தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் தி.மு.க.:பா.ஜ., மாநிலச் செயலாளர் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 08:44

நாகர்கோவில்,:

 தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணகர்த்தாவான திமுகவுக்கு மத்திய பா.ஜ., அரசை குறைகூறுவதற்கு தகுதியில்லை என பா.ஜ., மாநில செயலாளர் ராகவன் தெரிவித்தார்.

      நாகர்கோவிலில் நேற்று வந்திருந்த பா.ஜ., மாநில செயலாளர் ராகவன் கூறுகையில், தமிழகத்தின் தலையாய பிரச்னையான விவசாயிகள் பிரச்னை, மீத்தேன் எடுக்கும் திட்டம், கச்சத்தீவு பிரச்னை, இலங்கைப் பிரச்னை நெடுவாசல், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது தி.மு.க.தான். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து தமிழகத்திலும் ஆட்சியில் இருந்த போது தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டுக்கோ ஆக்கப்பூர்வமாக எதுவுமே செய்யாத திமுகவுக்கு பா.ஜ., அரசை குறைகூற தகுதியில்லை. தமிழர் விரோதப் போக்கை கையாண்ட திமுக மத்திய அரசை குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக தனது எம்.எல்.ஏ.க்களுக்கே பணம் கொடுப்பதாக வரும் செய்திகள் தமிழக அரசியலை அதல பாதாளத்தில் தள்ளி விட்டது. அதிமுக தனது கட்சிப்பிரச்னையில் கவனம் செலுத்துவதை விட மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் குறித்து தமிழக அரசு விவசாயிகளுக்கு எடுத்துக்கூறவில்லை. திமுகவினர் தங்கள் ஆட்சியை கலைத்தால் மட்டும் 356 ஐ பற்றி பேசுவார்கள், பிற கட்சியின் ஆட்சியை கலைத்தால் அது பற்றி கவலைப்படமாட்டார்கள். இதுதான் அவர்களது கொள்கை பிடிப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.