பரிதாப நிலையில் மக்கள் நலப்பணியாளர்கள் : மாற்றுபணி வழங்கி கருணை காட்டுமா நிர்வாகம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 08:44

அருமனை,:

தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பல ஆண்டுகளாக வாழ்க்கையை இழந்து தவிக்கும் 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்ற மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பஞ்.,களிலும் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுகாதார மற்றும் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்கள் நலப்பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் என்ற நிலையில் நியமிக்கப்பட்ட  13 ஆயிரத்து ஐநூறு மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் பஞ், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கீழ் உள்ள பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க. அரசு பதவியேற்றப்பின் மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரும் கூண்டோடு பணிநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து வந்த தி.மு.க ஆட்சியின் போது மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் சுமரர் ஐநூறுக்கு மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேறு காலிபணியிடங்களில் பணியமர்த்தப்பட்டனர். மக்கள் நலப்பணியாளர்களுக்கான சம்பளமும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து வந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், ஏற்பட்ட சோகம் மற்றும் ஏமாற்றத்தால் ஏராளமான மக்கள் நலப்பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் பலக்கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை.  20 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் தொடர்வதும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் பணிநீக்கம் செய்யப்படுவதுமாக தங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதாக கூறப்படுகிறது. மக்கள் நலப்பணியாளர்களாக பணி புரிந்தவர்களில் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது அவர்களில் பெரும்பாலானோர் சுமார் 50 வயதை கடந்தவர்கள். இதனால் வேறு வேலைகளுக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது மீண்டும் அரசு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களை போல மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருக்கின்றனர். எனவே, தற்போது உள்ள அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் பணி வழங்கி மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.