இந்தியாவில் மொபைல் டேட்டா வர்த்தகம்

பதிவு செய்த நாள் : 26 ஜூலை 2017

முன்பு ஒரு காலத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்பட்டு வந்த செல்போன்கள் இன்று ஏராளமான செயல்களை செய்ய உதவுகிறது வீடியோ, ஆடியோ, வாட்ச்ஆப், பேஸ்புக், வங்கிப்பணி என செல்போன் பயன்பாடுகள் விரிவடைந்துள்ளது.

செல்போன் நம்பர்களும் மெல்ல மெல்ல நம் அடையாள்  மாறிக்கொண்டு வருகிறது.

முன்பு ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனி அடையாள அட்டை இருந்தது அதற்கு என தனி எண் இருந்தது. வாக்காளர்அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, பிறப்புசான்றிதழ், ஓட்டுனர் உரிமம் என இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம். நம்மை பற்றி மற்றவர்கள் எளிதில் தகவல்களை அறிய மிகவும் கடினமாக இருந்தது. அதை போல் வங்கிகணக்கு முதல் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தது.

இன்றைய தலைமுறைகளில் நண்பர்கள், உறவினர்கள் என யாரும் இல்லாமல் இருந்து விடுவார்கள். ஆனால் மொபைல்  போன்கள் இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைவந்துவிட்டது. அதிலும் நவீன மொபைல்கள், விதவிதமான மொபைல் ஆப்ஸ்கள் என வியப்பூட்டும் அளவிற்கு வந்து குவிகின்றன.

மொபைல் போன்களில் மின்னஞ்சல் சேவை தொடங்கி, வாட்ச்ஆப், பேஸ்புக், வீடியோக்கள், தகவல்தேடல், செய்திவாசிப்பு, பயணச்சீட்டு முன்பதிவு, வங்கிப்பணப்பரிமாற்றம், சமூகவலைத் தளத்தகவல் பரிமாற்றம், மின்வணிக முறையில் பொருள்வாங்கல் போன்ற  இணையம் வழிச்சாத்தியமாகும் அனைத்துச் சேவைகளையும் மொபைல்போன் வழியாக பெறமுடிகிறது. இத்தகைய பணிகளையும் சேவைகளையும் மொபைல்போனில் இயங்கும் மொபைல்ஆப் எனப்படும் மொபைல் அப்பிளிக்கேஷன்கள் சாத்தியம் ஆக்குகின்றன.

பாட்டுக்கேட்க, படம்பார்க்க, பொருட்கள்வாங்கவிற்க, வங்கிக்கணக்கு, கால்டாக்சிக்கு ஆப் என எங்கெங்கும் ஆப், எதிலும் மொபைல் ஆப். எதற்கெடுத்தாலும் ஆப் என மொபைல் அப்பிளிக்கேஷன்கள் பெருகிவிட்டன. 'சில அப்பிளிக்கேஷன்களை இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம்.

டிஜிட்டல் இந்தியாவில் நாளுக்குநாள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய மிகப்பெரிய டேட்டாபேஸ் செல்போன் நம்பர்தான். தினசரி மொபைல் டேட்டாவின் பயன்பாடும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது அதிகபட்சமாக ஒருநாளைக்கு 1 GB வரை டேட்டாவை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்து  உள்ளது.

இந்நிலையில் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி மனித இயல்பாகி விட்டது. ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி என அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறையாகி விட்டது என கூறலாம்.

உலக அளவில் தொழில்நுட்ப வருகை காரணமாக ஆன்லைன் வழியாக பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமானவை நல்ல காரணங்களுக்காக பயன்படுத்தினாலும் ஹேக்கிங் செய்து தனிநபர் அந்தரங்கம் மற்றும் பல்வேறு வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவது போன்ற சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 120 கோடி மக்கள் தொகையில், 100 கோடிக்கும் அதிகமானவர்கள் மொபைல் இணைப்புகளை பெற்றுள்ளனர். கேஸ்கனெக்சன், சிம்கார்டுவாங்க, மானியம்பெற, பான்கார்டுமுதல் வங்கிச் சேவை உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை இணைக்க வேண்டியதுள்ளது.

