தமிழக அரசு தெளிவற்ற நிலையில் தள்ளாடுகிறது: வைகோ மிக ‘அமைதி’ பேட்டி

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2017 08:21

துாத்துக்குடி,:

தமிழக அரசில் தற்போது தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இதனால் சட்டசபைக்கு உடனடி தேர்தல் வருமா என்பதை யூகித்து சொல்ல முடியாது. ரஜினியும், நானும் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக வரும் செய்திகள் எல்லாம் வதந்தி தான் என்று துாத்துக்குடியில் வைகோ குஷியாக தெரிவித்தார்.

துாத்துக்குடி மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்  சம்பந்குமார் இல்ல மணவிழாவிற்கு நேற்று மதியம் வைகோ வந்தார். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட மதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், வீரபாண்டி செல்லச்சாமி, கலை இலக்கிய அணி செயலாளர் மகாராஜன், நக்கீரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், மதிமுக நிர்வாகிகள் திரளாக வைகோவை வரவேற்றனர். வைகோவுடன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.

திருமண மண்டபத்திற்குள் செல்லும் முன்பாக வைகோ நிருபர்களிடம் கூறியதாவது;

போயஸ் தோட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையை ஒட்டி செய்தி சேகரிக்க சென்ற ஊடக அச்சுத்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். ஆனால் அவர்களை தாக்குவது என்பது கண்டிக்கக் கூடியது. உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.

கருப்பு பட்டியலில் எனது பெயர் இருப்பதாக  கூறி மலேசியாவில் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல விடாமல் என்னை தடுத்து விட்டனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். இதுபோன்ற அநீதிகள் இனி நடக்கக் கூடாது. இந்த விஷயத்தில் இந்திய அரசு மீது எந்த குறையும் இல்லை. வேண்டும் என்றே இலங்கை அரசு என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்று செய்திருக்கிறது. இதற்கு அவர்கள் கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டிய காலம் வரும்.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தெளிவற்ற நிலையில் இருக்கிறது.  இதனை எல்லோரும் கூறி வருகின்றனர்.  ஆனால் இதனை வைத்து கொண்டு தமிழக சட்டசபைக்கு உடனடி தேர்தல்  வருமா என்பதை யூகித்து சொல்ல முடியாது. ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஓட்டு இல்லை. இதனால் அது பற்றி பேச வேண்டியதில்லை.

ரஜினியுடன் இணைந்து நான் அரசியல் செய்ய உள்ளதாக வரும் தகவல் என்பது வெறும் வதந்தி தான். இந்த வதந்தி தான் தற்போது உலா வந்து கொண்டிக்கிறது. இவ்வாறு  வைகோ தெரிவித்தார்.

துாத்துக்குடியில் வைகோ பேட்டி பலமுறை நடந்திருக்கிறது. மிகவும் அமைதியான முறையில் நடந்த முதல் பேட்டி இது தான். இது நிருபர்களுக்கு மட்டுமின்றி மதிமுகவினருக்கு வியப்பாக இருந்தது. ரஜினி , வைகோ குறித்து கேட்ட போது மிகவும் குஷியான வைகோ சிரித்து கொண்டே அதில் பதில் அளித்தார். அந்த சிரிப்பில் தான் ‘ ஆயிரம் உள் அர்த்தங்கள்’ அடங்கி இருக்கும் என்கின்றர் மதிமுகவினர்.