ஓட்டுக்கு கரன்சி சப்ளை முதல்வர், அமைச்சர்கள், தினகரன் மீது வழக்கு:தேர்தல் கமிஷன் அதிரடி

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:45


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ. 89 கோடி ஓட்டுக்கு கரன்சி சப்ளை செய்தது தொடர்பாக, முதல்வர் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லுார் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர், மற்றும் வேட்பாளர் தினகரன் மீது வழக்கு போட தேர்தல் கமிஷன் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் இபிஎஸ் அரசுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. தற்போது தேர்தல் கமிஷன் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்கள் உருவாகி வருகிறது. சசி குடும்பம் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டியதன் எதிரொலி, எம்.ஜி.ஆர்., ஜெ., கட்டிக்காத்த அதிமுக அலங்கோலமாகி வருகிறது.

புது நெருக்கடி: ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் இபிஎஸ் (எடப்பாடி பழனிச்சாமி) அரசுக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா  புது நெருக்கடி வந்துள்ளது. வேட்பாளராகப் போட்டியிட்ட தினகரன், முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லுார் ராஜு, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத்தொடர தலைமைத் தேர்தல் கமிஷன் கடந்த ஏப்ரல் 18ம் தேதியே பரிந்துரை செய்திருப்பது, ஆர்டிஐ மூலம் சென்னை வக்கீல் வைரக்கண்ணன் கேட்டுப் பெற்ற தகவலால் அம்பலமாகியுள்ளது. இதன் அடிப்படையில், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வைரக்கண்ணன் தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.  

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் என 3 அணிகள் உதயமாகியுள்ளது.  

அதிமுக அணிகள் பிரச்னை, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் போர்க்கொடி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்கு, கூவத்துாரில் எம்எல்ஏக்களிடம் நடந்த குதிரைபேர வீடியோ ஆதாரம் அடிப்படையில் ஐகோர்ட்டில் சமீபத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு என, ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகளால் எடப்பாடி பழனிச்சாமி அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புது நெருக்கடி வந்துள்ளது.  

ரூ.89 கோடி சப்ளை :  ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில், அதிமுகவின் சசிகலா அணி வேட்பாளராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் களமிறங்கினார். தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட அவரது தேர்தல் பொறுப்பாளர்களாக முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செயல்பட்டனர்.  

தினகரனை வெற்றிபெற வைப்பதற்காக தொகுதி முழுக்க வீடுவீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்யப்பட்டது. நுாதனமான முறைகளில், பரிசுப்பொருட்களும் அள்ளி வழங்கப்பட்டன. இவை குறித்து தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிந்தன. இதனால், வரலாறு காணாத வகையில், சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி நியமனம், அக்கம்பக்க தொகுதிகளிலும் ரெய்டு நடந்த அதிகாரம் கொண்ட சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் நியமனம், துணைராணுவப் படைகள் குவிப்பு என, தேர்தல் கமிஷன் கடும் கிடுக்கிப்பிடிகளை அமல்படுத்தியது. ஆனால், இந்த நடவடிக்கைகளால் பட்டுவாடா தர்பாரை ஒடுக்க முடியவில்லை. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தலைமைத் தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.  

தேர்தல் ரத்து குறித்த அறிவிப்பில், ‘ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி அளவில் பட்டுவாடா நடந்திருப்பதற்கான துல்லியமான கணக்கு விவரங்கள் கொண்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன’ என்று தேர்தல் கமிஷன் குறிப்பிட்டிருந்தது.  

பட்டுவாடா ஆவணங்களில், முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகள் மூலம் எத்தனை வாக்காளர்களுக்கு எவ்வளவு தொகை பட்டுவாடா நடந்தது? என்பதற்கான கணக்கு விவரங்கள் இருந்தன. இதனால், இவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என திமுக, பாமக, பன்னீர் அணி உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் வரவில்லை.  

திடீர் ‘அம்பலம்’: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஐகோர்ட் வக்கீல் வைரக்கண்ணன், தலைமைத் தேர்தல் கமிஷனிடம் தகவல் உரிமை சட்டப்படி தகவல் கேட்டிருந்தார்.  

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா முறைகேட்டில் ஈடுபட்ட தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், வேலுமணி, செல்லுார் ராஜு, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது என்ன நடவடிக்கையை தலைமைத்தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது?’ என்ற கேள்விக்கு, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரி மூலம் வழக்குப்பதிவு செய்யுமாறு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஏப்ரல் 18ம் தேதி அனுப்பிய கடிதத்திலேயே தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது’ என்று தலைமைத் தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது.  

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தலைமைத் தேர்தல் கமிஷன் ஏப்.18ம் தேதி அனுப்பிய உத்தரவு கடிதத்தில், ‘வருமான வரித்துறை 9ம் தேதி அனுப்பிய அறிக்கை அடிப்படையில், பணப்பட்டுவாடாவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இபிகோ 171பி குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அறிக்கை நகலும் இந்த உத்தரவு கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  

இன்று விசாரணை: இந்த ஆர்.டி.ஐ. தகவல் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வைரக்கண்ணு சார்பில் வக்கீல் இளங்கோவன் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இதில், எதிர்மனுதாரர்களாக தலைமைத் தேர்தல் கமிஷன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

மனுவில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தலைமைத் தேர்தல் கமிஷன் ஏப்ரல் 18ம் தேதியே உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தலைமைத் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி, சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று முறையிடப்பட்டுள்ளது.  

இந்த அதிரடி வழக்கு, ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் கொண்ட முதல் பெஞ்ச் முன், இன்று (19ம் தேதி) விசாரணைக்கு வருகிறது, வைரக்கண்ணு சார்பில், தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவரும் மூத்த வக்கீலுமான எஸ்.துரைசாமி ஆஜராகவுள்ளார்.  

வக்கீல் இளங்கோவன் அளித்த பேட்டியில், ‘‘இந்த வழக்கு, முழுமையான ஆதார ஆவணங்கள் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய பணப்பட்டுவாடா ஆவணத்தில் இடம்பெற்றுள்ள முதல்வர், அமைச்சர்கள், இந்நாள் முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, ஐகோர்ட் விசாரணையின்போது வலியுறுத்துவோம்’’ என்றார்.

திடீர் உத்தரவு

தேர்தல் கமிஷனின் பரிந்துரை மீது 3 மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், உடனடியாக போலீசில் புகார் அளிக்க இந்திய தலைமை தேர்தல் கமிஷன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனிடையே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு தொடர்பாக, தகவல் எதுவும் வரவில்லை என கூறினார்.