ஆசிய ‘லுாஜ்’ பனிச்சறுக்கு தங்கம் வென்றார் சிவ கேசவன்

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2016 02:15

நகானோ

ஆசிய ‘லுாஜ்’ பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கம் வென்றார்.

ஜப்பானில் உள்ள நகானோ நகரில், ஆசிய ‘லுாஜ்’பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், மணிக்கு 130.4 கி.மீ., வேகத்தில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 39 நிமிடம், 962 வினாடிகளில் கடந்த இந்திய வீரர் சிவ கேசவன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

சமீபத்தில் நடந்த பயிற்சியின் போது இடது காலில் காயமடைந்த சிவ கேசவன், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்றார். இதற்கு முன், கடந்த 2011, 2012ல் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ கேசவன் வென்ற 7வது பதக்கம். 

இதுவரை இவர், 3 தங்கம் (2011, 2012, 2016), 2 வெள்ளி (2009, 2015), 2 வெண்கலம் (2005, 2008) என மொத்தம் 7 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை ஐந்து முறை குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சிவ கேசவன், அடுத்த ஆண்டு ஆஸ்திரியாவில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், வரும் 2018ல் தென் கொரியாவில் நடக்கவுள்ள குளிர் கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். 

இப்போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே ஜப்பானின் டனகா (ஒரு மணி நேரம், 44 நிமிடம், 874 வினாடி, மணிக்கு 124.6 கி.மீ., வேகம்), சீனதைபேயின் லியன் டி–ஆன் (ஒரு மணி நேரம், 45 நிமிடம், 120 வினாடி, மணிக்கு 126.3 கி.மீ., வேகம்) கைப்பற்றினர்.