துாய சவேரியார் பேராலயம், கோட்டாறு

பதிவு செய்த நாள்

10
ஜனவரி 2016
01:17

  குமரி  மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க பேராலயம்.  கோட்டாறு  மறை மாவட்ட தலைமை பேராலயமாக விளங்குகிறது. 1544ல் குமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த துாய சவேரியாரால் இவ்வாலயம் சிறிய அளவில் நிறுவப்பட்டது. இன்று பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 இங்கு மறைசாட்சி  தேவசகாயம்பிள்ளையின்  பூத உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுவதால் இவ்வாலயத்தை பொதுமக்கள்  ‘கேட்ட வரம் தரும் கோட்டாறு துாய சவேரியார் பேராலயம் என்று அழைக்கின்றனர்.

 கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர்என்று போற்றப்படுபவர் துாய சவேரியார். இவருக்கு உலகில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் நாகர்கோவில் கோட்டாறு துாய சவேரியார் பேராலயம்

 மறை பரப்புவதற்காக 1542ல் இந்தியா வந்த துாய சவேரியார் 1544ம் ஆண்டு பூவாறில் இருந்து  பள்ளம்  கடற்கரை ஓரமாக வசித்து வந்த  மீனவ மக்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மனம் திருப்பினார். அன்று வணிக நகரமாக இருந்த கோட்டாற்றில் மனம் திரும்பிய மக்கள் வழிபடுவதற்காக ஒரு சிறிய  மாதா  கோயிலை  திருவிதாங்கூர்  மன்னனின் உதவியோடு நிறுவினார்.

 ஆலய ஆவணங்களின் படி இவ்வாலயம் கி.பி., 1600ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கி.பி., 1603ம் ஆண்டு  இத்தாலியை  சேர்ந்த பாதிரியார் அந்திரயோஸ் புச்சரியோ மரம் மற்றும் களிமண்ணால் ஆலயத்தை விரிவாக்கம் செய்தார். கி.பி., 1713ம் ஆண்டு மேலும் விரிவாக்கி கல்லினால் கட்டப்பட்டது. கி.பி., 1806ம் ஆண்டு  கோல்கத்தாவை சேர்ந்த இன்ஜினியரால் நுணுக்கமான வேலைப்பாடமைந்த ஆலய பீடம் உருவாக்கப்பட்டது.

 கி.பி., 1865ம் ஆண்டு தற்போதைய நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. 1930 மே 26 அன்று இவ்வாலயம்  கொல்லம்  மறை மாவட்டத்தில் இருந்து பிரிந்து கோட்டாறு மறை மாவட்டம் உருவாக்கத்தின் போது பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது.

 துாய சவேரியார் இந்தியாவிற்கு வந்த 400ம் ஆண்டையொட்டி 1942ம் ஆண்டு மணிக்கூண்டு மற்றும்  லூர்து மாதா  கெபி திறக்கப்பட்டது. கி.பி., 1952ம் ஆண்டு ஆலயத்தை மேலும் சிறிது விரிவாக்கி துாய சவேரியார் கட்டிய மாதா ஆலயம் பேராலயத்தின் உட்பகுதியில் வருமாறு மாற்றியமைக்கப்பட்டது.

 கோட்டாறு துாய சவேரியார் பேராலயம் ஜாதி, இன மற்றும் மொழியை கடந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்து வருகிறது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 24ம் தேதி முதல்டிசம்பர்  3ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளன்று குமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.