புதுவையில் வீசும் புயல்: நள்ளிரவில் நடந்த பதவிப் பிரமாணம்

பதிவு செய்த நாள் : 18 ஜூலை 2017

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையேயான அதிகார மோதல் விஸ்வரூபம் அடைந்திருப்பது தான் இப்போது புதுச்சேரியில் ஹாட் டாபிக். வாட்ஸ் ஆப் குழு ஒன்றால் தொடங்கிய மோதல், 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் வரை இன்று அது வளர்ந்து நிற்கிறது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டார். ஆளுநராக பதவியேற்ற உடனேயே, அதிகாரிகள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் என்பது போல் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை கிரண் பேடி பிறப்பித்தார். அதிகாரிகளை ஒருங்கிணைக்க வாட்ஸ் ஆப் குழு ஒன்றை அவர் ஏற்படுத்தினார். அந்தக் குழுவில் அதிகாரி ஒருவர் தேவையற்ற படம் ஒன்றை பகிர அது சர்ச்சையானது. அவரை பதவியில் இருந்து நீக்கினார், கிரண் பேடி. இந்த உத்தரவை ரத்து செய்த முதல்வர் நாராயணசாமி, அந்த அதிகாரியை மீண்டும் பணியமர்த்தினார். ஆளுநர் - முதல்வர் மோதலுக்கு பிள்ளையார் சுழி, இந்த விஷயத்தில் தான் போடப்பட்டது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தார் கிரண்பேடி. அவர்களுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். மோதல் மீண்டும் பூதாகரம் எடுத்தது. எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க முடியாது என்று அறிவித்த புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் அந்தக் கோப்பை ஆளுநர் மாளிகைக்கு எதிராக திருப்பி அனுப்பினார். நியமன எம்.எல்.ஏ.வாக்கப்பட்ட சாமிநாதன் சென்ற தேர்தலில் போட்டியிட்டு 1,200 வாக்குகள் தான் பெற்றார் என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சம்.

இந்தியாவில் அந்தமான் நிகோபர் தீவுகள், சண்டிகார், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டில்லி, லட்சத்தீவு, புதுச்சேரி என 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் தலைநகர் டில்லிக்கும், புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து தரப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரின் நேரடி ஆளுகைக்குள் வருகின்றன. மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே இங்கு நிர்வாக ரீதியில் அதிக அதிகாரத்தை அளித்துள்ளது அரசியலமைப்புச் சட்டம். எனவே, மாநில அந்தஸ்து தரப்பட்டுள்ள டில்லியிலும், புதுச்சேரியிலும் ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல்கள் நடக்கின்றன.

இதன் பின்னணியில் அரசியலும் இருக்கிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆள்கிறதோ அதே கட்சி யூனியன் பிரதேசங்களிலும் ஆட்சியில் இருந்தால் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு சாதகமான ஆளுநர் நியமிக்கப்படுவார். ஆட்சியும் நிர்வாகமும் சுமூகமாக நடக்கும். மாறாக எதிர்க்கட்சி ஆள்கிறது என்றால் கதை கந்தல் தான்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆள்கிறது. புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் கிரண் பேடி, டில்லியில் பாஜக முதல்வர் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்தவர். ஆக, பிரச்சினை என்னவென்று எளிதாக ஊகித்து விட முடிகிறது இல்லையா.? மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் இதே கதை தான்.

ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் 

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் - துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் இடையேயான அதிகார மோதல் நாடு முழுவதும் அறிந்தது. மோதலின் உச்சக்கட்டமாக அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் குறுக்கிடுவதற்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி தீர்ப்பளித்த டில்லி உயர் நீதிமன்றம், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத் தலைவர் துணை நிலை ஆளுநர் தான்; அவருக்குத் தான் அதிக அதிகாரம் என்று உத்தரவிட்டு விட்டது.

இதை எதிர்த்து டில்லி அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது, ‘டில்லி அரசுக்கும் சில அதிகாரங்கள் தரப்பட வேண்டும். இல்லையென்றால் அரசு சரியாக இயங்க முடியாது’ என்ற ஒரு கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருப்பது முக்கியமானது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் பெரும்பான்மையானவை சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அல்லாதவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவை. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், குறு அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவை இவை. சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொன்றாக இவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், டில்லி, சண்டிகாரின் கதை வேறாக இருக்கிறது. தலைநகரம் என்பதால் டில்லி யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. பஞ்சாப் - ஹரியானா மாநிலப் பிரிவினையின் போது இருமாநிலங்களும் சண்டிகாருக்கு உரிமை கோரியதால் அதை 1966ல் யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்தியா.

டாமன் - டையூ, தாத்ரா நாகர், ஹவேலி ஆகிய பகுதிகள் போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவை ஆகும்.

புதுச்சேரி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து 7 ஆண்டுகள் கழித்து 1954ம் ஆண்டில் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் அரசு சம்மதித்தது. அதற்கான ஒப்பந்தம் அப்போது கையெழுத்து ஆனது. எனினும், 1963ம் ஆண்டில் தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பகுதியாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மற்றும் கேரளாவின் மையத்தில் உள்ள மாகி ஆகிய பகுதிகளும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இப்போதும் புதுச்சேரியில் பிரெஞ்சு கலாச்சாரம் தொடர்வதை பார்க்கலாம்.

இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. இவற்றுக்கு மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் உள்ளார். ஆளுநருக்கு நிர்வாகம், சட்டமன்றம், நிதி, நீதித்துறை ஆகிய நான்கு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே ரீதியிலான அதிகாரம் தான் மாநில ஆளுநருக்கு இருக்கிறது.

செயல்படுத்தும் அதிகாரம் மாநில முதல்வர் வசம் உள்ளது. மாநில நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. மாநிலங்களில் பெரும்பாலும் ஆளுநர் - முதல்வர் அதிகார மோதல் தோன்றுவதில்லை. ஆனால் விதிவிலக்கான சந்தரப்பங்களும் இருந்துள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா ஆளுனர் பதவி தேவையற்றது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவருக்கே உரித்தான உவமை நயத்தோடு “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமுமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை” என்று சொன்னார்.

மாநில அந்தஸ்து பெற்ற யூனியன் பிரதேசங்கள் இந்த விஷயத்தில் தள்ளாடுகின்றன. பணிகளில் குறுக்கீடுகள் நிகழ்கின்றன. ஆளுநருக்கும் முதல்வருக்கும் யார் பெரியவர் என்ற மோதல் நீடிக்கிறது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதும், தங்கள் அதிகாரம் இன்ன இன்ன என்று நிரூபிப்பதிலும் காலம் கடந்து விடுகிறது. விளைவாக, நிர்வாகம் சீர்குலைகிறது. மக்கள் நலப்பணிகள் சுணக்கம் அடைகின்றன.

இமாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, கோவா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள் ஒரு காலத்தில் யூனியன் பிரதேசங்களாகத் தான் இருந்தன. பிற்பாடு சில கட்டுப்பாடுகளுடன் அவை மாநிலங்களாக மாற்றப்பட்டன.

இமாச்சலப்பிரதேசம் 1971ம் ஆண்டு மாநிலம் ஆக்கப்பட்டது. மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகியவை 1972ம் ஆண்டிலும், கோவா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகியவை 1987ம் ஆண்டிலும் மாநிலங்களாக உருவெடுத்தன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், சட்டமன்றத்திற்கும் உரிய அதிகாரமளிப்பது தான் மக்களாட்சியின் அடிப்படை என்பது நாடறிந்த புரிதல். இதைப் புரிந்துகொள்ள அரசியலைப்புச் சட்டம் எல்லாம் கற்க வேண்டியதில்லை. மக்களாட்சியின் ஒரு அங்கமாக, எளிய மனிதனாக நின்று யோசித்தாலே போதும்.

அமைப்பில் ஒரு பிரச்சினை ஏற்படும்போது, அதை வைத்து விவாதங்களை மட்டும் உருவாக்கிக் கொண்டு இருக்காமல் தீர்வை நோக்கி நகர்வது தான் எப்போதும் சரியாக இருக்கும்.

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயம் எல்லாவற்றுக்கும் இருக்கிறது. சீர்திருத்தங்கள், ஜிஎஸ்டி வரி போல் பொருளாதாரம் சார்ந்தவை மட்டும் அல்ல. அரசியல் அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

புதுச்சேரி பிரச்சினை தொடர்பாக உள்துறை செயலாளர் ராஜ்நாத் சிங்கை கிரண்பேடி சந்தித்தபோது

யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருக்கும் அங்கு இருக்கும் முதல்வருக்கும் இடையில் தீராப்பகை இருக்க நியாயமில்லை.

புதுச்சேரி, டில்லி உள்ளிட்ட அனைத்து யூனியன் பிரதேசங்களும் பிற மாநிலங்களுக்கு இணையானவை.

துணைநிலை ஆளுநர்கள் பிற மாநில ஆளுநர்களுக்கு இணையானவர்கள். இந்த ஜனநாயக நடைமுறை எல்லா யூனியன் பிரதேசங்களின் விஷயத்திலும் நடைமுறை ஆக வேண்டும்.

இதற்கு அரசியல் அமைப்புச் சட்டம், பிற சட்டங்கள், சட்டவிதிகள் ஆகிய எவற்றையெல்லாம் திருத்த வேண்டுமோ அவற்றை எல்லாம் திருத்த வேண்டும். அதற்கு என ஒரு தனிக்குழுவை மத்திய சட்ட இலாகா மூலம் பிரதமர் மோடி அமைக்கவேண்டும். அக்குழுவின் பரிந்துரையின்படி நாடாளுமன்றத்தின் கருத்துரையைப் பெற்று விரைந்து செயலபட வேண்டும்.

அரசியல் இணக்கமும் அமைதியும் அன்னிய முதலீட்டை ஈர்க்க அவசியம். தொழில் வளர்ச்சிக்கு அது அடிப்படைத் தேவையாகும். காலத்தின் கட்டாயத்தை செயல்படுத்துவது அரசியல ஞானமாகும். 

புதுச்சேரியை முழு மாநிலமாக அறிவிப்பது அதிகார மோதல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தோன்றுகிறது.


கட்டுரையாளர்: பிரதீப்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
M.Muralidharan 20-07-2017 12:00 AM
தமிழக சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா ஆளுனர் பதவி தேவையற்றது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவருக்கே உரித்தான உவமை நயத்தோடு ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமுமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை என்று சொன்னார். இந்நிலையில் புதுவை அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தான் இது ஞாபகத்துக்கு வருகிறது. ஆன ஆளுநர் பதவி என்பது தேவையற்றது என்றே கருதவேண்டி உள்ளது.

Reply Cancel


Your comment will be posted after the moderation