ஆசிய தடகளம்: தமிழக வீரர் லட்சுமண் தங்கம்

பதிவு செய்த நாள் : 10 ஜூலை 2017 03:47புவனேஸ்வர்

ஆசிய தடகளம் 10,000 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமண் தங்கம் வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் (800 மீ., ஓட்டம்), சுவப்னா பர்மான் (ஹெப்டதலான்) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் லட்சுமண், கோபி, காளிதாஸ் ஹிரேவ் பங்கேற்றனர். இதில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீரர் லட்சுமண், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம், இம்முறை 2வது தங்கம் வென்றார். முன்னதாக 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஆசிய தடகளத்தில் இவரது 4வது பதக்கம். கடந்த 2015ல் சீனாவின் உகான் நகரில் நடந்த ஆசிய தடகளத்தில் ஒரு வெள்ளி (10,000 மீ.,), ஒரு வெண்கலம் (5,000 மீ.,) கைப்பற்றினார்.

இப்போட்டியில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் கோபி, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர், கடந்த ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில்  நடந்த தெற்காசிய விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.

அர்ச்சனா அசத்தல்: பெண்கள் 800 மீ., ஓட்டத்தின் பைனல் நடந்தது. துடிப்பாக செயல்பட்ட இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் 2:05 நிமிடத்தில் இலக்கை கடந்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே இலங்கையின் நிமாலி, காயந்திகா கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீராங்கனை லில்லி தாஸ் (2:07:49 நிமிடம்) 5வது இடம் பிடித்தார். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டிண்டு லூக்கா ஓட்டத்தை முழுமையாக முடிக்கவில்லை.

சுவப்னா தங்கம்: பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்தியா சார்பில் சுவப்னா பர்மான், பூர்ணிமா ஹெம்பிராம், லிக்ஸ்கி ஜோசப் பங்கேற்றனர். இதில் 100 மீ., தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீ., ஓட்டம் என 7 வகையான போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும், வீராங்கனைகளின் செயல்பாட்டின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். ஏழு போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இதன்படி, இந்தியாவின் சுவப்னா, 5942 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை பூர்ணிமா, (5798 புள்ளி) 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். லிக்ஸ்கி (5633) 4வது இடம் பிடித்தார்.