ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரியை குறைக்க வலியுறுத்தியுள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 02:15

புதுடில்லி:

ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதற்காக ஜூலை முதல் தேதியிலிருந்து சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவை மீதான வரி குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.

ஜிஎஸ்டி கவுன்சில் 16 முறை கூடியுள்ளது. இக்கூட்டங்களின்போது பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி நிரணயிக்கப்பட்டது.


இந்நிலையில், சில பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது ஊதுபத்தி, இன்சுலின் உள்ளிட்ட 66 பொருள்களின் மீதான வரி குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 17-வது கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்கள், மறுசுழற்சி செய்யும் பொருட்கள், டிராக்டர் உதிரி பாகங்களுக்கும் மற்றும் ஜவுளிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், சானிட்டரி நாப்கினுக்கு முற்றிலும் வரியை குறைக்க இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹோட்டல், விடுதிகளுக்கு வரி குறைக்க கவுன்சில் கூட்டத்தில முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.