ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுன்ட்

பதிவு செய்த நாள்

21
ஜனவரி 2016
01:04


நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரோட்டில் ஆரல்வாய்மொழி அருகே காற்றாடிமலையில் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை ஆலயம் உள்ளது. ஆரல்வாய்மொழி மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கி.மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது.

 குமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தில் 1712 ஏப்ரல் 23ம் தேதி நாயர் குலத்தில் பிறந்தவர் நீலகண்டபிள்ளை. நீலகண்டபிள்ளை தனது சிறு வயதிலேயே சமஸ்கிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். இளைஞன் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.

 அதன் பின் அவர் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அவருக்கும், திங்கள்நகர் அருகே மேக்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடந்தது.

 கடந்த 1741ல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. அதன் படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெநேடிச்டுஸ்தே டிலனாய் அவருடைய படைகளுடன் சிறைபிடிக்கப்பட்டார்.

 நாளடைவில் டிலனாய் நீலகண்டபிள்ளையின் நண்பரானார். அவர் கிறிஸ்தவத்தை நீலகண்டபிள்ளைக்கு அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறிஸ்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்கு பெற்றார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குதந்தையாக பணிபுரிந்த பத்தீஸ்தா பத்தேரி, நீலகண்டபிள்ளைக்கு திருமுழுக்கு வழங்கி, ‘தேவசகாயம்’ எனும் பொருள் தரும் லாசர் எனும் பெயரை சூட்டினார்.

 பலரிடமும் இயேசு கிறிஸ்து பற்றி போதித்து பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர் ஆனார்.

 தேவசகாயம்பிள்ளை மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே அவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தனர். ஆனால், கிறிஸ்துவுக்காக தனது உயிரையும் கொடுக்க ஆயத்தமான தேவசகாயம்பிள்ளை தம் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.

 இதனால் கோபம் கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை சிறையில் அடைத்தார். 1752ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தோவசகாயம்பிள்ளை அன்றைய திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்.

 தான் உயிரிழப்பதற்கு முன் தன்னை சந்தித்த குருவிடம் இருந்து நற்கருணை பெற்று கொண்டார். தேவசகாயத்தின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து கோட்டாறு புனித சவேரியார் கோயிலில் அடக்கம் செய்தனர்.

 தேவசகாயம்பிள்ளை உயிரிழந்த இடம் இன்று தேவசகாயம் மவுன்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. அவர் உயிரிழந்த இடத்திற்கு சென்று மக்கள் இறைவேண்டல் நடத்த துவங்கினர். இவ்வாறு அதிகாரப்பூர்வமாக ‘மறைசாட்சி’ என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும், செயல்பாட்டிலும் அவர் மறைசாட்சியாக கருதப்பட்டார்.

 தற்போது தேவசகாயம்பிள்ளை மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் புனிதர் பட்டம் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.