பழனிசாமியோ பன்னீர்செல்வமோ யார் முதல்வராக இருந்தாலும் பாஜ இணைந்து செயல்படும்: வெங்கய்யா நாயுடு பேட்டி

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 22:38

கோவை,

தமிழகத்தில் பழனிசாமியோ பன்னீர்செல்வமோ யார் முதல்வராக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அவர்களுடன் பாரதீய ஜனதா கட்சி இணைந்து செயல்படும். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர். வெங்கய்யா நாயுடு கோவைக்கு வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: பொருளாதார அரங்கில் பாஜக அரசு தோல்வியா?
பதில்: சுதந்திர இந்தியாவில் திறமையான தலைமையுடன் செயல்படும் முதலாவது சிறப்பான ஆட்சி மோடியுடையது. பிரதமர் முன்னிலையில் கட்சித் தலைவி முடிவுகளை எடுப்பது என்ற அளவில்தான் கடந்த ஆட்சி இருந்தது. தற்போதைய ஆட்சியாளர்கள் மீது எந்த ஒரு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளும் எழவில்லை என்பதே மற்றொரு சிறப்பு.


கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. அதிக விளைச்சலால் உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்துவிட்டது என்று விவசாயிகள் குறைபட்டுக்கொள்ளும் அளவுக்குத்தான் விலைவாசி உள்ளது. எனவே, பொருளாதாரத்தில் தோல்வி என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

கேள்வி: நாட்டின் வளர்ச்சிக்கு வழிதேடாமல் தேவையற்ற வேலைகளில் பாஜக ஈடுபடுவதாக எழும் புகார்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:  அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாகவும், சக்தி வாய்ந்த சீனாவின் வளர்ச்சி கூட 6.9 சதவீதமாகவும் குறைந்துள்ள நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் 7.1 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. சாலைகள், மின்னணு மயமாக்கல், வங்கி, காப்பீடு, வீட்டு வசதி என அனைத்துத் துறைகளிலும் சீராக நாடு வளர்ச்சி அடைகிறது என்பதே உண்மை.

கேள்வி: மாநில சுயாட்சி கருத்து வலுப்பெற்று வருகிறதே?

பதில்: மாநில சுயாட்சிக்கு எதிராக என்றும் நாங்கள் இருந்ததில்லையே. மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 32 சதவீதமாக இருந்தது. ஆனால், அதை நாங்கள் 42 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.

இயற்கைப் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட இதர விஷயங்களையும் கணக்கில் கொண்டு பார்த்தால், வரி வருவாயில் சராசரியாக 50 சதவீதம் மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்குமே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய அதிகாரப் பகிர்வு நடவடிக்கை.

கேள்வி: வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாட்டில், விவசாயிகள் பிரச்னை அடிக்கடி எழுவது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தாதா?

பதில்: 50 ஆண்டுகள் இந்த நாட்டையும், பல மாநிலங்களையும் ஆட்சி செய்தது காங்கிரஸ்தானே. குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ள மோடி அரசைக் குறை கூறுவதில் நியாயம் இல்லை.

கேள்வி: ஜி.எஸ்.டி. எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா?

பதில்: ஜி.எஸ்.டி. நீண்டகால பயனை அளிக்கக் கூடிய புரட்சிகரத் திட்டம் என்பதால்தான் அதில் தேவையான திருத்தங்களைச் செய்து அமல்படுத்தியுள்ளோம். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால் பண வீக்கம் குறையும், பொருள்களின் விலை குறையும். இருப்பினும் தொடக்கத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கேள்வி:  சில்லறை வர்த்தகர்கள் முதல் சினிமா துறையினர் வரை ஜிஎஸ்டியில் திருத்தங்கள் கோருகின்றனரே? இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் கருத்து கூட பரபரப்பாக பேசப்படுகிறதே?

பதில்:  நாடு முழுவதிலும் இருந்து வரி குறைப்பு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. மத்திய அரசின் கைகளில் இல்லை. மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன.

எனவே, தங்களுக்கு ஜி.எஸ்.டி.யால் பிரச்னை வரும் என்று கருதுகிறவர்கள் முதலில் அந்தந்த மாநில அரசுகளைத்தான் அணுக வேண்டும். மாநில அரசு கவுன்சிலை அணுகினால், அனைவரின் ஒப்புதலுடன் திருத்தம் கொண்டு வர முடியும்.

திரைத் துறைக்கு 28 சதவீத வரி விதிப்பு என்பதைக் குறைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் என்னிடமும் பேசினார். வட்டார மொழித் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நான் ஏற்கெனவே கூறியபடி இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.

கேள்வி: அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே?

பதில்: அது முற்றிலும் தவறான பிரசாரம். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதிமுகவின் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட. தமிழகத்தைப் பொருத்தவரை ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ யார் முதல்வராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்தே பாஜக செயல்படும். ஏனெனில் எங்களின் இறுதி இலக்கு நாட்டை முன்னேற்றுவதே.

இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுவதை அரசியலுக்காக என்று கருதிக் கொள்ளக் கூடாது. தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதிமுகவினர் அதை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். அடிக்கடி தேர்தல் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அது நாட்டுக்கும் நல்லது அல்ல.

இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதில் அளித்தார்.