காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை: திருச்சி சிவா எம்.பி., பேச்சு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:26


சாத்தான்குளம்:

கர்நாடகத்தில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில் வைத்தே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மனமில்லாமல் உள்ளது என சாத்தான்குளத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவாஎம்பி தெரிவித்தார்.

சாத்தான்குளம் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம் சன்னதி தெருவில் நடந்தது. ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் வேல்துரை, மாவட்ட பிரதிநிதி படுக்கப்பத்து இந்திரகாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க., செயலாளர் வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க., மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, துாத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க., பேச்சாளர்கள் கதிர்வேல் மீனாட்சி, இலக்கிய அணி அமைப்பாளர் திருக்குறள் அன்பழகன், செந்துார் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

திருச்சி சிவா எம்பி பேசுகையில்,   காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை. காரணம் கர்நாடகத்தில் பொதுதேர்தலை எதிர்பார்க்கின்றனர். நாங்களும் கட்சி ஆரம்பித்துள்ளோம் என்று சிலர் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ளனர்.

தமிழக மக்கள் தி.மு.க., மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.   தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி காலத்தில் மேம்பாலங்கள், சுகாதாரம் பேணிடும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதன்முதலாக அமைக்கப்பட்டன. தொலைநோக்கு பார்வையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.   கருணாநிதி, ஸ்டாலின், போன்ற தலைவர்கள் மக்கள் பிரச்னைகளை தெரிந்தவர்கள்.

 இன்று இந்த நிலை இல்லை. இப்பொழுது தங்களுக்காகவே கட்சி நடத்துகிறார்கள். சமுதாயத்தில் ஏழை மக்கள் உயர்கல்விக்கு போக காரணமாக இருந்தது தி.மு.க., ஆட்சிதான். சென்னைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வந்ததும் தி.மு.க., ஆட்சியில்தான். தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும். தமிழக மக்கள் சிந்தனையுள்ளவர்கள் வருங்காலத்தில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றார்.