கேகே நகரில் கல்லுாரி மாணவி காதலனால் சரமாரியாக குத்திக் கொலை

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2018 01:18


சென்னை:

சென்னை கேகே நகரில் மீனாட்சி கல்லுாரி வாசலில் பிகாம் மாணவி காதலனால் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சங்கரியின் மகள் அஸ்வினி (வயது 19). இவரது தந்தை மோகன் இறந்து விட்டார். சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லுாரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் 13வது தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணசேனின் மகன் அழகேசன் (வயது 24). அரசு சுகாதாரத் துறையில் ஊழியராக உள்ளான். தற்போது மதுரவாயல் 143வது வார்டில் மலேரியா தடுப்புப்பிரிவில் வேலை செய்து வருகிறான். அஸ்வினியும், அழகேசனும் ஒரே ஏரியாவில் வசித்து வந்ததால் பள்ளிப்பருவத்தில் இருந்தே நெருங்கிப் பழகியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு அஸ்வினியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பெற்றோருக்குப் பயந்து காதலை கைவிட்டார். ஆனால் காதலை கைவிட மறுத்த அழகேசன் அஸ்வினியை தினமும் தொடர்ந்து சென்று திருமணத்துக்கு வற்புறுத்தி வந்துள்ளான்.

கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி அழகேசன், அஸ்வினியின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளான். இதனை அஸ்வினியின் பெற்றோர் கண்டித்தனர். அப்போது தகராறில் ஈடுபட்ட அழகேசன் கையில் கொண்டு மஞ்சள் கயிற்றை எடுத்து அஸ்வினியின் கழுத்தில் கட்ட முயன்றுள்ளான். இது குறித்து அஸ்வினின் பெற்றோர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் அழகேசனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அஸ்வினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய தயாரான போது அஸ்வினியின் பெற்றோர் வழக்கு எதுவும் வேண்டாம், அவனை எச்சரித்து அனுப்பி விடுங்கள் என கேட்டுள்ளனர். அதனால் போலீசார் அழகேசன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து அழகேசன் அஸ்வினியை தினமும் பின்தொடர்ந்தபடியே வந்துள்ளான். தன்னால் காதலை மறக்க முடியவில்லை என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். அழகேசனின் தொல்லையால் தன் மகளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று பயந்து போன அஸ்வினியின் பெற்றோர் அவரை மதுரவாயலில் இருந்து ஜாபர்கான்பேட்டை வவுசி தெருவில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்க வைத்தனர். அங்கிருந்து அஸ்வினி தினமும் கல்லுாரிக்கு சென்று வந்தார்.

தன்னை அஸ்வினி தொடர்ந்து காதலிக்க மறுத்து திருமணத்துக்கு சம்மதிக்காததாலும், தன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாலும் அழகேசன் மிகுந்த ஆத்திரம் அடைந்தான். நேற்று மதியம் 1 மணியளவில் அஸ்வினி படித்து வரும் கேகே நகர் மீனாட்சி கல்லுாரி வாசலில் கல்லுாரி வாசலில் கல்லுாரி விடும் வரை காத்து நின்றான். இந்நிலையில் மதியம் 2.30 மணியளவில் கல்லாரி முடிந்து மாணவிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் அஸ்வினியின் புகைப்படத்தை காட்டி இந்த பெண் இங்கேதான் படிக்கிறாளா என விசாரித்துள்ளான். அப்போது அஸ்வினி கல்லுாரியில் இருந்து வெளியே வந்தார். கல்லூரி எதிரில் உள்ள லோகநாதன் தெருவில் அஸ்வினி தன்னுடன் படித்து வந்த 5 மாணவிகளுடன் நடந்து சென்றார். இதனைக் கண்ட அழகேசன் அஸ்வினியிடம் ஓடிச் சென்று தகராறு செய்தான். அதற்கு அஸ்வினியும் அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அழகேசன் திடீரென தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினியின் வயிறு, மார்பு என பல இடங்களில் சரமாரியாக குத்தினான். இதனால் அலறித்துடித்த அஸ்வினி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அஸ்வினியை கத்தியால் குத்தியதை கண்ட அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் தப்பியோட முயன்ற அழகேசனை மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

