக்கிறார்.

சின்ன வயதில், ஒரு நடிகன் என்ற முறையில் தனக்கிருந்த இரண்டுங்கெட்டான் சிந்தனைகளைப் பற்றி எம்.ஜி.ஆர். எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., வெளிப்படுத்தும் கருத்துக்கள்,   மூக்கை நேரடியாகத் தொடாமல் தலையைச் சுற்றித்தொடும் பாணியில் இருக்கலாம்....ஆனால் பல விஷயங்களை மனதில் கடைந்து கடைந்து ஒரு முடிவுக்கு வருபவர் எம்.ஜி.ஆர். இதற்கு, 1952ல் நடந்த, எனக்குத்தெரியவந்த ஒரு சம்பவம் சான்று.

சந்திரா டாக்கீஸில், மதுரை கலை அன்பர்கள் என்ற சங்கம் தன்னுடைய முதலாம் ஆண்டு கலைவிழாவை ஆகஸ்ட் 3, 1952ல் கொண்டாடியது. பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ். கடவுள் வாழ்த்துப் பாடினார். நடிகர் மனோகர் விழாவைத் தொடங்கி வைத்தார். எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

திரைத்துறையில் தி.க., தி.மு.க. பிரசாரம் புகுந்திருந்த காலகட்டம் அது. விழாவின் தொடக்கத்தில் பேசிய நடிகர் மனோகர் (அப்போது அவர் கதாநாயக வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்), ‘‘கலை என்பது தெய்வீகமானது. கலைஞன் கலையின் வாயிலாக கடவுளைக் காணலாம். இது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  கலையின் பெயரை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்டவரையோ,  மதத்தினரையோ குறைத்துக் கூறுவது வெறுக்கத்தக்கது.’’

கடைசியில் பேசிய எம்.ஜி.ஆர்., இந்த கலைக் கொள்கையை மறுத்துப்பேசினார். ‘‘தெய்வீகத் தன்மையில் கலையை வைத்துவிட்டால் அதனால் மக்களுக்குப் பயனில்லை.  கலைக்கு இப்படிக் கரை கட்டக்கூடாது. கலைஞர்கள் மக்கள் மத்தியிலே நெருங்கிப் பழக வேண்டும். நாட்டு மக்களுக்கு எது தேவை, சமூக சீர்திருத்தத்திற்கு எது தேவை என்று நிர்ணயித்து, அது படத்தின் மூலம் கலையாக வரவேண்டும்,’’ என்றார் எம்.ஜி.ஆர்.

பின்னாளில் அவர் செய்ததைப் பார்க்கும் போது, இந்த கருத்துக்கள் அவருடைய சுயமான சிந்தனையின் பலத்திற்கும் தொலைநோக்கிற்கும் சாட்சியமாக நிற்கின்றன. இந்த மாதிரி  குணங்கள் எத்தனை பேருக்கு இருக்க முடியும்?

எம்.ஜி.ஆராக நாம் இல்லையே என்று ஏங்குபவர்கள், எம்.ஜி.ஆரைப்போல் வாழ்க்கையில் முப்பது முப்பத்தைந்து வயது வரை துணைப்பாத்திரங்களில் நிச்சயம் துவண்டு கிடக்க விரும்பமாட்டார்கள்! இத்தகைய ஒரு சூழலிலே, தன்னை  சக நடிகனாகவும், சமமாகவும், தம்பியாகவும் மதித்த கதாநாயக நடிகர் எம்.கே. ராதாவின் நட்பு கிடைத்தது. வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த ஏற்றமும் இல்லாத வேளையிலும் இன்னொருவர் மதிக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம், எவ்வளவு ஆனந்தத்திற்கு உரிய விஷயம்! அதனால்தான், ஊரே உயர்த்தும் நட்சத்திரமாகத் தான் உயர்ந்த பின்னும் வெளிப்படையாக எம்.கே.ராதாவின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார் எம்.ஜி.ஆர். மதிக்க வேண்டியவர்களை எல்லோரும் காணும் வகையில் திருவடியில் பணிந்து மதிக்க வேண்டும் என்று உலகத்திற்கு காட்டுவதில், எம்.ஜி.ஆர். உண்மையாகவே வாத்தியார்தான்! இன்னொரு முறை, பொது மேடையிலே முதல்வர், கவர்னர் ஆகியோர் முன்னிலையில், சினிமா பிதாமகர் என்று சொல்லத்தக்க சாந்தாராமின் காலில் எம்.ஜி.ஆர். விழுந்து வணங்கினார்.  கலையை தெய்வீகம் ஆக்காதீர்கள் என்றெல்லாம் ஒரு காலத்தில் வாதாடியவரின் உள்ளத்தில் கலையைக் குறித்து ஓர் ஆராதனை உணர்வு இருந்தது என்பதைத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. உன்னதமான ஒரு நிலைக்கு செல்பவனின் இதயத்தில் உன்னதங்கள் குறித்து ஒரு பவித்திர எண்ணம் இருக்கத்தான் செய்யும். அப்படி இல்லாதவன் சிகரத்திற்குச் சென்றால், சிகரத்திற்கே தலைகுனிவு ஏற்படும்!  

