பாட்மின்டன்: சிந்து ‘நம்பர்-2’

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2017 00:25

புதுடில்லி,

பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை சிந்து முதன்முறையாக நம்பர்&2 இடத்துக்கு முன்னேறினார்.
பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து, 5வது இடத்தில் இருந்து முதன்முறையாக 2வது இடத்துக்கு முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, சமீபத்தில் முடிந்த இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் பைனலில், ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இந்த ஆண்டு தனது 2வது பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தரவரிசையில் 5வது இடம் பிடித்திருந்தது சிறந்த இடமாக இருந்தது. மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல், 8வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனதைபேயின் டெய் டிஜு யிங் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஸ்பெயினின் கரோலினா மரின், 3வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் (20வது இடம்), பிரனாய் (26வது) தலா ஒரு இடம் பின்தள்ளப்பட்டனர். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா, 38வது இடத்தில் இருந்து 27வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் ஸ்ரீகாந்த் (28வது இடம்), சாய் பிரனீத் (32வது), சவுரப் வர்மா (41வது) முன்னேற்றம் கண்டனர்.