நாகர்கோவில் கஸ்பா சபை (ஹோம் சர்ச்)

பதிவு செய்த நாள்

10
ஜனவரி 2016
01:20

தெற்கு ஆசியாவிலேயே கைதிகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய சர்ச் நாகர்கோவில் கஸ்பா சபை எனும் ஹோம் சர்ச். கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த சர்ச்சை கற்கோயில் என்றும் அழைக்கின்றனர். தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பழமையான பிராட்டஸ்டன்ட் சர்ச்களில் இதுவும் ஒன்று.

 ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. திருவாங்கூர் நாட்டின் முதல் மேஜர் சர்ச்சாகவும் இருந்தது. இது 200 ஆண்டு கால மிகப்பெரும் வரலாறு கொண்டது. தற்போது தற்போது தெற்கு ஆசியாவின் சபைகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட சர்ச்சாக விளங்கி வருகிறது.

 தென் திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவர் என்ற பெருமை மயிலாடி வேதமாணிக்கத்தையே சாரும். அவருடன் சேர்ந்து மயிலாடியில் 1809ல் கிறிஸ்தவ  சபையை ரிங்கிள் தவுபே துவங்கினார்.

 அவருக்கு பின் 1818ல் மீட் ஐயர் மிஷனரி தலைமையிடத்தை நாகர்கோவிலுக்கு மாற்றினார். அங்கு சர்ச் கட்டும் பணி 1819ல் துவங்கியது. பாஸ்டர் வில்லியம் தொபியாஸ் ரிங்கிள் தவுபே மேற்பார்வையில் கட்டப்பட்டது. முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டதால் இதற்கு ‘கற்கோயில்' என்ற பெயரும் உண்டு.


இங்கு கட்டட வேலைக்கு சிறைக் கைதிகள் பலர் பயன்படுத்தப்பட்டனர். சர்ச் கட்டி முடிக்க திருவிதாங்கூர் மகாராணி பார்வதிபாய் தம்புராட்டி உட்பட பல மன்னர்கள் ஆதரவும், பொருளுதவியும் அளித்தனர். கிறிஸ்தவ மினிஸ்ட்ரி, சென்னை அரசு மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் பாலமாக விளக்கிய ஜெனரல் ஜாண் முன்றோ நன்கொடையாக வழங்கிய நிலத்தில் இந்த சர்ச் கட்டப்பட்டுள்ளது.

 கிரேக்க கட்டட கலையை பின்பற்றி கட்டப்பட்ட இது 140 அடி நீளமும், 70 அடி அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் 2,500 பேர் அமரும் வகையில் இந்த சர்ச் கட்டப்பட்டுள்ளது.

கற்கள் மற்றும் மரத்தடிகள் கொண்டு வர மகாராணி அனுமதியுன் நாகர்கோவில் நாகராஜா கோயில் யானை பயன்படுத்தப்பட்டது. இப்போது நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அழகு மிளிர காட்சி தருகிறது இந்த கற்கோயில்.

 உலக மொழியியல் அறிஞர்களில் ஒருவராக சிறந்து விளங்கிய வில்லியம் கார்டுவெல் திருமணம் 1930ம் ஆண்டு இந்த ஹோம் சர்ச்சில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.