புதிய மின் கம்பம் நட்டாச்சு : மின் இணைப்பு கொடுக்க நேரமில்லை

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 08:43


நாகர்கோவில்,:

பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்துக்கு பதில் புதிய மின்கம்பம் நடப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் பழைய கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தில் மின் கம்பிகள் இணைக்கப்படவில்லை.

பேயன்குழியை அடுத்த பூலன்கோடு பகுதியில் படிப்பகம் அருகே பழுதடைந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இந்த மின் கம்பத்துக்கு மூன்று பகுதிகளில் இருந்து மின் கம்பிகளில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பஜனை மடம், படிப்பகம் ஆகியவை இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும். மேலும் இந்த மின்கம்பத்துக்கு அருகில் உள்ள மற்றொரு மின்கம்பமும் விழுந்துவிடும் நிலையில் சாய்வாக நிற்கிறது. இதனால் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழுதடைந்த மின் கம்பம் அருகே கடந்த 12ம் தேதி புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் பழைய மின் கம்பத்திலிருந்து புதிய மின் கம்பத்துக்கு மின் கம்பிகள் மாற்றப்படவில்லை. அதிலும் இந்த மின் கம்பம் அருகே காய்ந்துபோன நிலையில் ஒரு மாமரம் உள்ளது. இப்போது பருவமழை காலம் என்பதால் காற்றில் காய்ந்த மரம் மின்கம்பத்தில் விழுந்தால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும். எனவே பழுதான மின்கம்பத்தை மாற்றும்போது அந்த மரத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தையும், காய்ந்த மா மரத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்.