கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 85

பதிவு செய்த நாள் : 17 ஜூலை 2017
தலைமுறைதோறும் தொடரும் இசை; கண்ணன், லதாவின் இனிய கதை!

‘சி.ஆர். சுப்பராமன் ஒரு ஜீனியஸ்’ ---– பானுமதி என்னிடம் பெருமிதத்துடன் கூறியது என் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

யாரையும் ஏற்காத ‘அஷ்டாவதானி’ பானுமதி, ஒருவரை ஏற்கிறார் என்பதோடு அவரை வானளாவ புகழ்கிறார் என்றால், அந்த மனிதர் பெரிய மேதையாகத்தான் இருக்கவேண்டும்!

பானுமதி 1949ல் தயாரித்த 'லைலா மஜ்னு'வில், கிறுகிறுக்கும் மெல்லிசைக் கோலங்களில் வெற்றிப் பாடல்கள் அளித்து, தெலுங்கிலும் தமிழிலும் அந்தப் படத்தின் அமோக வெற்றிக்கு வழிவகுத்தவர் சுப்பராமன்.

‘தென்னாட்டு நவுஷாத் இந்த சுப்பராமன்’...என்று லதா மங்கேஷ்கர் சுப்பராமனின் மேதாவிலாசத்தை வர்ணித்தார்.

‘ஏக் தான் ராஜா’ (ஒரு ராஜா  இருந்தார்) என்ற ‘மர்மயோகி’யின் இந்திப் பதிப்பில், சுப்பராமன் இசையில், லதா மங்கேஷ்கர் பாடினார்.

‘கர்லே ஷிகாரி ஷிகார்’ (வேட்டைக்காரனே, வேட்டையாடிக் கொள்) என்ற பாடலையும்,  ‘பூரி ஹோ கயி மன் கீ பாத்’ (நெஞ்சின் ஆசைகள் நிறைவேறின) என்ற பாடலையும் சுப்பராமன் இசையில் பாடியபோது, சுப்பராமனின் இசை ஆளுமை லதாவை கிறங்கச்செய்தது. இவர் தென்னாட்டு நவுஷாத் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

 எம்.எல். வசந்தகுமாரியை திரைப்பாடகியாக தியாகராஜ பாகவதரின் 'ராஜ முக்தி'யில் சுப்பராமன் அறிமுகப்படுத்தினார். சுப்பராமனுக்கு மெல்லிசைதான் தெரியும் என்ற கண்டனத்திற்குப் பதில் அளிக்கும் முகமாக, அனல் பறக்கும் கர்நாடகத்தில் ‘எல்லாம் இன்ப மயம்’ ('மணமகள்') அளித்து எல்லோரையும் அசத்தினார்.

திரைப்பாடல்களை கச்சேரி மேடைகள் அவ்வளவு சுலபமாக அங்கீகரித்து விடுவதில்லை. ஆனால் சுப்பராமன், 'மணமகள்' படத்தில் ராக மாலிகையாகத் தீட்டிய ‘சின்னஞ் சிறுகிளியே’ மணக்காத மேடையில்லை!

ஆலமரத்தின் அடியில் வேறெந்த மரத்திற்கும் இடமில்லை என்பார்கள்....ஆனால், சுப்பராமன் என்ற சங்கீத விருட்சத்தின் நிழலில் எத்தனைப் பின்னாள் இசைப் படைப்பாளிகள்!

எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமுமூர்த்தி, டி.ஜி. லிங்கப்பா, ஜி.கே. வெங்கடேஷ், கோவர்த்தனம், தெலுங்கு தட்சிணாமூர்த்தி என்ற திரைஇசை சாதனையாளர்கள், பாலபாடம் கற்றது சுப்பராமனின் சன்னிதானத்தில்தான்.

திரை இசையமைப்பாளராக வெற்றியின் ஆரோகணத்தில் செவர்லே காரில் வலம் வந்த சுப்பராமன், 29 வயதில் திடீரென்று மரணம் அடைந்தார்.

அப்போது அவர் 'தேவதாஸ்' படத்தயாரிப்பில் ஒரு பாகஸ்தராக இருந்து, அதற்கு இசையமைப்பாளராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். சுப்பராமன் விட்டுச் சென்ற படங்களை முடிக்கத்தான், விஸ்வநாதன் – -ராமமூர்த்தி இணையே தமிழ் சினிமாவில் உருவானது.

