பச்சைபட்டு உடுத்தி தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

பதிவு செய்த நாள் : 10 மே 2017 19:47

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாநகரில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும். சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 26 ஆம் தேதி விழா தொடங்கியது.
மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 5ஆம் தேதி பட்டாபிஷேகமும், 6ஆம் தேதி திக் விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.

இந்த நிலையில்அழகர்மலையிலிருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகராக தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (8ஆம் தேதி) இரவு 7 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியிடம் ஆலய பொறுப்பை ஒப்படைத்து விட்டு புறப்பட்ட கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.நேற்று மாலை தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. பக்தர்களின் வெள்ளத்தில் நீந்திய கள்ளழகர், இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரசன்னமானார். அங்கு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அவர், நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு கருப்பணசாமி கோவிலுக்கு கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

அதிகாலை 3 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகர் தங்க குதிரையில் இன்று காலை 6.30 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் தாம்பாளத்தில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி அழகரை வரவேற்றனர்.

அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினால் அந்த வருடம் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பாதுகாப்பு பணியில் 3000க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.