கொல்லங்கோடு தூக்க திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 00:40


கொல்லங்கோடு:

கொல்லங்கோடு பத்தரகாளி அம்மன் கோயில்  தூக்க திருவிழா கொடியேற்றம் நடந்தது. தூக்க திருவிழா துவக்க நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு  ஏற்றி துவக்கி வைத்தார்.

தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த தேவி கோவில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் மீனம் மாசம் பரணி நாளில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தபடுவது வழக்கம். இந்த வருட திருவிழாவை தேவஸ்தான தந்திரி பிரம்ம ஸ்ரீ கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி திருக்கொடி ஏற்றி துவக்கி வைத்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருவிழா துவக்க நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசினார். துவக்க நிகழ்ச்சிக்கு கோயில் தலைவர் சதாசிவன் நாயர் தலைமை வகித்தார்.  செயலாளர் மோகன் குமார் வரவேற்றார். மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன், கேரளா துறைமுக அமைச்சர் கடந்தபள்ளி ராமச்சந்திரன், விஜயகுமார் எம்.பி.,கேரளா முன்னாள் அமைச்சர் சிவகுமார்,  ராஜேஷ் குமார்  எம்.எல்.ஏ ., ஆகியோர் பேசினர். பொருளாளர் சூரிய தேவன் நன்றி கூறினார். வரும்  21 ம் தேதி குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியை காண  தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக குழித்துறை டிப்போவில் இருந்து இயங்ககூடிய அரசு பஸ்கள்  மார்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, நித்திரவிளை, கலிங்கராஜபுரம் ஆகிய இடங்களில் இருந்தும் திருவனந்தபுரம், பாறசாலை ஆகிய இடங்களில் இருந்தும்   பஸ்  வசதி செய்யபட்டு இருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடு

தமிழக ஆளுநர் வருகையால் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கபட்டு தமிழக கேரள எல்லை பகுதியான பழைய உச்சகடையில் இருந்து குளச்சல் ஏ.எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கபட்டு இருந்தது. பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்க கட்டுபாட்டு அறைகள் அமைக்கபட்டு இருந்தது. கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிக்க சுத்தமான குடிநீர் மற்றும் அவசர உதவி மருத்துவம் வழங்கவும் ஏற்பாடுகள்  கோயில் நிர்வாகம் சார்பில்  செய்யப்பட்டு உள்ளது.கொல்லங்கோடு பஞ்., ஊழியர்களும் சுகாதார பணிகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம்குமார், இணை செயலாளர் பிஜு குமார், பிரதிநிதி தலைவர் மணிகண்டன் நாயர், பிரதிநிதி துணை தலைவர் விஜயகுமாரன் தம்பி உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பாக்ஸ்

கவர்னர் உரை

நிகழ்ச்சி மேடைக்கு வந்து தமிழில் கவர்னர் வணக்கம் கூறினார். கொல்லங்கோடு தூக்க திருவிழா துவங்கி உள்ளது. தமிழக, கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். முதல் முறையாக இந்த கோயிலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கொடியேற்ற விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேலான மக்கள் இங்கு வந்துள்ளனர். பக்தர்கள் மனதிலிருந்து எதை நினைத்து வேண்டினாலும் அதை கொல்லங்கோடு தேவி நிவர்த்தி செய்து தருவார். காரணம் நமக்கெல்லாம் இரண்டு கைகள்தான் உள்ளது ஆனால் தேவிக்கு ஆயிரம் கைகள் உள்ளது.இந்திய கலாசாரத்தை சுவாமி விவேகானந்தர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் பரப்பி உள்ளார். நானும் இந்த கலாசாரத்தோடு ஒன்றியுள்ளேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இங்கு வருவது எதிர்பார்க்காத நிகழ்வு. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று பேசினார்

விழா துளிகள்

* காலை வட்டவிளை கோயிலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு திருவிழா கோயிலுக்கு மேளதாளங்களுடன் கொடிமரம் கொண்டு வரப்பட்டது

* அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடந்தது

* அம்மன்கள் வட்டவிளை கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி கிணறு வலம் வைத்து பதினொன்று தறவாடுகளுக்கும் சென்று பச்சை பந்தலில் அமர்ந்து பூஜைகள் பெற்று கோயில் வந்தடைந்தது

* மாலை மூன்று மணிக்கு வட்டவிளை கோயிலில் இருந்து திருவிழா கோயிலுக்கு எழுந்தருளி இரவு 7 மணிக்கு திருவிழா கோயில் வந்தது

* 7.30 மணிக்கு திருக்கொடியேற்றபட்டது

* 8. 20 க்கு கோயிலுக்கு வருகை தந்த கவர்னர் கோயிலை சுற்றி வலம் வந்தார் நிகழ்ச்சி மேடைக்கு வந்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்

* 8.40  மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

* தேவியின் திரு உருவ நினைவு பரிசு கவர்னருக்கு வழங்கப்பட்டது