பால் நினைந்தூட்டுக

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2017

நம் அனைவருக்கும் முதல் உணவு தாய்ப்பால். இயற்கையின் வரமாக விளங்கும் தாய்பாலில் ஆரம்பித்து குழந்தைகளுக்கு வளர்ச்சிக் காலக்கட்டத்தில் கொடுக்கவேண்டிய உணவுகளைச் சரியாக தாய்மார்கள் கொடுக்கவேண்டியது அவசியம். அதேபோல் நம்முடைய அடிப்படை ஆரோக்கியமும் பிறந்த முதல் சில மாதங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இப்படி கூறக்காரணம் என்னவென்றால், ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் (தாயின் கர்ப்பப் பையில் 270 நாட்கள் + பிறந்த முதல் 2 வருடங்கள்) குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது.

நரம்பு மண்டலம், குறிப்பாக மூளை, தண்டுவடம் முதலியவற்றில் இந்த காலகட்டத்தில்தான் ஆரம்ப கட்ட அமைப்பு ரீதியான உடல் வளர்ச்சிகள் ஏற்படுகின்றன.
இந்த காலக்கட்டத்தில் குழந்தைக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடால் மூளை வளர்ச்சி தடைப்படும், குழந்தையின் உடல் வளர்ச்சி, செயல்திறன், நினைவுத்திறன் ஆகியவை பாதிக்கப்படும்.புல்லாகி, பூண்டாகி என மனித உயிரின் பயணத்தை தமிழக பக்தி இலக்கியங்கள் பேசுகின்றன. முந்நூறு நாள் தாய் சுமப்பதும் தமிழ் நூல்களில் பேசப்படுகிறது.  

பச்சிளங்குழந்தையின் உணவுத்தேவை குறித்து அறிவியல் பூர்வமான அணுகுமுறையின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது. இதே பின்னணியில் இக்கட்டுரை பதிய கருத்துகளுடன் வளரும்தாய்ப்பால் புகட்டுங்கள் 

குழந்தையின் முதல் உணவான தாய்ப்பால் மிகவும் உன்னதமான உணவு. குழந்தைக்கு முதல் 6 மாதத்தில் தேவைப்படும் புரதம், மாவுச்சத்து, வைட்டமின்கள், போன்ற அனைத்து ஊட்டச் சத்துகளையும் தாய்ப்பால் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தாய்பால் மிக அவசியம்.

ஆனால், நம் நாட்டில் தாய்ப்பாலின் முக்கியம் குறித்த விழிப்புணர்வு இன்னும்  போதுமான அளவில் ஏற்படவில்லை.

நம் நாட்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின்படி, சுமார் 2 கோடி குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கிடைப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் 1.3 கோடி குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் கொடுக்க வேண்டிய மற்ற முக்கிய ஆகாரங்கள் கொடுக்கப்படுவதில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பற்றாக்குறை அளவு அதிகரித்துகொண்டே செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை மாற தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு இந்திய தாய்மார்களுக்கு அதிகரிக்க வேண்டியது அவசியம்.

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்துவிடும், பால் தரும் தாய்களின் உடல் எடை கூடும் என்று வதந்திகள் பரவியுள்ளன. இந்த வதந்திகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.  எனவே அடிப்படை இல்லாத வதந்திகளை நம்பி  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. அதனையும் மீறி தாய்ப்பாலை நிறுத்துவது குழந்தையின் உடல் நலத்தை பாழ்படுத்திவிடும் என்பது மட்டும் நிச்சயம். 

தாய்ப்பால் கொடுப்பதற்கான குறிப்புகள்:

குழந்தை பிறந்த 3 மணி நேரத்திற்குள் தாய்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் அச்சமயத்தில் குழந்தை விழிப்புடன் துறுதுறுவென இருக்கும். நேரம் செல்ல, செல்ல குழந்தை தூங்க ஆரம்பித்துவிடும். அதனால் தாய்மார்கள் மருத்துவரிடம் கூறி பிறந்த 3 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.

