கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 86

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2017
எம்.ஜி.ஆரும் ஏனைய கழக கதாநாயக நடிகர்களும்!

திரைப்படங்களில் தி.மு.க. கொள்கைகளைப் பிரசாரம் செய்த முதல் கதாநாயக நடிகர், கே.ஆர். ராமசாமி. கட்சியின் முக்கிய நிறுவனரான சி.என்.அண்ணாதுரையின் நண்பர் அவர். அண்ணாவோ, தம்பி ராமசாமியின் முன்னேற்றத்தை விரும்பியவர். ராமசாமியை மேடை ஏற்றுவதற்குத்தான் ‘வேலைக்காரி’ நாடகத்தையும் ‘ஓர் இரவு’ என்ற நாடகத்தையும் நாற்பதுகளில் அவர் எழுதினார்.

சிவாஜி நடித்த ‘மனோகரா’ சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தபோது, அண்ணாதுரை எழுதி அவர் சார்பில் பரிமளம் பிக்சர்ஸ் எடுத்த ‘சொர்க்கவாசல்’  (1952), கே.ஆர். ராமசாமியை முன்னிறுத்தியது.  'மனோகரா'விற்குப் பிறகு இந்த ஆண்டின் மற்றுமொரு வெற்றிப்படமாக 'சொர்க்கவாசல்' அமையும் என்று அதன் தயாரிப்பாளர்கள் பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள். ‘வேலைக்காரி’யில் செய்தது போல, கழகத்தாரின் ‘பகுத்தறிவு’  கொள்கைகளை 'சொர்க்கவாச'லில் ராமசாமி முழக்கினார்.

ஆனால் ‘சொர்க்கவாசல்’ யாரையும் சொக்கவைக்கவில்லை. கே.ஆர்.ராமசாமியின் திரை வாழ்க்கை மெல்லத்தேய்ந்தது. ஏகப்பட்ட ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘செந்தாமரை’ படத்தில், ‘பாடமாட்டேன் நான் பாட மாட்டேன்’ என்று பல்லவி பாடினார் கே.ஆர்.ஆர். சினிமாவில் தன் பாடல்களை 1944லிருந்து தொடர்ந்து  பாடிக்கொண்டிருந்த ராமசாமி, அதன் பிறகு பாடவேயில்லை!

எந்தக் கட்சியின் முதல் அலுவலகமே அவருடைய பங்களிப்பால் எழுந்ததோ (அன்பகம்), அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, ராமசாமிக்கு பெரிதாக எதுவும் கிடைத்து விடவில்லை. ராமசாமி மறைந்தபோது, ‘கழகப்பொன் மாளிகையின் வைரத்தூண் சாய்ந்தது’ என்று அதிர்ந்த முரசொலி, ராமசாமிக்கு அரசின் திரைப்படத் தேர்வுக்குழுவில் இடம் கொடுத்ததோடு சரி.

உண்மையில், பொன்னையும் பொருளையும் வைரங்களையும் நினைக்காதவராகவும் மதிக்காதவராகவும் இருந்ததால்தான், வரப்போகும் வரலாறுகளுக்கு (!) ராமசாமி உரமாகிப்போனார். (வரப்போகும் அந்த சோக ‘வரலாறுகள்’ குறித்து, அண்ணாவும் தனது அந்திம காலத்தில் கவலைப்பட்டார் என்று கூறப்படுவதுண்டு).

‘‘தி.மு.கழகத்தின் தூண்களில் ஒருவர், கழகப் பொதுக்குழுவிலும் மேலவையிலும் உறுப்பினர், பொதுப்பணியில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய பொன்மனச்செம்மல்’’ என்று பின்னாள் சபாநாயகர் கே. ராஜாராம் நடத்திய ‘திருவிளக்கு’ வெளிச்சம் போட்டது.

ஆனால், தி.மு.க.வின் முதல் அண்ணனுக்கு முக்கிய தம்பியாக இருந்தாலும் வெறும் தொண்டராக இருந்துவிட்டுப்போனார் கே.ஆர்.ஆர். எம்.ஜி.ஆருடைய படங்களில் சிறு வேடங்களில் நடித்ததோடு அவருடைய கதை முடிந்தது ('நாடோடி' -–1966 - அறுவை சிசிக்சை செய்து கண் அளிக்கும் டாக்டர் ;  'நம் நாடு'-– 1969 -  ஊழலை அம்பலப்படுத்த நினைத்ததால் தீர்த்துக்கட்டப்படும் பள்ளி ஆசிரியர்).