சுப்பராமன் இறந்த பிறகு, அவருடைய இளம் மனைவி ராஜம் தன்னுடைய இரண்டு மகன்களுடனும் இரண்டு மகள்களுடனும்   மாம்பலத்தில் ஒரு சிறிய இடத்தில் மூன்று வருடங்கள் வசித்தார்.  டி.ஏ. மதுரம், பாடகி பாலசரஸ்வதி முதலியோர் அவரை வந்து பார்த்துச் செல்வார்கள்.

ஆனால், 1955ல் குடும்பம் கல்லிடைக்குறிச்சிக்கு குடிபெயர்ந்தது. சுப்பராமனின் மூத்த மகன் கண்ணனுக்கு பள்ளி மாணவனாக கிரிக்கெட் விளையாட்டின் மீது ஏகமான நாட்டம் ஏற்பட்டது. சங்கர் பாலிடெக்னிக்கில் படிக்கும் போது, கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

சுப்பராமனின் தாத்தா ராமசாமி அய்யர், பையனின் வருமானத்தைக் கொண்டு சிந்தாமணி கிராமத்தில் காடுவெட்டி என்ற 44 ஏக்கர் எஸ்டேட்டை வாங்கச் செய்திருந்தார்.  அதை நிர்வகித்தவாறு அருமையான கிராமிய வாழ்க்கையை கண்ணன் வாழ்ந்து வந்தார். இது தாத்தா ராமசாமி அய்யரின் தொழில்.

அப்படியென்றால், அப்பாவின் இசை ஆராதனை, இசை முயற்சிகள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு எட்டாத பழமா?

அந்த நிலை அதிக நாள் நீடிக்கவில்லை. சுப்பராமனின் தம்பி சங்கர், விஸ்வநாதன் இசைக் குழுவில் ஆர்மோனிஸ்ட்டாக சேர்ந்திருந்தார். விஸ்வநாதனின் இசைக்குழு திருநெல்வேலிக்கு வந்து மெல்லிசை நிகழ்ச்சி வழங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணன் தன்னுடைய சித்தப்பா சங்கரைப் பார்த்தார். அவர் மேடையில் அக்கார்டியனை வாசித்தபடி அமர்க்களமாக நின்றுகொண்டிருந்தார். அந்தக் காட்சி கண்ணனின் மனதில் உறங்கிக்கொண்டிருந்த இசை ஆர்வத்தை உசுப்பிவிட்டது. அவரைப் போய் பார்த்து, இசை மேல எனக்கு ஆசை வந்துடுத்து’ என்றார்.

அதையெல்லாம் சங்கர் அவ்வளவு லேசாக ஏற்பதாக இல்லை. அவருக்குத் தெரியும், எத்தனை முறை விஸ்வநாதன் வீட்டுக்கு நடையாய் நடந்தோம்,  இரண்டாவது ஆர்மோனிஸ்ட்டாக எப்படி அடங்கியிருந்தோம், இந்த திரை இசை வாழ்க்கையின் போராட்டங்கள் என்னவென்று.

‘டேய்...சினிமா உலகம் வேற.. நீ வாழற உலகம் வேற,’ என்று தள்ளி வைக்கப்பார்த்தார். ஆனால் கண்ணனுக்குள் கிளம்பிய இசைவெறி அடங்குவதாக இல்லை. சென்னைக்கு வந்து தாஸ்டேனியலின் தந்தையிடம் வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். மேண்டலின், கிட்டார் என்று இசைக்கருவிகள் அவருக்கு வசமாயின.சென்னையில் மெல்லிசைக்குழுக்கள் உருவாகியிருந்த காலகட்டம் அது. காமேஷ் ராஜாமணி இசைக்குழு சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது. ஒரு நாளுக்கு ஐந்து கச்சேரிகள் செய்யும் அளவிற்கு பிரபலம் அடைந்திருந்தது.

இந்த நிலையில், அருமையான அக்கார்டியன் கலைஞரான  தன்னுடைய நண்பர் முரளியுடன் இணைந்து, கண்ணன், முரளி இசைக்குழுவை 1973ம் ஆண்டின் கடைசியில் தொடங்கினார் கண்ணன். அது அவருக்கொரு பொற்காலம். மெல்லிசைக் குழுக்களின் சரித்திரத்திலும் பொற்காலம்.