குழந்தை பிறந்த முதல் 1 மணி நேரத்திற்குள் தாய்பால் கொடுப்பது மேலும் சிறந்தது. ஏனென்றால் குழந்தை பிறந்தவுடன் தாயின் உடலின் தொடு உணர்வு மற்றும் அரவணைப்பு தாய் சேய் இருவருக்கும் நன்மை அளிக்கும்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்.
அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்ததும் சில மணி நேரங்களில் தாய்ப்பால் புகட்ட முயற்சிப்பது நலம்.குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்கு பின் குழந்தைகள் மற்ற ஆகாரங்களை சாப்பிட ஆரம்பித்தாலும் 2 வயது வரை தாய்ப்பால் அளிப்பது அவசியம்.  தாய்மார்கள் கர்ப்ப காலத்திலும், தாய்பால் கொடுக்கும் சமயங்களிலும் நல்ல சத்துணவுகளை சாப்பிடவேண்டும். தாய்மார்களின் ஆரோக்கியமே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான வழியாகும்.

சீம் பால்

குழந்தை பிறந்தவுடன் முதல் 3 – 4 நாட்களுக்கு மஞ்சள் நிறத்தில் சீம்பால் சுரக்கும். கொலஸ்ட்ரம் (Colustrum) என்றழைக்கப்படும் இந்த சீம் பால் குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது. சீம்பால் குடிக்கும் குழந்தைகள் நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தி பெறுவர். எனவே குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சீம்பால் அவசியம்.

சில தாய்மார்கள் இந்த சீம்பாலின் மகத்துவத்தை அறியாமல் அதை வெளியேற்றி கொட்டிவிடுவார்கள். அவ்வாறு நடக்காமல் இருக்க மருத்துவர்கள்  தாய்மார்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி குழந்தைகளுக்கு சீம்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் :

தாய்ப்பால் அளிப்பது தாய்மார்களின் உடல்நலனுக்கும் மிக நல்லது. குழந்தைகள் தாய்ப்பால் உறிஞ்சும் போது ஏற்படும் ரசாயன மாற்றங்களால் தாய்மார்களின் உடலில் பலவித மாறுதல்கள் உண்டாகின்றன. மனதளவில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். குழந்தையுடனான நெருக்கம் அதிகரிக்கும்.

தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு மார்பகங்களில் பால்கட்டுவதால் உண்டாகும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் நிலையானதாக மாறாமல், உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தாய்ப்பால் புகட்டுவது அவசியம்.

உதாரணமாக கர்ப்பப் பை பழைய நிலைக்கு சுருங்க   பிரசவத்திற்கு பின் ஏற்படும் ரத்தப்போக்கு குறைந்து முற்றிலும் நிற்க தாய்ப்பால் புகட்ட வேண்டும்.எனவே தாய்ப்பால் குறித்துச் சொல்லப்படும் தேவையற்ற வதந்திகளை அன்னையர் நம்பக்கூடாது.

பொது இடங்களிலும் தாய்ப்பால் கொடுக்கப் பழக வேண்டும். குழந்தையின் உணவுத்தேவை இயல்பான ஒன்று. குழந்தையின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யாமல் ஒத்திவைப்பது நியாயமா? சரியான காரணமில்லாமல் பால் கொடுப்பதைத் தவிர்க்கக்கூடாது.

மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம், கர்ப்பப் பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பசும் பால் 

சரியாக தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள், வேலைக்கு செல்லும் தாய்மார்கள்,  ஆகியோரின் குழந்தைகளுக்கு மாற்றாக பசும்பால் கொடுத்துப் பழகலாம். 

குறிப்புகள்
  • பசும்பால் கொடுக்கப்படுவதற்கு முன் அதை நன்கு காய்ச்ச வேண்டும்.
  • பாலுடன் சமமான அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
  • பால் மிகவும் சூடாக இருக்கக் கூடாது. குளிரவும் கூடாது. வெதுப்பாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
  • பிறந்து 4 வாரங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு தண்ணீர் கலக்காத பால் வழங்கலாம். ஒத்துகொள்ளவில்லை என்றால் நீர் கலந்து கொடுக்கவும்.
  • 120 -180 மில்லி லிட்டர் அளவு பாலுடன்  1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து குறைந்தபட்சம்  தினமும் 6 முதல் 8 தடவை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

குழந்தைகளுக்கு பாலூட்ட பயன்படுத்தப்படும் பாட்டில்கள், அதன் நிப்பில்கள், டம்ளர்கள், ஸ்பூன்கள் ஆகியவற்றை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த நீரில் கழுவுவது நலம்.