எம்.ஜி.ஆருக்கு முன்னே திரை உலகில் கோலோச்சிய தி.மு.க. கதாநாயக நடிகர் கே.ஆர். ராமசாமி என்றால், அவருக்குப்  பின்னே அந்த இடத்திற்கு வந்தவர் எஸ்.எஸ். ராஜேந்திரன். எம்.ஜி.ஆரை விட குறைந்தது 11 வயது இளையவர்.  ராஜேந்திரனின் முதல் மனைவியின் அண்ணன், நடிகர் டி.வி.நாராயணசாமி, கலையுலகத்தில் கழகத்திற்கு ஆதரவு திரட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்.  

அந்த வகையில், ராஜேந்திரன் அண்ணாவின் அன்புத் தம்பியானார். அண்ணாவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படும்போது, இளைஞர் ராஜேந்திரனிடம் கடிதம் அனுப்பி, கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியாரிடம் பணம் வாங்கிவரச் செய்வார்.சிவாஜி கணேசன் மிகப்பெரிய வெற்றி அடைந்த 'பராசக்தி' தொடங்கி, 'பணம்', 'மனோகரா', 'ரத்தக்கண்ணீர்', 'சொர்க்கவாசல்', 'ராஜா ராணி' ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார்  எஸ்.எஸ்.ஆர்.

'பராசக்தி'யில் சிவாஜிக்கு முன்பே கூட ராஜேந்திரன்தான் வருகிறார். படத்தில் குணசேகரனாக நடிக்கும் சிவாஜிக்கு அவர் அண்ணன்! ஏ.வி.எம்மின் 'குலதெய்வம்' ராஜேந்திரனின் நடிப்புத்திறனை சரியாக வெளிக்காட்டியது. ஏ.கே.வேலனின் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தின் அசாத்திய வெற்றியும், சின்ன பட்ஜெட் படமான ‘முதலாளி’யின் எதிர்பாராத வெற்றியும் ராஜேந்திரனை முன்னணி கதாநாயகர்கள் மத்தியில் கொண்டுவந்தன.

கடுகுதெளித்தாற்போல் எங்காவது திராவிடத்தை வசன உதிர்ப்பில் நினைவு படுத்தினாரே தவிர, அரசியல் ஈடுபாடு ராஜேந்திரனின் திரை உலக வாழ்க்கையை ஆக்கிரமித்து விடவில்லை.  நாடகமேடையில் வேண்டிய மட்டும் கட்சிப் பிரசாரத்தை முழங்கினார். ஆனால் அவ்வப்போது அதைத் திரையிலும் ராஜேந்திரன் காட்டாமல் இல்லை.

தேனி சட்டசபை தொகுதியில்

தி.மு.க. சார்பாக 1957ல் போட்டியிட்டுத் தோற்றிருந்தார் ராஜேந்திரன்.   'தங்கரத்தினம்' (1960) என்ற தனது தயாரிப்பைத் தானே இயக்கி, நடித்து அப்பட்டமான கட்சிப் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேனி தொகுதியில் கட்சியின் சார்பில் 1962ல் நின்று வெற்றியும் அடைந்தார். சட்டசபைக்குச் சென்ற கட்சியின் முதல் கதாநாயக நடிகர், எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான்.

தி.மு.க. பிரமுகரான கருணாநிதியின் கதை-– வசனத்திலும், தயாரிப்பிலும் ராஜேந்திரன் நடித்த  ‘பூம்புகார்’,  ‘அவன் பித்தனா’, ‘காஞ்சித்தலைவன்’ முதலிய படங்களும் அவருடைய கட்சி சார்பை வெளிப்படுத்தின.

ஆனால், ஒரு முரண் சுவை என்னவென்றால், இன்னொரு திராவிட நட்சத்திரமான எம்.ஜி.ஆருடன் ராஜேந்திரன் இரண்டே படங்களில்தான் இணைந்தார் ('ராஜா தேசிங்கு', 'காஞ்சித்தலைவன்'). இரண்டு படங்களும் தோல்வி அடைந்தன! ஆனால் சிவாஜியுடன் அவர் நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பைப்  பெற்றன ('ஆலயமணி', 'பச்சை விளக்கு', 'குங்குமம்', 'சாந்தி', 'கைகொடுத்த தெய்வம்' இத்யாதி).

