சிரியா போர் விமானத்தை அமெரிக்கா விமானம் சுட்டுவீழ்த்தியது

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 22:14

டமாஸ்கஸ்

சிரியாவின் போர் விமானம் ஒன்றை அமெரிக்க விமானம் நேற்று சுட்டுவீழ்த்தியது.

கடந்த 6 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் களம் இறங்கியுள்ளன.


சிரியாவில் ரக்கா பகுதி ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்குகிறது. அங்கு அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சென்ற வாரம் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் குர்தீஷ் மற்றும் அரேபிய போராளிகள், ரக்கா பகுதியில் நுழைந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்ற முயன்றனர். அந்நாட்டுசிரியா ராணுவ படைகள் ரக்கா பகுதியில் நடைபெறும் போரில் ஈடுபடவில்லை. அவர்கள் எண்ணெய் வளமிக்க மாகாணமான தேர் எஸோர் பகுதியை பாதுகாக்க முழுமுயற்சி எடுத்து வருகின்றன.

ஈரான் நேற்று சிரியாவின் வடகிழக்கு மாகாணமான தேர் எஸோர் பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவின் சூப்பர் ஹார்னட் விமானம் நேற்று மாலை 6.43 மணியளவில் தெற்கு ரக்கா மாகாணத்தில் எஸ் யூ-22 ரக சிரியா போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். இதனை அமெரிக்க கூட்டணி படைகள் பின்னர் உறுதி செய்தன.

இம்மாத தொடக்கத்தில் சிரியாவின் ஆளில்லாத விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. தற்போது முதன் முறையாக சிரியா அரசுப் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரிய அரசுப் படையை இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக அமெரிக்க ராணுவம் சுட்டுவீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.