கடைகளில் விற்கும் பவுடர் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கப்போகிறீர்கள் என்றால் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை அவசியம். அவர் கருத்தின்படி அவர் கூறும் குழந்தை பால் உணவைப் பயன்படுத்தலாம். அந்தப் பாலுணவின் மேலுறையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நன்றாக படித்து பார்த்துவிட்டு பின்பு அதன்படி பயன்படுத்தவேண்டும்.

3 மாதங்களுக்கு பின் ஆரஞ்சு ஜூஸ், காரட் ஜூஸ், காய்கறி சூப், வடிகஞ்சி, போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் கிடைக்காததால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை இந்த மாற்றுத் திரவ உணவுகள் ஈடு செய்ய உதவும்.

பசும்பால் உட்பட எந்த உணவையும் புதிதாக கொடுக்கும் போது, முதலில் குழந்தைக்கு சிறிதளவு கொடுத்து சோதித்து பார்க்க வேண்டும். ஏதேனும் ஒவ்வாமை அல்லது வயிற்றுகோளாறு ஏற்படுகிறதா என்பதை உறுதிசெய்த பின்னர் அந்த உணவுகளை குழந்தைகளுக்கு தயக்கமின்றி அளிக்கலாம்.

தாய்ப்பால் சேமித்தல்
வேலைக்குச் செல்லும் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும். வசதியுள்ள தாய்மார்கள் மார்பக பம்புகளின் உதவியுடன் தாய்பாலை வெளியேற்றி சேமித்து வைக்கலாம். வேலைக்கு செல்லும் சமயம் சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை குழந்தைக்கு தரலாம்.

தாய்ப்பால் வெளியேற்றும் போது கைகளையும் மார்பக பம்பையும் சுத்தமாக கழுவ  வேண்டும். தாய்ப்பால் பிரிட்ஜில் வைத்து 24 மணி நேரம் முதல் 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம். பிரிட்ஜில்  பால் வைக்கும் ட்ரேயில் தான் தாய்ப்பாலையும் வைக்க வேண்டும்.  சுத்தமான பாட்டில்களில் சேமித்து அதன் மேல் தேதியை குறிப்பிட்டு வைக்கவும். தாய்ப்பாலை கொடுக்கும் போது முதலில் சேமித்த பாலை வழங்கவும்.
6 மாதத்திற்கு பின் 

6 மாதத்திற்கு மேல் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அதிகமாகும். துறுதுறுவென்றும் அதிக வால்தனத்துடனும் இருப்பர். மேலும் 6 மாதம் முதல் 2 வயது வரை குழந்தைகளின் கை கால், உறுப்புகளின் செயல்பாடுகள், மூளை வளர்ச்சி ஆகியவற்றில் வேகமான வளர்ச்சி ஏற்படும். ஆனால் அதற்கு ஈடுகொடுக்க தாய்ப்பால் மட்டும் போதாது.மேலும், தாய்ப்பாலில் இரும்பு சத்து இருக்காது. குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் உடலில் இருக்கும் இரும்பு சத்து குழந்தையின் உடலில் சேமிக்கப்படும். இந்த இரும்பு சத்து குழந்தைக்கு 6 மாதம் வரை பயன்படும். ஆனால், 6 மாததிற்கு மேல் குழந்தைகளுக்கு வேறு உணவின் வழியாக இரும்பு சத்து கொடுக்கவேண்டியது அவசியம்.

எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க தாய்ப்பாலுடன் சேர்த்து வேறு பல ஆகாரங்களையும் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த காலக்கட்டத்தில் தாய்ப்பால் வழங்குவதையும் நிறுத்தக்கூடாது. மற்ற உணவுகளுடன் சேர்த்து அதையும் கொடுக்கவேண்டும். தொடர்ந்து 2 ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


கட்டுரையாளர்: நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Yasmin 09-07-2017 02:47 AM
Very informative and easy to understand..keep writing, all the best Niranjana

Reply Cancel


Your comment will be posted after the moderation


hari haran 09-07-2017 03:29 AM
அருமையான பதிவு...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Kanchnanmala 09-07-2017 04:00 AM
Good. Great and timely job done for the humankind

Reply Cancel


Your comment will be posted after the moderation