தி.மு.க. தலைவர் அண்ணாவின் மறைவால் விரக்தி அடைந்து மதுப்பழக்கத்தில் ஆழ்ந்ததாக எஸ்.எஸ்.ஆரே கூறியிருக்கிறார். கட்சியின் சார்பில் பார்லிமென்ட் மேலவை உறுப்பினராகியிருந்தார்  ராஜேந்திரன்.   மன்னர் மானியத்தை ஒழிக்க இந்திரா காந்தி சட்டத்திருத்தம் கொண்டுவந்தபோது, வாக்களிக்க ராஜேந்திரன் நேரத்தில் செல்லாததால் மத்திய அரசின் முயற்சி ஒரு வாக்கில் தோற்றது. இதனால் இந்திய அரசியலில் சில எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டன. அரசியல் உலகைப் பொறுத்தமட்டில், இதுதான் எஸ்.எஸ்.ஆர். ஏற்படுத்திய மிக அதிகமான தாக்கம் என்று கூறவேண்டும். அவர் சினிமாவில் செய்த கட்சிப் பிரசாரம் கட்சிக்கு உதவியிருக்கலாமே தவிர, அவருக்கு தலைவர் அந்தஸ்தோ, அதற்கான செல்வாக்கோ ஏற்படவில்லை.

திராவிட இயக்கத்தின் சில கொள்கைகள் பிடித்ததால், அதில்  முறைப்படி சேரவில்லை என்றாலும் அதை ஆதரித்துக்கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். அப்படித்தான் அவர் கனல் தெறிக்கும்  வசனங்களை 'பராசக்தி'யில் முழக்கினார்.   நடிகராக மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

ஆனால் தேசபக்தி, தெய்வ பக்தி உள்ள குடும்பத்தில் பிறந்து, அதே நம்பிக்கைகளுடன் தான் இருப்பதாகக்கூறிக்கொண்ட சிவாஜி,   திராவிட இயக்கத்தின் எந்தக் கொள்கைகள் தனக்குப் பிடித்தன என்று விளக்கமாகச் சொல்லவில்லை!  

எப்படியும், 1956ல் சென்னையில் நடந்த தி.மு.க. விழாவில் தான் ஒதுக்கப்பட்டதையும், எம்.ஜி.ஆர். நடிகராக அரியணை ஏற்றப்பட்டதையும் கண்டு, அந்தக் கட்சியிலிருந்து நிரந்தரமாக விலகி, காங்கிரஸ் பக்கம் வந்துவிட்டார் சிவாஜி. விளைவு, தி.மு.க.வின் கலை மேடை, எம்.ஜி.ஆருக்காக பரந்துவிரிந்து கிடந்தது. ஆனால் கட்சிக்குப் பிரசாரம் செய்த மற்ற கதாநாயக நடிகர்களைப்போலத்தான்  

எம்.ஜி.ஆர்., என்று கருதிய கட்சி சாணக்கியர்களின் கணக்குகள் பொடிப்பொடியாகிவிட்டன.  அரிதாரம் இறங்கியவுடன் எம்.ஜி.ஆரின் அதிகாரம் இறங்கிவிடும் என்ற அவர்களது நினைப்பு நிர்மூலமானது.

ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், மற்ற கதாநாயக நடிகர்களை, தி.மு.க.வின் பிரசாரகர்களாக மக்கள் நினைத்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆரை அந்தப் பிரசாரத்தின் இலக்காக நினைத்தார்கள்! அவர் ‘அண்ணா, அண்ணா’ என்று திரையில் வரும் அண்ணன்களை அழைத்தபோதுகூட, கட்சியின் தலைவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்டு சீட்டி (விசில்) அடித்து உருகிப்போனார்கள். அவர்கள் அண்ணனுக்காக உருகினார்களா, எம்.ஜி.ஆருக்காக உருகினார்களா, அல்லது இருவருக்கும் சேர்த்து உருகினார்களா என்பது அண்ணா இருக்கும் வரை கேள்வியாக இருந்திருக்கலாம். ஆனால் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆரை நினைத்துத்தான் அவர்கள் மனம் உணர்ச்சிவசப்பட்டது என்பது தெளிவாகியது.