ஒருவன் தன்னை அறிந்தால் உயரலாம் என்ற தத்துவத்தை எம்.ஜி.ஆர். நடைமுறையில் கொண்டுவந்திருந்தார். 'ஆலயமணி'யில் சிவாஜியை இயக்கிக்கொண்டிருந்த கே. சங்கர், அதே நேரத்தில் 'பணத்தோட்ட'த்தில் எம்.ஜி.ஆரை டைரக்ட் செய்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து ஒரு குறிப்பிட்ட ஷாட்டை சங்கர் மீண்டும் மீண்டும் எடுத்துக்கொண்டிருந்தார். இடைவேளையில் சங்கரின் தோளில் கைபோட்டார் எம்.ஜி.ஆர். அதை ஆபத்தான ஒரு சமிக்ஞை என்று சிலர் கூறுவதுண்டு, ஆனால் அது சங்கரை பாதிக்கவில்லை! எம்.ஜி.ஆர். கூறினார் -- ‘‘சங்கர்...யாரையோ நினைச்சு ஷாட் எடுக்காதீங்க. இந்த ராமச்சந்திரன் செய்யக்கூடியதை அவன்கிட்ட கேட்டு வாங்குங்க...’’

'மலைக்கள்ளன்', 'பெற்றால்தான் பிள்ளையா', 'எங்க வீட்டுப் பிள்ளை' முதலிய படங்களில், தனக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் திறமை இருப்பதை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தினார். ஆனால், பொதுவாக, தனக்காக அவர் அமைத்துக்கொண்ட அரசியலும் சினிமா கலந்த பிரத்தியேக பிம்பத்திற்கு இந்த அளவு நடிப்பு போதும் என்று தனது நடிப்பிற்கே வரம்பு கட்டிக் கொண்டவர்போல் எம்.ஜி.ஆர். காணப்பட்டார். அவரது பாதையில் செல்ல நினைக்கும் உண்மை நடிகர்கள் இதற்குத் தயாராக இருப்பார்களா?

எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால், அடுத்து அடுத்து அவர் முறையாக மணந்த இருவர் மரணம் அடைந்தார்கள். கணபதி பட் என்ற நடிகரை மணந்திருந்த வி.என்.ஜானகி, எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியாக அவருக்கு அமைந்தார். அவர்கள் இல்லம், வருவோர் போவோர்க்கு அன்னசத்திரமாக விளங்கியது. ஆனால் எம்.ஜி.ஆராக உயர நினைக்கும் பலர், எச்சில் கையால் ஈயோட்டமாட்டார்கள்.

ஜானகிக்கு முதல் திருமணத்திலிருந்து சுரேந்திரன் என்ற மகன் இருந்தார், ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே இருப்பான்’ என்று எம்.ஜி.ஆர் பாடியது, திரைப்படத்தோடு நின்றுபோனது. இந்த ஏக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததை, அவருக்கு கதை, வசனம் எழுதிய அவருடைய அபிமானி ரவீந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர்., நடித்த படங்களில், அவருடைய பச்சாதாபங்கள் பொதுவாக தலைகாட்டியதில்லை. சுமார் அறுபது வயதிலும் 'உலகம் சுற்றும் வாலிபன்' எடுத்து, மகோன்னத வெற்றி அடைந்தார்.

ஆனால் அவர் எல்லாம் தெரிந்த நாயகரோ, தோல்விகள் இல்லாத நாயகரோ அல்ல. அவர் நடித்த கடைசி படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டிய'னில், ஆளும் கட்சியை ஏகமாகத் தாக்கியிருந்தார். ஆனால் படம் வெளியான போது எம்.ஜி.ஆரே ஆட்சிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் படம் அப்படியே வந்தால் அவர் தன்னையே தாக்கிக்கொள்வதுபோல் ஆகாதா? மீண்டும் எடிட்டிங் மேஜையில் அமர்ந்து எதிர்ப்பு வசனங்களை கத்தரித்துத் தள்ளினார்கள். அவருடைய இந்த நூற்றாண்டிலாவது அவரைப் பற்றிய சரியான தகவல்கள் --குறிப்பாக இதுவரை தெளிவில்லாத விஷயங்களில் -- வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

(தொட­ரும்)