வன்முறையை வேண்டாம்! கூர்க்காலாந்து போராட்டக்காரர்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 03:14

புதுடில்லி:

வன்முறையை நாடவேண்டாம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்று கூர்க்காலாந்து கோரும் போராட்டக்காரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேற்கு வங்கத்தை பிரித்து கூர்க்காலாந்து என தனிமாநிலம் அமைக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.

நேற்று டார்ஜிலிங்கில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்ததாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது. போலீசார் இதை மறுத்துள்ளனர்.

இந்நிலையில், வன்முறையை நாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனநாயக நாட்டில் பேச்சுவார்த்தை மூலம் தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ராஜ்நாத் சிங் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராஜ்நாத் சிங் டார்ஜிலிங் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். நேற்றும் ராஜ்நாத் சிங் மம்தாவிடம் பேசி இருந்தார்.

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பொய்களை பரப்பி வருவதாக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குருங் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் குழுக்கள் மேற்கு வங்கத்தில் பிரிவினையைத் தூண்டி விடுவதாக மம்தா குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்குப் பதில் அளித்துள்ள பிமல் குருங், “மம்தாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவர் பொய்களின் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறார். இது அரசியல் போராட்டம் அல்ல. நாங்கள் எங்கள் அடையாளத்துக்காக போராடுகிறோம். கூர்க்காலாந்து தனி மாநிலம் அமையும் வரை எங்கள் போராட்டம் ஓயப்போவது இல்லை” என்றார்.