ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி

பதிவு செய்த நாள் : 27 நவம்பர் 2016 23:35


கோவ்லூன்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங்யிடம் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, கோவ்லூன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 3ம் நிலையான டாய் சூ யிங்கை (சீனா- தைபே) எதிர்க்கொண்டார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிந்துவிடம் தோல்வி கண்டு வெளியேறியவர்தான் டாய் சூ யிங். ஆனால் இம்முறை சிந்துவின் வெற்றிக்கு தடையிட்டார். முதல் செட் தொடங்கியதுமே டாய் சூ யிங் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடக்க ஆட்டமே டாய் சூ யிங் வசம் சென்றது, இருப்பினும் பி.வி. சிந்து சளைக்காமல் விளையாடத் தொடங்கினார். இருவர் புள்ளிக் கணக்கும் 6-6 என்ற சமநிலையை அடைந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக சிந்துவின்  தவறுகளையும், தன் அபாரமான ஆட்டத்தின் மூலமாகவும் டாய் சூ யிங் தொடர்ந்து விளையாடி தனது செட் கணைக்கை அதிகரித்தார்.   தொடர்ச்சியாக புள்ளிகளைப் பெற்று 15-8 என்ற கணக்கில் 7 புள்ளிகள் முன்னிலைப் பெற்றார். சிந்து தொடர்ந்து போராடினார். ஆனால் பலன் இல்லை, இறுதியில் டாய் சூ யிங் 21-15 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

2வது செட் தொடங்கியதும் இரு வீராங்கனைகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7-7, 10-10 என்ற சமநிலையுடன் இருவரது புள்ளிக் கணக்கும் இருந்தது. டாய் சூ யிங் தொடர்ச்சியாக புள்ளிகளைப் பெற்று 17-13 என்ற நிலையில் முன்னிலைப் பெற்றார்.

இறுதி செட்டை 17-21 என்று தனதாக்கினார்.  ஹாங்காங் ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற சிந்துவின் கனவை தகர்த்தார் சீன வீரங்கனை டாய் சூ யிங்.