வளையல் வியாபாரிக்கு தந்த வரம்

பதிவு செய்த நாள் : 29 ஜூலை 2017

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருநறையூர் என்னும் அழகிய ஊர். இந்த ஊரின் காவல் தெய்வமாக ஆகாச மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். எல்லையம்மனான இவள் இங்கு ஜோதி வடிவில் காட்சியளிக்கிறாள். இந்த மாரியம்மன் 600 வருடங்களுக்கு முன்பே இங்கு வந்ததாக கூறப்படுகிறது. முன்னர் கூரையோடு இருந்த இக்கோவில் சமீபத்தில் பல சுதை சிற்பங்களுடன், கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த ஊர் தலபுராணம் சுவை மிகுந்தது.

திருநறையூர் என்னும் நாச்சியார்கோவிலில் முன்னர் வளையல் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மாரியம்மன் பக்தரான அவர் வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு வளையல்கள் வைத்து வழிபாடு நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


ஒரு முறை, உடல் நலம் குன்றியதால் அவரால் சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வியாபாரி மாரியம்மனை தரிசிக்க முடியவில்லையே, அவளுக்கு வளையல்கள் அணிவிக்க முடியவில்லையே என மனம் வருந்தினார். பெருந்துயரத்தில் ஆழ்ந்த அவர், மாரியம்மனை பார்க்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். தன் பக்தனுக்காக ஆகாய மார்க்கமாய் சமயபுரத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன், திருநறையூருக்கு வந்து, அவன் முன்பு காட்சி அளித்தார். சாஷ்டாங்கமாக வணக்கிய வளையல் வியாபாரி, வளையலை மாரியம்மனுக்கு அணிவித்தார்.

தனக்காக வந்த அம்பிகையிடம் வியாபாரி ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் அவர் இருக்கும் ஊரான திருநறையூர் என்னும் நாச்சியார்க்கோவிலுக்கு அம்பிகை வந்து மக்களுக்கு நல்லாசி புரியவேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். அம்பிகையும் அவ்வாறே ஆகட்டும் என வாக்குறுதி அளித்தாள்.

தன் பக்தனுக்கு செய்த சத்தியத்திற்காக அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுத்து வருகிறாள் என்பது ஐதீகம். ஆகாய மார்க்கமாக வருவதால், இவருக்கு ஆகாச மாரியம்மன் என்னும் பெயர் வந்தது.

வளையல் வியாபாரிக்கு வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாரியம்மன் இந்த தலத்திற்கு வருவாள். அம்மன் வருகை தரும் தினத்திலிருந்து உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. இவள் வருகையின் போது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு களை கட்டுகிறது.
10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் நாச்சியார்கோவிலுக்கு வருகிறார்கள். இந்த திருவிழாவிற்காக மாரியம்மனை தர்ப்பை புல்லால் ஒவ்வொரு வருடமும் புதியதாக உருவாக்குகின்றனர்.

சமயபுரம் மாரியம்மனைப்போல் சிவந்த முகம், கூரிய பற்கள், அகண்ட விழிகள் சர்வ ஆபரணங்களுடன் அம்மன் அலங்கரிக்கப்படுகிறாள். நாதஸ்வர மேளம் முழங்க, புஷ்ப பல்லக்கில் ஏறி அமர்ந்து திருநறையூருக்கு புடைசூழ செல்வாள். அங்கு அவளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள்.

10 நாட்கள் அங்கேயே தங்கும் இந்த தர்ப்பையால் செய்யப்பட்ட மாரியம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் அம்மனுக்கு சேஷசயன அலங்காரம், மதன கோபால அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், வீற்றிருந்த திருக்கோலம், மஹிஷாசுர மர்த்தினி, நின்றிருந்த திருக்கோலம், ராஜராஜேஸ்வரி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

ஒரு பெண் குழந்தை படிப்படியாய் வளர்ந்தால் எப்படி அலங்காரம் செய்வோமோ அதேபோல் ஒவ்வொரு நாளும் அம்மன் வளர்ச்சி அடைவதுபோல் அலங்காரம் செய்வார்கள். முதல் நாளில் சிறிய திருமேனியுடன் காட்சியளிக்கும் மாரியம்மன் கடைசி நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தின்போது வளர்ந்த திருமேனியுடன் காட்சியளிப்பாள்.
இந்த 10 நாட்களும் மாரியம்மன் திருமேனி முழுவதும் வாசனை திரவியங்களும், எலுமிச்சை பழ மாலையும் அணிவித்து, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாய் வழங்குவர். பின்னர் 10ஆம் நாளன்று மாரியம்மனுக்குப் பக்தர்கள் பால் காவடி, அலகு காவடிகள் எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

திருமால் சார்பாக தன் தங்கையான பார்வதிதேவிக்கு பிறந்த வீட்டு சீதனம், திருநறையூர் நம்பி திருக்கோவிலில் இருந்து ஆகாச மாரியம்மனுக்கு வழங்கப்படும். சீதனப் பொருள்களாக பட்டுப்புடவை, மாலை போன்ற மங்கலப் பொருட்கள் மாரியம்மன் பாதத்தில் வைத்து, பின்னர் அவளுக்கு அதனை அணிவிப்பார்கள். இதைத்தவிர பக்தர்கள் பலர் பட்டு வஸ்திரங்கள், மாலைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிப்பார்கள். 
10 நாள் திருவிழா முடிந்தவுடன், மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் சமயபுரம் புறப்படுவாள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருநறையூர் வருவதால், அவள் சமயபுரம் புறப்படும்போது மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுக்கின்றனர்.

வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பிகை காட்சியளிக்கிறாள்.

நாச்சியார்கோவிலுக்கு செல்லும் வழி

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ளது நாச்சியார்க்கோவில்.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

பாசஞ்சர் ரயிலில் சென்றால் திருநாகேஸ்வரத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் செல்லலாம்.

அருகிலுள்ள கோவில்கள்

திருநறையூர் நம்பி திருக்கோவில்

ஒப்பிலியப்பன் திருக்கோவில்

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி திருக்கோவில்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோவில்


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Prasanth 30-07-2017 05:45 AM
Good one......

Reply Cancel


Your comment will be posted after the moderation


THANIKACHALAM 30-07-2017 06:23 PM
மிகவும் சிறப்பாக உள்ளது. எனது வாழ்த்துக்கள்

Reply Cancel


Your comment will be posted after the moderation


SK babu 30-07-2017 11:17 PM
Nice.....congrats...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Siddharth 31-07-2017 06:24 AM
Very useful article. Super.expecting more. Congrats.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Divya 31-07-2017 06:34 AM
Nice article Dinesh..

Reply Cancel


Your comment will be posted after the moderation