இலவசம் வழங்கினாலும் ம.பி.யில் பள்ளிக்கு வராத மாணவிகள் அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2017 09:19


போபால்:

புத்தகம், சைக்கிள்,சீருடை இலவசமாக வழங்கினாலும் மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கு வராத மாணவிகள் எண்ணிக்கை  8.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

   2016ம் ஆண்டின் சில மாநிலங்களின்  வருடாந்திர கல்வி பற்றிய அறிக்கையை டில்லியில் சமீபத்தில் பிரதாம் கல்வி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில்  3 மாநிலங்களில்  பள்ளி மாணவிகள்(11 முதல் 14 வயது உள்ளவர்கள்) படிப்பை நிறுத்துவது 8 சதவீதத்திற்கும் அதிகமாகி உள்ளது. உ.பி.(9.9 சதவீதம்), ராஜஸ்தான்(9.7 சதவீதம்) என்று இருந்ததில் இப்போது மத்திய பிரதேசமும்(8.5 சதவீதம்) இணைந்து உள்ளது.  புத்தகம்,சைக்கிள், சீருடையுடன் ஸ்காலர்ஷிப் வழங்கினாலும் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

   2014ம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் இது 6.2 சதவீதமாக இருந்தது. இது இப்போது 8.5 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் 83 ஆயிரத்து 962 முதன்மை நிலை,30 ஆயிரத்து 449 இடைநிலை, 3849 மேல்நிலை,4764 உயர்நிலைப்பள்ளிகள் உள்பட 1.22 லட்சம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இருப்பினும் மாநில கட்டமைப்பில் கல்வித்தரம் குறைந்திருப்பதை இந்த நிலைமை எடுத்துக்காட்டுகிறது.

  கிராமப்புறங்களில் 7முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகள் 2.9 சதவீதம் சேரவில்லை. 15 முதல் 16 வயது வரை உள்ள மாணவிகள் 29 சதவீதம் பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள். 8ம் வகுப்பு மாணவர்களில் 2.9 சதவீதம் பேருக்கு  எழுத்துக்களை  கூட படிக்க தெரியவில்லை. இவர்களில்  13.5 சதவீதம் பேருக்கு 1ம் வகுப்பு பாடத்தைதான் படிக்க முடிகிறது. 8ம் வகுப்பு மாணவர்களில் 64.3 சதவீதம்பேருக்கு 2ம் வகுப்பு புத்தகத்தைதான் படிக்க முடிகிறது.

   5ம் வகுப்பில் 6.7 சதவீதத்தினரும், 8ம் வகுப்பில் 1.6 சதவீதத்தினரும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை கூட சொல்லதெரியவில்லை. 8ம் வகுப்பில் 8.1 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில கேபிடல் எழுத்துக்களை படிக்க தெரியவில்லை. 5.6 சதவீத பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை.  பள்ளிகளின் 35.9 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது. 23.4 சதவீதம் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை இல்லை.

   அதே சமயம் தமிழகம்,மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப்,அசாம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், மத்தியபிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் கற்கும்  தரத்தின்  அளவு அதிகரித்து இருக்கிறது. தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்து இருக்கிறது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.