ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 22:47

புது டில்லி,

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கு பா.ஜ.க ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டில்லியில் நடந்தது.

ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் எல்லா அரசியல் கட்சிகளுடன் பேசி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற ஒருவரைத் தேர்வு செய்ய பாஜக தரப்பில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவினர் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தேர்தல் ப்ணிக்கென 10 உறுப்பினர் கொண்ட குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிட்டது.

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. பாஜக சிறப்பு குழு உறுப்பினர்களான மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  

சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சிறப்பு குழு பேசியும் தேர்தலுக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், தேசிய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என பாஜக-வின் சார்பில் சிறப்புக்குழு கூறியது.

இதைத் தொடர்ந்து ஆட்சி மன்றக்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார்.  

வரும் ஜூன் 23ம் தேதி ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்வார் என கட்சித் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

வேட்பாளர் பெயரை முடிவு செய்ததும் அக்கூட்டத்தில இருந்தே பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி  சோனியா காந்தி, மன்மோகன் சிங், பழனிசாமி, ஆகியோரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆதரவு கோரினார்.

கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், தெலிங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளின் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டு பிரதமர் மோடி பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முறைப்படி அதிமுக இல்லாத போதிலும் அக்கட்சியின் ஆதரவையும் கோரி சேலம் எடப்பாடி கே. பழனிசாமியுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார்.

பாஜக தனது வேட்பாளரை முடிவு செய்துள்ள நிலையில் எதிர் கட்சிகள் தங்கள் நிலை குறித்து முடிவு செய்ய ஜூன் 22ம் தேதி டில்லியில் கூடுகின்றனர்.