அதுவரை வந்து போன தி.மு.க. ஹீரோக்கள், கட்சித்தலைமையிடம் வாலை சுருட்டிக்கொண்டிந்தார்கள் என்றால்,

எம்.ஜி.ஆருக்கு மட்டும் அத்து மீறும் தன்மை எங்கிருந்து வந்தது?

பொதுவாக, எம்.ஜி.ஆருடைய பல படங்களில் அவர் பல வேடங்கள் ஏற்றாலும், அந்த வேடங்களை அவர் கஷ்டப்பட்டு சித்தரிக்கிறார் என்பதைவிட, அந்த வேடங்கள் யாவும் அவரைத்தான் பிரதிபலிக்கும். தான் யார் என்று இந்த வகையில் அவர் ரசிகர்களுக்கு வெற்றிகரமாகப் புரியவைத்துவிட்டார். அவர் தாயை மதிப்பவர். கடமைக்கு முதலிடம் கொடுப்பவர். காதலித்தாலும் அதைத் தியாகம் செய்யத்தயாராக இருப்பவர். அந்தந்த படத்தில் வரும் பாத்திரப் பெயர்கள், அந்தப் படங்களின் பிரத்யேக கதை அமைப்பு இத்யாதிகளில் வரும் மாறுதல் மக்களின் ரசனைக்காக அமைக்கப்பட்டிருந்தாலும், அடிப்படையில் ‘வாத்தியார்’ மாறவே மாட்டார்...தாங்கள் அறிந்த வரை, தங்கள் முகத்தைக் கண்ணாடியில் காண்பதுபோல் கண்டுவிட்டு அமோக திருப்தியில் ரசிகர்கள் திரும்பினார்கள்.

மற்ற கதாநாயக நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஏற்ற வேடங்களுக்கும் அவர்களுடைய நிஜவாழ்க்கைக்குமான வேறுபாடு எல்லோருக்கும் தெரியும். ஆனால் எம்.ஜி.ஆர்., விஷயத்தில் திரை பிம்பத்திற்கும் நிஜவாழ்க்கை பிம்பத்திற்கும் வித்தியாசம் இருப்பதுபோல பெருவாரியான மக்கள் உணரவில்லை. திரையில் குடிக்கமாட்டார். வாழ்க்கையிலும் அப்படியே. திரையில் வள்ளல் என்றால், வாழ்க்கையிலும் அள்ளிக்கொடுப்பவர்தான். அவர் நடிகைகளை மாற்றிக்கொண்டே வந்ததை விமர்சகர்கள் விளாசலாம்... ஆனால் தங்கள் ஆதர்ச புருஷர் அறுபது வயதிலும் இளம் கன்னிகளுடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எடுத்து எல்லோரையும் அசத்துகிறார் என்றுதான் அவருடைய அபிமானிகள் நினைத்தார்கள். ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றவராக இருக்கலாம். ஆனால் தங்கள் ராமச்சந்திரன் அப்படி இருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆர். சார்ந்த கட்சியில் சிலர், பண்பாடுகளையும் அரசியல் நாகரிகங்களையும் மீறி மேடைகளில் தாண்டவம் புரியலாம். ஆனால் பண்புகளைக் காப்பதில் ஒரு காந்திய தன்மையைக் காப்பாற்றுவதுபோலத்தான் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடந்துகொண்டார். அது அவருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று பொதுமக்கள் நினைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

ஐம்பதுகளில், திராவிட  இயக்கத்தார் வெறுத்த பக்தி வெளிப்பாடுகளை எம்.ஜி.ஆர்., அறவே தவிர்த்தார். ஆனால் தன்னை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற தன்னம்பிக்கை வளர்ந்த பிறகு, ஜெயலலிதாவுடன் முருகனாக தோன்றினார் ('தனிப்பிறவி'). ஆகர்ஷம் மிக்க தன்னுடைய ஆளுமையால், அவர் தான் சார்ந்த இயக்கத்தின் குத்தலான கொள்கைகளிலிருந்து மாறுபட்டவராக, பலரும் ஏற்கக் கூடியவராக வெளிப்பட்டார். மீடியா ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அளவிடமுடியாத செல்வாக்கின் கூறுகளை இன்னும் ஆய்ந்துகொண்டே இருக்கிறார்கள். யாருக்கும் அதன் முழு விலாசம் தென்படவில்லை. எம்.ஜி.ஆருக்கே கூட அதன் பரிமாணம் தெரியுமோ என்னவோ, யார் கண்டார்கள்?

(தொட­ரும்)