காமராஜர் பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜினாமா

பதிவு செய்த நாள்

13
பிப்ரவரி 2016
22:40

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் மு.ராமசாமி தனது பதவி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் 2015 ஏப்ரலில் முடிவடைந்தது. இதனால் 2015 மார்ச் 31-இல் துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சிண்டிகேட் உறுப்பினர்கள் சார்பில், விஜில் எல்.மேத்தா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகதாஸ் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். மூன்றாவது உறுப்பினருக்கான தேர்தல், 2015 மார்ச் 31 இல் நடைபெற்றது.  இதில் ராஜேந்திரன், மு.ராமசாமி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். செனட் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில்  மு.ராமசாமி தேர்வுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். இந்தக்குழுவினர், துணைவேந்தர் பதவிக்காக 3 நபர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்  மு.ராமசாமி தன்னுடைய பொறுப்பை ராஜிநாமா செய்துவிட்டதாக பல்கலை. வட்டாரங்கள்  தெரிவித்தன.

இதுகுறித்து மு.ராமசாமியிடம் கேட்டபோது, ராஜினாமாக் கடிதத்தை பல்கலை. அதிகாரிகளுக்கு, வியாழக்கிழமை அனுப்பி விட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் அதை மறைப்பதாகவும் கூறினார். அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, கடிதம் எதுவும் வரவில்லை என்றனர்.