உயிருக்கு போராடிய நிலையில் அஸ்வினியை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் கேகே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலையாளி அழகேசனுக்கு பொதுமக்கள் தாக்கியதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரை போலீசார் மீட்டு சென்னை ராஜீவ்காந்திர அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்ததும் கேகே நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அழகேசனை கைது செய்யவுள்ளனர்.

சென்னை கேகே நகரில் நேற்று மதியம் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அதிகாலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதியை ராம்குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தான். பேஸ்புக் மூலம் அறிமுகமான சுவாதியை ராம்குமார் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த நிலையில் தன்னை சுவாதி காதலிக்க மறுத்ததால் அவரை ராம்குமார் கொடூரமாக கொன்றான். அதனையடுத்து கல்லுாரி வாசலில் பட்டப்பகலில் கல்லுாரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை நகரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினியை கொலை செய்ய பிராந்தி பாட்டிலுடன் அழகேசன், அஸ்வினியை கொலை செய்ததும் அதனை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளான். தீ வைப்பதற்காக சட்டைப்பையில் சிகரெட் லைட்டரும் வைத்திருந்துள்ளான். அவன் தீ வைப்பதற்குள் பொதுமக்கள் சேர்ந்து அழகேசனை சூழ்ந்து தாக்கியதால் அவனது தற்கொலை முயற்சி பலிக்காமல் போனது.  

அஸ்வினியின் தாய் ஆஸ்பத்திரியில் கதறல் பேட்டி:

அஸ்வினி கொலை செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் தெரியவந்ததும் அவரது தாய் சங்கரி, தம்பி அபினேஷ், பெரியம்மா சரஸ்வதி, பெரியப்பா சுந்தர் ஆகியோர் பதறியடித்துக் கொண்டு  நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த அஸ்வினியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். ‘‘அழகேசனிடம் பேசாதே, பழகாதே என்று ஆயிரம் தடவை சொன்னேனே, இவள் கேட்கவே இல்லையே. படுபாவி என் மகனை இப்படி அநியாயமா கொன்று விட்டானே’ என அவர் உரத்த குரலில் அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. பின்னர் சங்கரி நிருபர்களிடம் கூறுகையில், ‘என் கணவர் இறந்த பிறகு அஸ்வினியையும், எனது இளைய மகன் அபினேஷையும் நான் வீட்டு வேலை பார்த்து காப்பாற்றி வருகிறேன். அபினேஷ் ஐடிஐ கல்லுாரியில் படித்து வருகிறான். அழகேசன் என் மகளை திருமணம் செய்யக் கோரி அடிக்கடி பிரச்னை செய்து வந்தான். அது குறித்து போலீசில் புகார் அளித்தோம். அதன் பிறகு கொஞ்சநாள் பயந்து இருந்தான். பின்னர் மீண்டும் அவளை பின்தொடர்ந்துள்ளான். இதனை அஸ்வினி என்னிடம் சொல்லவே இல்லை. இப்படி கொன்று விட்டானே’ என தெரிவித்தார்.

அழகேசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரவாயலில் உள்ள அஸ்வினியின் வீட்டுக்குள் புகுந்து அவரது கழுத்தில் தாலி கட்டியுள்ளான். அதனை அறுத்து எரிந்து விட்டு அஸ்வினியின் தாய் சங்கரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீஸ் நிலையத்தில் அழகேசனிடம் விசாரணை நடத்திய போது நான் அவளுக்கு தாலி கட்டி விட்டேன். அதனால் அவள்தான் என் மனைவி. அவளை என்னுடன் சேர்த்து வையுங்கள் என அழகேசன் போலீசாரிடம் கெஞ்சியுள்ளான்.