பீர் முஹமது ஒலியுல்லா தர்கா

பதிவு செய்த நாள்

12
ஜனவரி 2016
02:34

ஞானமாமேதை ஷெய்கு பீர் முஹமது ஒலியுல்லா தர்கா தமிழகத்தின் கடைக்கோடியான குமரி மாவட்டத்தில், திருவனந்தபுரம் – நாகர்கோவில் என்.எச்., 47 ரோட்டில், தக்கலை அருகே மேட்டுக்கடை எனும் பகுதியில் அமைத்துள்ளது. இயற்கை எழிலும், ஏற்றமும், வரலாற்று சிறப்பும் கொண்டு திகழும் குமரி மாவட்டத்தின் நடுநகர்; நாகர்கோவிலில் இருந்து 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது தக்கலை.

 தென் திருவாங்கூர் அரசின் தலைநகராய் விளங்கிய பத்மனாபபுரம் அருகே அமைந்துள்ள இச்சிற்றூரில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வானில் மின்னி திகழும் மெஞ்ஞான அறிவுச்சுடர் பீர்முஹமது சாஹிப் மாண்பார் மறைவிடம் அமைந்துள்ளது. தமிழிலக்கிய உலகை, ஆன்மிக மெஞ்ஞான அறிவொளி பெற்ற ஆன்றோரை உற்று நோக்கச்செய்யும் உயர் தலம் தக்கலை; பீர்முஹமது அப்பாவின் பெருமை பெற்ற நிலம்.

 கடந்த 1939-ல் தோற்றம் கண்ட சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் அசோஸியேஷன் உறுப்பினர்களால் கடந்த 75 ஆண்டுகளாக ஞானமேதை பீர் முஹமது அப்பாவின் நினைவு நாளான இஸ்லாமிய மாதம் ராஜபு 14-ம் நாள் இரவு அப்பாவின் ஞானப்புகழ்ச்சி நன்னூலின் பகுதிகள் பாரம்பரிய இசையில் பயிலப்படுவது சிறப்பு.

 மேலும், பீர் முஹமது அப்பாவின் நூல்களின் சிறப்பு பற்றிய உரை நிகழ்ச்சிகள் அவ்வப்போது சங்கத்தினரால் உள்ளூர் மற்றும் வெளியூர் மார்க்க அறிஞர்கள், மற்றும் பேராசிரியர்களை அழைத்து நிகழ்த்தப்படுவதும் உண்டு.

 தத்துவ அறிஞர் பீர் முஹமது நெல்லை மாவட்டம், தென்காசி கணிகபுரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சிறுமலுக்கர். தாயார் ஆமீனா. இவரின் காலத்தை பற்றிய சரியான தடங்கள் இல்லை. கிபி  1013ம்  நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம். இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி 800க்கும் 1,100க்கும் இடைப்பட்டது.  108 சித்தர்களின் வரிசையில் பீர் முஹமது அப்பா பெயரும் இடம் பெற்றுள்ளது.  சமஸ்கிருத  மருத்துவ நூல்கள் இவரை சித்த நாகார்ஜுனர்  என்றே குறிப்பிடுகின்றன.

 இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிலகாலம் மதப்பணி செய்தார். அவர் நீண்ட காலம் தங்கியிருந்த கேரள பகுதிக்கு பீர்மேடு எனும் பெயர் நிலவுகிறது. பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார்.

 பீர் முஹமது தக்கலையில்  நெசவுத்தொழில்  செய்து கொண்டே, பல்வேறு விதமான  இலக்கிய செயல்பாடுகளிலும் இறங்கினார். தென்காசியில் இருந்ததால், அவரிடம் சைவ சமய தாக்கம் இருந்தது. அவருடைய பாடல்கள் பலவற்றில் சைவ சமய கூறுகள் உள்ளன. அவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல்வேறு அற்புதங்கள் செவிவழி கதைகளாக இப்பகுதியில் வலம் வருகின்றன.

 சித்தர்களின் தியான கலை, மூச்சுக்கலை போன்றவற்றை பயின்றார். தமிழ்  சித்தர்களின்  மூச்சுக்கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறுவித  புலன்  செயல்பாடுகள் இவரிடத்திலும் இருந்ததாக கருதப்படுகிறது. தக்கலை பகுதியில் சில காலம் இருந்து ஞானம் உபதேசித்த பீர் முஹமது அப்பாவின் இறுதி நாளும் தக்கலையிலேயே முடிந்தது.

 தக்கலை பீர் முஷமது அப்பா , காலத்தால் மூத்த தமிழக  சூபிக் கவிஞர். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறை நேசச்செல்வர்.திருக்குர்– ஆனின்  உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞான கவிதைகள் வாயிலாக மக்களுக்கு தந்தவர். அவருடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கி கொள்ளும் வண்ணம் எளிமையானவை.

 அவரது நினைவாக அமைந்துள்ள தக்கலை அஞ்சுவன்னம் பீர் முஹமது ஒலியுல்லா தர்காவில், தமிழ் முஸ்லிம்களிடையே ஹாஜா முயீனுதீன் சிஷ்தி ஆண்டகை புகழ்மாலை பாராயண மஜ்லீசுகள் மற்றும் சிஷ்தீயா தரீகா சார்ந்தவர்களின் இறை தோத்திர பாராயண கூடல்கள் தொடர்ந்து இன்று வரை இங்கு நடக்கும்   பாரம்பரியமும் காணப்படுகிறது.