எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கட்டடம் என்ற பெயரில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு ரூ. 33 கோடியில் புதிய கட்டடம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 20:17

சென்னை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி 110ன் கீழ் ஐந்து துறைகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டார். பள்ளிக் கல்வி இயக்ககத்தில் ரூ. 33 கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கட்டடம் என அதற்கு பெயரிடப்படும் என முதல்வர் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள் வருமாறு:

1. அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக்  கணினி  ஆய்வகங்கள் (Hitech Labs) ஏற்படுத்தப்படும்.  இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது Smart Class Room ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

3. ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்" என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

4. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்கல்வித் துறை

43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள்,  ஆய்வகங்கள், நூலகங்கள்,  கழிப்பறைகள்,  ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள்,  கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் இரண்டாண்டுகளில் முடிக்கப்படும்.

இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டடங்கள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள்" என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கென, முதற்கட்டமாக இந்த ஆண்டு 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.  மீதமுள்ள 105 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.

2. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18 ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும்.  இதற்காக அரசுக்கு 100 கோடியே  31  லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

3. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18-ஆம் கல்வியாண்டிலிருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய்  செலவு  ஏற்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

1.காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டதால், இந்த வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் ஒன்று 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். 

2. திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பந்தய குளம், பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்படும்.

3. காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில், கெனாயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பது நமது பொது விநியோகத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.  நாடு முழுவதும் செயல்படும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நாம் பின்பற்றினாலும் வருமான அடிப்படையினை கருத்தில் கொள்ளாமல், பாகுபாடின்றி  அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டம் தனி சிறப்பாக கருதப்படுகின்றது.  இப்படிப்பட்ட புரட்சிகரமான  முன்னோடி திட்டங்களைத் தான் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு மக்களின் நலன் கருதி செயல்படுத்தினார்கள். 

இச்சிறப்பு மிக்க நமது பொது விநியோகத் திட்டத்திற்கு நம் கூட்டுறவு சங்கங்களே பக்கபலமாக இருக்கின்றன.  தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் இச்சங்கங்கள் வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு, மாண்புமிகு அம்மா அவர்களின் எண்ணப்படியே கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம்  சிறப்பான திட்டங்களைத் தீட்டி அதை மக்களின் நலனுக்காக செயல்படுத்துகிறது.  அதன் அடிப்படையில், கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட வேண்டுமென்பதாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  விரல்ரேகை படிப்பி (Finger Print Reader) மற்றும் அச்சுப்பொறி  வழங்கப்படும்.

நபார்டு வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு மைய வங்கியியல் கணினி சேவை முறை (CORE Banking Solution) 134.67 கோடி ரூபாய் செலவில் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. கூட்டுறவு நிறுவனங்களில், சொந்த அடிமனை இருந்தும், வாடகைக் கட்டடங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையை செயல்படுத்திட, இந்த ஆண்டில் 114 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 23 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். மேலும், மதுரை மாவட்டம், விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70 இலட்சம்  ரூபாய் செலவில் வணிக வளாகம்  கட்டப்படும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே  சேவை அளிக்கும் பொருட்டு திருச்சி மற்றும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின்

15 புதிய கிளைகள் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களின் தோற்றப் பொலிவினை அழகுபடுத்தும் பொருட்டு, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவும்,  வணிக வங்கிகளுக்கு ஈடாக கூட்டுறவு சங்கங்களின் சேவையை வழங்க 27 கூட்டுறவு நிறுவனங்கள் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.

சிறு வணிகர்கள், தனியாரிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெறுவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும்  சிறு வணிகக் கடன் உச்ச வரம்பினை 10,000/-   ரூபாயிலிருந்து  25,000/- ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

சென்னை பெருநகரை ஒட்டியுள்ள  மாதவரம் பகுதியில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விஞ்ஞான  முறையிலான, இயந்திர கையாளுமை திறனுடன் கூடிய  நவீன சேமிப்புக் கிடங்கு 25 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு கொள்ளளவினை அதிகப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் 14 சொந்த இடங்களில், 50 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சூரிய ஒளி கூரை கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில்  இருக்கும் 25 கிடங்கு வளாகங்களுக்கு உட்புற சாலை வசதி, சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, ஓய்வு அறை மற்றும்  அடிப்படை வசதிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பழைய 15 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகளும், அங்கு பணிபுரியும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் மற்றும் வாகன ஒட்டுநர்களின் நலன் சார்ந்த பணிகளும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதை இம்மான்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை

வீர தீர செயல் மற்றும் எதிர்பாராத அசம்பாவித சூழ்நிலை போன்ற நேர்வுகளிலும், காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற இழப்பீட்டுத்  தொகைக்கு இணையாக வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து  10 இலட்சம் ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளூர் மக்களை இயற்கைச் சுற்றுலா திட்டத்தில் முழுமையாக பங்கேற்கச் செய்து அவர்களது வேலைவாய்ப்பை பெருக்குவதுடன், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் வகையிலும் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலாக் கொள்கை, 2017 உருவாக்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

பவானி ஆற்று நீரின் தன்மையை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கத்துடன் நடப்பு நிதியாண்டில் பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர்த் தர கண்காணிப்பு நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.  இந்நிலையங்கள் தலைமை அலுவலகம் மற்றும் உரிய மாவட்ட அலுவலகங்களுடன் இணைய வழியாக  இணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இவ்வாறு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் விதி 110ன் கீழ் திங்களன்று கல்வித்துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.


முதல்வர் 110ன் கீழ் வெளியிட்ட கல்வித்துறை அறிக்கையை முழுமையாகக் காண இங்கே சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B93WycD7fv36T1NtQ0NQOVhKeTQ