.இப்போது  ஆதார் எண்ணை தமிழகஅரசு வெளிப்படையாக பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. நம் மொபைல் நம்பரை வைத்துதான் ஆதார்எண்ணில் எந்த மாற்றமாக இருந்தாலும் ஆன்லைனில் எளிதாக மாற்ற முடியும். வங்கிச் சேவை மற்றும் ஆன்லைன் நிதிப் பரிமாற்றத்தின் போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்க மொபைல் நம்பரை கட்டாயம் தெரிவிக்க வேண்டியதுள்ளது. இதில், போலியாக அடையாளச் சான்று அளித்து குறுக்கு வழியில் சிம் கார்டு பெற்று நிதி மோசடிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தற்போது பயனில் உள்ள தங்களது மொபைல் எண்னை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் ஒரு மொபைல் எண்ணின் உரிமையாளரை எளிதாக கண்டறியலாம் என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்பொது எல்லாம் மொபைல் நம்பரை வைத்துதான் நூதன முறையில் பலமோசடியில் ஈடுப்படுகின்றனர். உங்கள் நம்பரை வைத்து உங்கள் தனிப்பட்ட தகவல் அனைத்தும் எளிதாக திருடிவிடுவார்கள்.

உங்களுக்கு லோன்வேண்டுமா என்பது தொடங்கி, ஹோட்டல்அறை புக்கிங், டூர்பேக் கேஜ் என எல்லாவற்றுக்கும் போன் மூலம் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது.

ஏதோ ஒருசமயத்தில் ஒருஊரில் தங்குவதற்கு அறைவேண்டும் என்று தேடியிருப்பீர்கள்.
சில நிமிடங்களிலேயே இந்த ஊரில் அல்லது பகுதியில் ஓட்டல் அறைகள் உங்கள் பட்ஜெட்டுக்குள் வாடகைக்கு கிடைக்கும் என எஸ்.எம்.எஸ் வரும். இதுபோல், நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருளை வாங்க. நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தேடியிருப்பீர்கள். இதுபற்றி எஸ்.எம்.எஸ் அல்லது இமெயிலில் ஆஃபர்கள் வரும். இந்த தகவல் எல்லாம் எப்படி நமக்கு வருகிறது என்று நினைப்பீர்கள். ஆனால் நாம் அதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளுவதில்லை.

இதுபோன்ற எஸ்.எம்.எஸ் எப்படி நமக்குவரும் என்று யோசித்து பார்த்தால் எல்லாமே டேட்டா புரோக்கர்கள் வேலைதான் எனத் தெரியவரும்.
நீங்கள் ஆன்லைனில் யாரோ ஒருவரிடம் கொடுக்கும் தகவல் இந்த டேட்டா புரோக்கர்களால் மற்றவர்களுக்கு அடுத்த சிலநிமிடங்களில் விற்கப்படுகிறது. உங்கள் போன்நம்பர், இ-மெயில், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவலும் ஒருவரிடம் அல்லது பலபேரிடம் விற்று பணமாக்கப்படுகிறது.  இதுபோன்ற ஒருகும்பல் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் தகவல்கள் திருடி அல்லது சேகரித்து விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறது.

இது போன்ற சம்பவம் மொபைல் ரீசார்ஜ் கடைகளிலும் நடக்கிறது. நாம் கடையில் மொபைல்களுக்கு ரீசார்ஜ் செய்யும் பழக்கம் உடையவர்கள். அப்படி ரீசார்ஜ் செய்யும் போது நாம் மொபைல் எண்ணை கொடுப்போம். அங்கு ஒரு பெரிய நோட்டில் மொபைல் நம்பர்கள் எழுதப்படும். அப்படி பல லட்சம் நம்பர்கள் அந்த நோட்டுகளில் எழுதப்பட்டிருக்கும். அந்த நம்பரை கார்ப்பரேட்கள் வாங்கி விடுவார்கள் அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு டேட்டா சப்ளை செய்யும் ஏஜென்சிகளுக்கு இந்த நம்பர்கள் எல்லம் பணமாக்கப்படுகிறது.

இப்போது இணையதளம் மற்றும் சமூகவலைதள கணக்கும் கொண்ட உங்கள் தகவல்கள் திருடப்படுகிறது. உங்க பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து அதில் இருந்து பிறந்ததேதி, செல்போன் நம்பர் மற்றும் பெயரை எடுத்துக் கொள்வார்கள். பின் செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து காவல்நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கை திறப்பார்கள். பேஸ்புக் தகவலை வைத்து போலியான பான்கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்குவார்கள்.

