ஆறு மாதக் குழந்தைக்கு அவசியம் திட உணவு

பதிவு செய்த நாள் : 22 ஜூலை 2017

நம் நாட்டில் கேரளா, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில்  குழந்தைகள் பிறந்து 6 மாதம் நிறைவடைந்த பின் அரிசிச் சோறு முதன்முதலாக ஊட்டுவதை ஒரு விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அன்னபிரச்சனம் என்றழைக்கப்படும் இவ்விழாவில் சொந்தபந்தங்கள் சூழ  மந்திரங்கள் ஓதி, பூஜை, சடங்குகள் செய்த பின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழை இலையிலோ, வெள்ளி கிண்ணத்திலோ அல்லது தட்டிலோ சோறு போட்டு பிசைந்து ஊட்டுவார்கள்.

குழந்தைகளுக்கு 6 மாதம் நிறைவடைந்த பின் பால் மணம் மறக்க, குழந்தைகளுக்கு ஊட்டசத்து மிக்க குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் திட உணவுகளைக் கொடுப்பதன் அவசியத்தை நம் கலாச்சாரம் வலியுறுத்துகிறது.

குழந்தைகள் வளர வளர அவர்களின் தேவைகள் அதிகரிக்கும். வளர்ச்சி, மற்றும் இயக்கத்துக்கு ஈடுகொடுக்க  தாய்ப்பால் மட்டும் போதாது. 6 மாதத்திற்கு பின் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளை சாப்பிட குழந்தைகளை பழக்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம்.

குழந்தைகளுக்கு முதல்முதலில் திட உணவை அறிமுகப்படுத்தும் போது பல விஷயங்களை கவனமாக பின்பற்ற வேண்டும். அதற்கான குறிப்புகள் வருமாறு:

  • குழந்தைகளுக்கு முதலில் ஆப்பிள், வாழைப்பழம், உருளைகிழங்கு காரட், போன்ற பழங்களையும் காய்கறிகளையும் வேகவைத்து மசித்து ஊட்டுவது நல்லது. இவை எளிதாக ஜீரணமாகும். படிப்படியாக அரிசி கஞ்சி, இட்லி, கிச்சடி போன்ற உணவுகளையும் வழங்கலாம்.
  • ஒருமுறை ஊட்டும் பொழுது ஒரு புதிய உணவைதான் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவையும் சேர்த்து கொடுக்கக்கூடாது. ஒரு உணவை குழந்தைக்கு கொடுத்து சோதித்த பின் 3 நாட்களுக்கு பின்தான் மற்றொரு உணவை சேர்த்துக் கொடுக்க வேண்டும். புதிய உணவை வீட்டில் இருக்கும்போது மட்டுமே குழந்தைக்கு அளித்து  சோதிக்க வேண்டும்.
  • குழந்தைகளை உட்கார வைத்துத்தான் உணவை ஊட்ட வேண்டும். குழந்தை படுத்திருக்கும் நிலையில் உணவை ஊட்டக்கூடாது.
  • முதலில் ஒரு டீஸ்பூன் அளவு உணவைக் கொடுத்து பழகிய பின், சிறிது சிறிதாக உணவின் அளவை கூட்டவேண்டும்.
  • குழந்தைக்கு வலுகட்டாயமாக உணவை திணிக்கக்கூடாது. முதலில் தாய்மார்கள் உணவைச் சுவைத்து பார்த்தபின் உப்பு, இனிப்பு அளவாக உள்ளதா என்று ருசி பார்த்த பிறகே குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.
  • குழந்தைகளுக்கு புதிதாக சமைத்த உணவுகளை மட்டுமே வழங்கவேண்டும். பழைய உணவுகள், பழைய பால் தரக்கூடாது
  • இரண்டு வேளை உணவுக்கு இடையே தாய்பால், பசும்பால் ஒன்று அல்லது இரண்டு முறை கொடுக்கலாம்.
  • ஏதேனும் புதிய உணவைத் தரும் பொழுது குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டாலும் செரிக்காமல் பேதி ஏற்பட்டாலும் அந்த உணவைத் தவிர்ப்பது நல்லது.

6 மாத குழந்தைகளுக்கான உணவுகள் :

வேகவைத்த ஆப்பிள், வாழைப்பழம், நன்கு வேகவைத்து மசித்த காரட், உருளைகிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பாசிப்பருப்பு, அரிசிக் கஞ்சி, இட்லி, கிச்சடி, பாலில் ஊறவைத்த பிஸ்கட்கள், குழைவாக சமைக்கப்பட்ட, அதிகம் நெய் சேர்க்கப்படாத கேசரி, பாயாசம் போன்ற இனிப்புகள் ஆகியவற்றை வழங்கலாம்.

7 முதல் 9 மாதம்

குழந்தைகளுக்கு இந்த காலக்கட்டத்தில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பற்களைப் பயன்படுத்தி கடித்து அல்லது அரைத்துச் சாப்பிட குழந்தை விரும்பலாம். 

உணவில் சுவை எதிர்பார்க்கும் வயது இது. இந்த வயதில் குழந்தைகளின் சக்தி மற்றும் ஊட்டச்சத்துகளின் தேவை அதிகரிப்பதால் உணவின் அளவை தாய்மார்கள் அதிகரிக்க வேண்டும்.  உணவை ஊட்டும்போது தாய்மார்களுக்கு பொறுமை அவசியம்.