வாத்தியக் கலைஞர்கள் இசை மீது உள்ள நாட்டத்தால் எப்படியாவது கண்ணன், முரளி இசைக்குழுவில் வாசித்து விடவேண்டும் என்று ஆவல்கொண்டிருப்பார்கள். கண்ணனும் யாரையும் நிராகரிக்க மாட்டார். புதிதாகக்கற்றுக்கொண்டு வருபவருக்கும் மேடையில் இடம் கொடுப்பார். அந்த அறிமுகம் அனுபவம் கொடுக்கும்.

எலக்ட்ரானிக் யுகம் பெரிதாக இசை உலகில் புகாத காலம். மேடையில் ஏகப்பட்ட வயலின்கள், கிட்டார்கள், லய வாத்தியங்கள் என்று கெத்தாக இருக்கும். பாட வருபவர்களும் உற்சாகமாக வருவார்கள். பின்னாளில் பலர், ‘நான் கண்ணன், முரளி குழுவில் வாசிக்கத்தொடங்கினேன்’ என்று கூறும் அளவுக்கு, கண்ணன், முரளி குழு பிரபலமானது. உதாரணமாக, முன்னணி வயலின் கலைஞர் செல்வராஜ் மற்றும் சின்ன  கண்ணன். பிரபலமாக உள்ள கணேஷ், கிருபா குழுவிற்கு, கண்ணன், முரளி இசைக் குழு ஒரு முன்னோடியாக விளங்கியது.

பல சாதனைகள் செய்ததாலும், பல பிரத்யேகக் காரணங்களாலும் 1975ல் கண்ணனும் முரளியும் பிரிந்தார்கள். சிறந்த மேடைப்பாடகியான லதாவுக்கும் கண்ணனுக்குமிடையே காதல் ஏற்பட்டு, அவர்கள் வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.

‘‘லதா ரொம்ப சிறந்த பாடகி. அவ மெல்லிசைக் கச்சேரி உலகத்திலே ராணியா இருந்தா. பி. சுசீலா சினிமாவில் பாடின பாட்டுக்களை லதா பாடற மாதிரி வேற யாரும் பாடமுடியாது. அதைப் பல பாடகிகள் தாங்களே ஒத்துக்கொள்வாங்க. அது மட்டுமல்ல. இந்தியில் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே பாடல்களையும் ரொம்ப பிரமாதமா பாடுவா. லதா பாக்குறதுக்கு வாணி ஜெயராம் சாயல்ல இருப்பான்னு, பி. சுசீலா அவளை ‘லதா வாணி’ன்னு கூப்பிடுவாங்க,’’ என்கிறார் கண்ணன். ‘வாழும் வரை போராடு’ என்ற வெற்றிப் பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து பப்பி லஹரி இசையில் பாடியிருக்கிறார் லதா ('பாடும் வானம்பாடி'-– 1985)

கும்பகோணத்தை பூர்வீகமாக  கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த லதா, கோல்கட்டாவில் வளர்ந்தவர். இந்திப் பாடல்களை சிறப்பான உச்சரிப்புடனும் சரியான பாணியிலும் பாடுவதற்கான பின்னணி உள்ளவர்.

சிறந்த மெல்லிசைக் குழுவை நடத்திய அனுபவம், திரை இசை அமைப்பு வாய்ப்பைக் கொண்டு வந்தது. ரம்யா கிருஷ்ணன் அறிமுகமான ‘புதிய பூவிது’ (1986) படத்திற்கு கண்ணன், லதா இசை அமைத்தார்கள். கணவன் – மனைவி இணைந்து இசையமைத்தது, தமிழ் சினிமா சரித்திரத்தில் ஓர் அபூர்வமான நிகழ்வு.   படத்தில், ‘நீராடும் தாமரையே’ என்று பாடல் வெற்றி அடைந்தது. கெத்தான வாத்திய இசை தொடுப்புகளை கண்ணன் லதாவால் படத்திற்கு அளிக்க முடிந்தது.

‘அறுபது நாள் அறுபது நிமிடம்’ (1990) என்ற திகில் படத்திற்கு கண்ணன், லதா இசையமைத்தார்கள். சதி செய்த தொடர்மழையையும் தாண்டி, படம்  ஓடியது. ’எங்கும் உன் முகமே’  என்ற பாடலை, மனோவுடன் லதா இனிமையாகப் பாடியிருக்கிறார்.

அதன் பிறகு, ‘அத்தனைப் பேரும் உத்தமர்தானா’ என்ற படத்திற்குக் கண்ணன், லதா இசையமைத்தார்கள். அவர்களது இசை முயற்சியில் நான்கு படங்கள் தொடங்கப்பட்டு தொடர முடியாமல் நின்று போயின.