வங்கி ஆன்லைன் பாஸ்வேர்ட் மறந்து விட்டதாக கூறி, புதிய பாஸ்வேர்ட் கேட்பார்கள். வங்கிகள் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் பாஸ்வேர்ட் ரீ-செட்டிங்பார்மட்டை கொண்டு புதிய பாஸ்வேர்டை உருவாக்குவார்கள். பிறகு உங்கள் வங்கிகணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணத்திருட்டை எளிதாக முடித்து விடுவார்கள்.

இன்றைய சூழலில் கார்டுகள் மூலமும், ஆன்லைனிலும் நடைபெறும் மின்னணு பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.

இத்தகைய சூழலில் நடைபெறும் மோசடி, முறைகேடுகள், அனுமதியின்றி நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளால் வாடிக்கையாளருக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. வங்கிக் கணக்குகளுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டிய பொறுப்பு வங்கிகளின் மீது சுமத்தப்படுகிறது. மொபைலுக்கு வங்கிகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பும்போது அதற்கு வாடிக்கையாளர் உடனடியாக பதிலளிக்கும் வசதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்என்றும் அனுமதியின்றி நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்துவங்கிகளின் இணைய தளத்தில் முகப்பு பக்கத்திலேயே புகார் அளிக்க அனுமதிக்க வேண்டும். ஃபோன் பேங்கிங், எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல், கால்சென்டர் உள்ளிட்ட வழிமுறைகளில் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இதுபோன்ற ஹேக்கிங்கை தடுக்க டேட்டா தகவல்களை எல்லாம் பாதுகாப்பாக வைக்க சீனா பெரிய அளவிலான முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறது.

சீனா  குவாண்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குவாண்டம் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது. ஜினான் இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாண்டம் டெக்னாலஜி இந்தகு வாண்டம் நெட்வொர்க்கை சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

இந்த குவாண்டம் நெட்வொர்க்கை முதலில்அரசு, இராணுவம், நிதி மற்றும் மின்சாரம் துறையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குவாண்டம் நெட்வொர்க் தகவலை ஹேக்கர்கள் ஹேக் செய்யவே முடியாது என சீனா தெரிவித்துள்ளது. குவாண்டம் நெட்வொர்க் ஒளி துகள்கள்(Light Particles) மூலம் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்படும். இந்த தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்ய நினைத்தால்அது என்க்ரிப்ட் முறையை மாற்றி அமைத்து ஹேக் செய்ய முடியாமல் தடுத்து விடும்.

நெட்வொர்க்கை எச்சரிக்காமல் இந்ததகவலை திருடமுடியாது. அந்த சிறப்பியல்புகள் இதற்கு உண்டு என ஜினான் இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாண்டம் டெக்னாலஜி தெரிவித்துள்ளது.

அகில இந்தியா அளவில் ஜி.எஸ்.டி வரிக்கேன டிஜிட்டல் தளத்தை இந்தியா அரசு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளம் உலக அளவில் மிக பெரியதாகவும், தனித்துவம் உடையதாகவும் உள்ளது. இதனை ஊடுருவி வரி செலுத்துவோர் பற்றிய விவரங்களைப் பெற முடியாது என்று அரசு திரும்ப திரும்பச் சொல்லி வருகிறது.

ஆனால் தகவல் தொலைத்தொடர்பு தொடங்கி தொலைபேசியை பயன்படுத்தும் வங்கி பண பரிமாற்றம் வரை எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை நாடே அறியும். இந்த நிலையில் தகவலகளை பாதுகாப்போம் என்று உறுதி அளிப்பதை எட்டடி நம்புவது?

மொபைல்களை ஆதாரமாக கொண்டு இயங்கும் அனைத்து சேவை வசதிகளும் திருட்டு கும்பலுக்கு பணம் சம்பாதிக்க உதவும் 24 மணி நேரம் அங்காடியாக விளங்குகின்றன.

இந்த நிலையே மாற்றாவிட்டால் டிஜிட்டல் முறையில் கிடைக்கும் பயன்கள் எல்லாம் காற்றில் வைத்த கற்பூரம் போல கரைந்து போகும். 


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation