பாறசாலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை ‘பா (மோ) சக்கார’ தாத்தா கைது

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 08:44

நாகர்கோவில்:

பாறசாலை அருகே சிறுமியை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த ‘மோசக்கார’ தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : குமரி மாவட்ட எல்லையான பாறசாலை அருகே ஒரு தம்பதியினருக்கு ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சிறுமி அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் வீட்டிற்கு உறவுப்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நடவடிக்கை அப்பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தனிமையில் அழைத்து விசாரித்தபோது சொந்த தாத்தாவே 3 ஆண்டுகளாக அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரிய வந்தது. இது அவ்வப்போது நடந்து வந்துள்ளது. நாளடைவில் விபரம் தெரிந்து சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது இது குறித்து யாரிடமாவது கூறினால் தாய், தந்தையரை கொன்று விடுவதாக முதியவர் மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சைல்டு லைன் அமைப்பு மூலம் பாறசாலை போலீசுக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து முதியவரை போலீசார் கைது செய்ததோடு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.