சபரிமலையில் 26ம் தேதி மண்டல பூஜை

பதிவு செய்த நாள் : 12 டிசம்பர் 2016 08:04

திருவனந்தபுரம்:  சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம், பத்தனம்திட்டை அருகே அமைந்துள்ளது. இங்கு நடக்கும் மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் சிறப்பு மிக்கவை. மண்டல கால பூஜைகள் கடந்த கார்த்திகை முதல் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மண்டல காலத்தின் நிறைவை குறிக்கும் மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடக்கிறது.  

அன்று காலை 11.55க்கும் 12.05க்கும் இடையிலான நேரத்தில் கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் மண்டல பூஜைகள் நடத்தப்படுகிறது. அப்போது, ஐயப்பனுக்கு திருவிதாங்கூர் மன்னர் காணிக்கையாக அளித்த தங்க அங்கியை அணிவித்து பூஜைகள் நடத்தப்படும்.  

இந்த தங்க அங்கி ஊர்வலம் வரும் 22ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆறான்முளாவில் இருந்து புறப்படுகிறது. இது 25ம் தேதி மதியம் 2 மணிக்கு பம்பையை அடையும். 3 மணி வரை தங்க அங்கி பக்தர்கள் தரிசனத்திற்காக பம்பை கணபதி கோயிலில் வைக்கப்படும். தொடர்ந்து 3.15 மணிக்கு தங்க அங்கி ஊர்வலமாக சன்னிதானத்திற்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு சரங்குத்தியை அடையும். அங்கு தேவசம்போர்டு அதிகாரிகள் தங்க அங்கிக்கு வரவேற்பு அளிப்பார்கள்.  

மாலை 6.15 மணிக்கு 18ம் படியேறி கொடிமரம் அருகே தங்க அங்கி கொண்டு வரப்படும். அங்கிருந்து தங்க அங்கி கோயிலுக்குள் கொண்டு செல்லப்படும். பின்னர் ஐயப்பனுக்கு அங்கி சார்த்தி தீபாராதனை நடத்தப்படும். 26ம் தேதி மண்டல பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அதன்பின், மகரவிளக்கு பூஜைகளுக்காக 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.