சினிமாவில் வெற்றி பெற 'ஆனா' விலாசம் வேண்டும், அதாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்று முடிவுக்கு வந்தார் கண்ணன். சென்னையின் நட்சத்திர ஓட்டல்களில் லதா கஸல் பாடிக்கொண்டிருந்தார். கண்ணனின் வாத்தியக்குழு உடன் இயங்கியது. பிறகு, பெரிய பில்டராக இருந்த லதாவின் தம்பியின் அழைப்பின் பேரில், ஸ்ரீரங்கத்தில் வசிக்கத்தொடங்கினார்கள். திருச்சியின் பிரபல சங்கம் ஓட்டலில் லதாவின் பாட்டுக்கு கண்ணன் குழுவினர் வாசித்தார்கள். பலருடைய தூண்டுதல்  காரணமாக பலருக்கும் இசை பயிற்சி அளிக்கத் தொடங்கினார் கண்ணன்.

இன்று, ஸ்ரீரங்கத்தில் இயங்கும் லதா கண்ணனின் 'மார்ஸ்வின் இசைப்பள்ளி' பல வாத்தியங்களில் மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளிக்கிறது. இந்த துறையில் அந்தப் பகுதியிலேயே முன்னணியில் நிற்கிறது. லண்டன் டிரினிடி காலேஜின் இசைத்தேர்வுகளில் திருச்சி மையமாக செயல்படுகிறது. ஸ்ரீஅரவிந்த அன்னையின் பக்தர்களான லதாவும் கண்ணனும் எதிர்பார்க்காத ஒரு இனிய திருப்பம் இது. அவர்களுடைய இசைப்பள்ளிக்கு எம்.எஸ்.வி, எஸ்.பி.பி, வித்யாசாகர் முதற்கொண்டு பல இசை நட்சத்திரங்கள் விஜயம் செய்திருக்கிறார்கள்.

லதா கண்ணனின் மகன், இளைஞர் ரஷாந்த் அர்வின், இசையமைப்பிலும் ஒலிப்பதிவிலும் பயற்சி பெற்றிருக்கிறார். ஸ்ரீரங்கத்திலேயே மார்ஸ்வின் ஸ்டூடியோ என்ற ஒலிப்பதிவு கூடம் அமைத்து பிஸியாக பணியாற்றி வருகிறார். அண்மையில், சமயபுரம் மாரியம்மன் மீதான, ‘என் தாயே மகமாயி’ என்ற பாடல் ஆல்பத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  வீணையில் தமிழ் சினிமா பாடல்களை வாத்தியக்குழுவுடன் கலைநயத்தோடு வாசித்து, இசை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார். ‘யூகன்’ என்ற புதுப்படத்திற்கு அவர் இசையில் வந்திருக்கும் ‘யாரு யாரடி’ என்ற பாடல் ஜீவனுடன் ஒலிக்கிறது.

சி.ஆர். சுப்பராமனின் தாத்தா ஆண்டி அய்யர் நாடகக் குழு நடத்தியவர். சுப்பராமன், இசைச் சிகரங்களைத் தொட்டவர். கண்ணனும் லதாவும் இசையின் இனிமைகளை குறைவில்லாமல் மேடையில் வழங்கியவர்கள். திரை முயற்சிகளைத் தொடர்ந்து இசைப்பள்ளியின் வாயிலாக மெச்சும்படியான சேவை செய்துவருகிறார்கள். அவர்கள் மகன் ரஷாந்த், தற்கால சூழலுக்கு ஏற்ப பன்முக திறமைகளுடன் இசைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார். அதனுடன் ஒரு நீண்ட இசைப் பரம்பரையின் பலமும், கடந்த காலத்து சினிமா இசையின் நுட்பங்கள் குறித்தான பிரக்ஞையும், அருமையான இசை ஜோடிகளான தாய் தந்தையின் வழிகாட்டுதலும் அவருக்கு இருக்கின்றன. ‘உனக்கு திறமை நல்லா இருக்கு, அதிர்ஷ்டம் வேண்டும் என்று பகவானிடம் வேண்டிக்கோ’ என்று மகனுககு அறிவுறுத்துகிறார் கண்ணன். பெரியோரின் ஆசிகளுடன், அரங்கமா நகர் உள்ளானே என்ற நம்பிக்கையுடன் முன்னே நடந்துசெல்வதுதானே அதிர்ஷ்டம்!

(தொட­ரும்)