சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதி விவகாரம் : 18ல் அறவழி உண்ணாநிலை போராட்டம்

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 00:39


கன்னியாகுமரி:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் நடந்த தமிழக இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18ம் தேதி சாமிதோப்பில் அறவழிஉண்ணாநிலை போராட்டம் நடக்கிறது என்று சாமிதோப்பு தலைமைபதிநிர்வாகி பூஜிதகுரு பாலபிரஜாபதிஅடிகள் கூறினார்.

 இதுகுறித்து சாமிதோப்பு அன்புவனத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;-சாமிதோப்பு பிரச்னை ஒருகோயில் பிரச்னைஅல்ல. கொள்கை சார்ந்த பிரச்னை. ஆதிக்க சக்திகளுக்கு கட்டுபாட்டிலிருந்து மாற்றாக வைகுண்டசாமி உருவாக்கி தந்தாரோ அந்தவழிபாட்டு முறையை கையகபடுத்துவார்கள் அல்லது கையகபடுத்தவேண்டும் என்று நினைப்பதே தவறு. இது தொடர்பாக ஒருநிலைப்பாட்டினை எடுத்து மத்திய அமைச்சரோடு பேசினோம். மேலும் தமிழகத்தின் துறைசார்ந்த அமைச்சர்கள் மற்ற அமைச்சர்கள் அதிகாரிகள் எல்லோரும் பேசினார்கள். ஆனால் அவ்வாறு பேசி காலத்தை கடத்தினார்களே தவிர எங்களுக்கு எந்த தீர்வோ முடிவோ இந்த அரசால் எடுக்க முடியவில்லை. மத்திய அமைச்சர் சொல்லுவதை கூட இந்து அறநிலையதுறையின் ஊழியர் மதிக்கமாட்டார் என்றால் இனி நாங்கள் அமைதி காப்பது அர்த்தமற்றது. எனவே அடுத்தகட்டமாக வரும் 18-ம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டர் சன்னதியில் அறவழி உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.  இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக இந்திய அளவில்  சீக்கிய சமையத்தை சார்ந்தவர்கள், கர்நாடகத்தை சேர்ந்த லிங்காய சமுதாயத்தினர் கலந்து கொள்கின்றனர். இந்த பிரச்னையை தேசிய பிரச்னையாக நாங்கள் கொண்டு செல்வோம். தமிழகத்திலும் அடையாள விரதத்திற்கும் பின் அரசு அசைந்து கொடுக்கவில்லை என்றால் அரசு ஒருதலைபட்சமாக, ஒரு நபருக்காக  பழிவாங்குகின்ற நிலையிலேயே காலத்தை கடத்துமானால் அடுத்து கன்னியாகுமரி, துத்துக்குடி, நெல்லை மாவட்டத்தை இணைத்து மண்டல அளவிலான பந்த் நடத்தப்படும். இந்த பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் சந்திக்க அவசியம் இல்லை. நாங்கள் அங்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பாக வரும் 18-ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் வருகின்றனர். போராட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். அய்யாவின் பதியை ஒடுக்க நினைப்பது எங்களின் கொள்கைளை அடக்குகிற செயல்.  இதனை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.