வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2017 20:02

திருச்சி,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் “ரங்கா” என்ற முழக்கத்துடன் பெருமாளை தரிசித்தனர்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் பெருமைக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 28ம்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 29ம்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலையில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் பத்து நிறைவு நாளில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான “பரமபத வாசல் திறப்பு” எனும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. “ரங்கா… கோவிந்தா…” என கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து அருள்பாலித்தார். நம்பெருமாள் எழுந்தருளியதை காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்களும் பரமபத வாசல் வழியாக சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் இன்று இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். 

மேலும் வருகின்ற 13ஆம் தேதி வரை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்து இருக்கும். 

14ஆம் தேதி மாலை 3.15 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.

15ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது.

16ஆம் தேதி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும்,

17ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் சொர்க்க வாசல் திறந்து இருக்கும்.

மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள், கேசவ பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.

அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தானத்தில்  பரமபத வாசல் திறப்பு

திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் பரமபத வாசல் திறந்த நேரத்தில் பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என கோஷமிட்டவாறு பரமபத வாசலைத் தாண்டி உள்ளே சென்றனர்.