குழந்தைகள் உணவை ஆர்வத்துடன் உண்ண பழக்கவேண்டும். அவ்வப்போது சாப்பாடு சூப்பரா இருக்கே! என்று தாய்மார்கள் தங்கள் உணவை தாங்களே ரசிப்பது போல் செய்துகாட்டி குழந்தைகளை ஊக்குவிக்கவேண்டும்.
மிகவும் தண்ணீராக இல்லாமல் சிறிது திடத்தன்மையுடன் உணவை வழங்கலாம். இந்த சமயத்தில் பாட்டிலில் பாலூட்டும் பழக்கத்தை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டே வந்து நிறுத்திவிடவேண்டும்.
கடைகளில் விற்கும் சிப்ஸ், ஜூஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.


உணவுகள் :

நன்கு வேகவைத்து மசிக்கப்பட்ட கீரைகள், தானியங்கள், பருப்பு மற்றும் பயிறு வகைகள், பால், தயிர் ஆகியவற்றை வழங்கலாம். அசைவ உணவில் வேகவைத்த முட்டையின் வெள்ளை கரு, மீன் மற்றும் மட்டன் சூப், ஆகியவற்றை வழங்கலாம். வீட்டில் தயாரிக்கும் சத்து மாவை பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து கொடுக்கலாம். அரிசி பாயசம், கேசரி போன்ற இனிப்புகளை கொடுக்கலாம்

வீட்டில் சத்து மாவு தயாரிப்பது மிகவும் சிக்கலான வேலை என்று பயப்பட வேண்டியதில்லை. தயாரிப்பு மிக எளிது. ஆனால் தரம் மிக அதிகம். மிக்சி இருந்தால் போதும்

சத்துமாவு தயாரிப்பது எப்படி?

அரிசி -100 கிராம்,

கேழ்வரகு – 100 கிராம்,

பாசி பருப்பு – 25 கிராம்,

பொட்டு கடலை – 25 கிராம்,

சர்க்கரை – 60 கிராம்

செய்முறை : கேழ்வரகில் மணல், சிறு கற்கல், குச்சி, தூசி ஆகியவற்றை நீக்கிவிடவேண்டும். முதலில்ல இரண்டு முறை அலசிவிட்டு அந்த தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். பின் நல்ல தண்ணீரில் சுமார் 12 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் நீரை வடித்து மெல்லிய துணியில் கட்டி ஒரு நாள் அப்படியே வைத்து விட வேண்டும். பின் துணியை அவிழ்த்து கேழ்வரகை 6 முதல் 8 மணி நேரம் காயவைக்கவும். பிறகு வாணலியில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.


அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக வாணலியில் வறுக்க வேண்டும். பிறகு கேழ்வரகு உள்ளிட்ட அனைத்தையும் சர்க்கரையுடன் சேர்த்து நன்கு அரைத்து டப்பாவில் காற்று புகாமல் அடைத்து வைக்கவும்.

தேவைப்படும்போது  1 முதல் 2 டீஸ்பூன் அளவு மாவை பால் அல்லது நீரில் கலந்து, நன்றாக கொதிக்கவைத்து பின் ஆறவைத்து குழந்தைகளுக்கு தரவும். இனிப்பு போதுமான அளவு இல்லை என்று நினைத்தால் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

உடனடியாக, குறைந்த பொருள்களை கொண்டு மற்றொரு வகை சத்து மாவை தயாரிக்கலாம். அதற்கு வறுத்த கேழ்வரகுடன் வெறும் பொட்டுகடலை மட்டும் போதும். சர்க்கரையைச் சேர்த்து, அரைத்து அதை கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.

குழந்தைக்கு இந்த சத்து மாவு போதுமானதாக இல்லை என்று நீங்கள் நினைத்தால் சத்து மாவு மூலம் கிடைக்கும் சத்து பொருள்களின் அளவை அதிகரிக்கக் கூடுதலாக சில பொருள்களை சேர்த்து சத்து மாவு தயாரிக்கலாம். அந்த முறையில் கோதுமை -100 கிராம், ஜவ்வரிசி 50 கிராம் அல்லது கம்பு 50 கிராம் ஆகியவற்றை வறுத்து மேற்கண்ட சத்து மாவுடன் சேர்த்து தயாரித்து கொடுக்கலாம்.

குழந்தை ஒல்லியாக உள்ளது. சற்று தசை பிடிப்புடன் வளரவேண்டும் என்று நினைப்பவர்கள் கூடுதலாக 50 கிராம் பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.

10 முதல் 12 மாதம் வரை:

குழந்தைகள் பற்களை பயன்படுத்தும் காலக்கட்டம் என்பதால் திடமான உணவு வகைகளை அளிக்கலாம். இந்த வயதில் குழந்தைகள் வகைவகையான உணவுகளை எதிர்பார்ப்பார்கள்.

குழந்தைகள் ஆர்வத்துடன் கைகளில் எடுத்து சாப்பிடும் வகையில் உணவுகளை தட்டுகளில் அல்லது கிண்ணங்களில் வழங்கவேண்டும். உணவை கீழே சிந்தினாலும் குழந்தைகளைத் திட்டாமல் உணவை சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். 3 வேளை உணவுடன் இடையிடையே சிற்றுண்டிகளையும் வழங்கவேண்டும்.


உணவுகள் :

தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், முட்டை, நன்கு வேகவைத்த மீன், கோழி இறைச்சி, பால், தயிர், இனிப்புகள், வீட்டில் செய்த முறுக்கு போன்ற சில பலகாரங்கள், ஆகியவற்றை வழங்கலாம்.

இட்லி, கிச்சடி பொங்கல், இடியாப்பம், சாம்பார், தயிர், ரசம் சாதம் ஆகியவற்றை கொடுக்கலாம். வீட்டில் சுத்தமான முறையில் செய்த உணவுகளை மட்டும் வழங்குவது நலம்.

வெளியிடங்களில் வாங்கும் உணவுகளைக் குழந்தைகளுக்கு தரக்கூடாது.


கட்டுரையாளர்: - நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation