அதி வேக ரயில்களில் இடைவிடாத இண்டர்நெட் இணைப்பு: ரூ. 5 ஆயிரம் கோடியில் திட்டம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 10:39


புதுடில்லி:

அதிவேக ரயில்களில் பயணிகளுக்கு இடைவிடாத இண்டர்நெட் இணைப்பு கொடுக்கும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடியில் உயர்வேக மொபைல் தகவல் தொடர்பு அமைப்பு அமைக்கப்படுகிறது.

   இந்தியாவில் ரயில்களும், ரயில் நிலையங்களும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே ரயில் பயணிகளுக்கு   முக்கிய வழித்தடங்களில் விரைவில் தடையின்றி இண்டர்நெட் இணைப்பு கொடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக  ரூ. 5 ஆயிரம் கோடியில் அதிவேக மொபைல் தகவல் தொடர்பு அமைக்கப்பட உள்ளது. பொது–தனியார் கூட்டு திட்டத்தின் கீழ் இந்த அமைப்புகள் உருவாக்கப்படும். இது தவிர ரயில் சொத்துக்களை கண்காணிக்கவும், தண்டவாளங்கள் நிலைமை பற்றி  ரயில் ஊழியர்கள், ரயில் டிரைவர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள்  இடையே நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்.

   தற்போது இது போன்ற பயன்பாடுகளுக்கு வயர்லஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. ரயில் டிரைவர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாடு இடங்களுக்கும் பேசிக்கொள்வதற்கு  ரயில்வேக்களின் மொபைல் தொடர்புக்கான குளோபல் சிஸ்டம் நிறுவப்பட்டு இருக்கிறது. அதிவேக தொடர்பு அமைப்பு உருவாக்க இதில் இருந்து நீண்ட கால பரிமாற்றத்திற்கான  நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று ரயில்வே அமைச்சக டெலிகாம் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

     பல்வேறு ரயில் பாதுகாப்பு, ரயில் நிர்வாக முறைக்கு ஆதரவு அளிப்பது மற்றும்  பயணிகளுக்கு பிராட்பேண்ட் சேவை போன்றவைகளை கொடுப்பதே இந்த அதி வேக மொபைல் தகவல் தொடர்பு அமைப்பின் நோக்கம் ஆகும். பயணம் செய்யும்போது ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தடையில்லாத இண்டர்நெட் இணைப்பு வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.  ரயில்பாதைகளில் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவும்போது  இந்த அமைப்புகளினால்  பயணிகளின் தேவையை நிறைவு செய்யப்படும்.

     அதி வேக மொபைல் தொடர்பு அமைப்பு மூலம் ரயில் இயக்கத்தின்போது பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்  ரயில்வே ஊழியர்கள் மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இடையே அடுத்த தலைமுறைக்கான மொபைல் ரயில் ரேடியோ தொடர்பு ஏற்படுத்த முடியும். மீடியாக்களின் செய்திகளையும் பயணிகள் கேட்கலாம். ரயில் நிலையங்களில் சமூக வலைத்தளங்களையும் அணுகலாம்.

     தற்போது 2541 கி.மீ. பாதையில் மொபைல் ரயில் ரேடியோ தொடர்பு முறையை ரயில்வே செயல்படுத்தி இருக்கிறது. மேலும் 3408 கி.மீ. பாதையில் இந்த அமைப்பு அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் சொத்துக்களை கண்காணிப்பதோடு   பயணிகளுக்கு இண்டர்நெட் வசதி, வீடியோ , மற்ற பொழுதுபோக்கு தேவைகள் போன்ற பயண அனுபவத்தையும் கொடுக்கும்.