இந்திய வங்கிகளின் வராக்கடன் இன்னும் அதிகரிக்கும் !

பதிவு செய்த நாள் : 31 மே 2017 03:40

புதுடில்லி:

2018ம் ஆண்டு மார்ச்சில் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு மொத்த கடனில் 15 சதவீதமாக உயரும் என்று எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2019ம் ஆண்டிலும் வராக்கடன் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் வராக்கடன்களால் வங்கிகளுக்கு மூலதனத் தேவை அதிகரிக்கும். இது லாபத்தைக் குறைக்கும் என்றும் எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
‘இந்திய வங்கிகளின் வராக்கடன் பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லை’ என்ற தலைப்பில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகி உள்ளது.
பேசல் III விதிப்படியான மூலதனத் தேவையை பூர்த்தி செய்ய இந்திய பொதுத்துறை வங்கிகள் வெளியிலிருந்து வரும் மூலதனத்தை நம்ப வேண்டி இருக்கும்.

 அல்லது வங்கிக்கு சொந்தமான முக்கியத்துவம் இல்லாத சில சொத்துகளை விற்பனை செய்ய வேண்டி வரும் என்றும் அந்நிறுவம் குறிப்பிட்டுள்ளது.

2016 முதல் 2019ம் ஆண்டு வரை பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன செலவுக்காக ரூ.70,000 கோடி தருவதாக இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதில் 2018, 2019ம் ஆண்டுகளுக்கு தலா ரூ.10,000 கோடியை இந்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை பொதுத்துறை வங்கிகளின் பிரச்சினையை தீர்க்க போதுமானதாக இருக்காது என்றும் எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு 6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.