சென்னை மெரீனா பீச்சில் நடந்து சென்றவரை கத்தியால் வெட்டி ரூ. 15 ஆயிரம் வழிப்பறி

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2018 00:54


சென்னை:

சென்னை மெரீனா பீச்சில் நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியால் வெட்டி ரூ. 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை, பெரியமோட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). சென்னையில் தினக்கூலி செய்து வந்த இவர் இரவில் மெரீனா பீச் மணலில் படுத்து உறங்குவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மெரீனா பீச்சில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலையில் இருந்து காந்திசிலைய நோக்கி சர்வீஸ் ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 மர்ம நபர்கள் சுரேஷிடம் செல்போனை தரும்படி மிரட்டியுள்ளனர். அதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரில் ஒருவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷை வெட்டினான். அதனை அவர் தடுத்த போது அவரது வலது கையில் வெட்டு விழுந்தது. இதனையடுத்து சுரேஷ் வைத்திருந்த ரூ. 15 ஆயிரத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனைக் கண்ட அந்த பகுதி வழியாக சென்ற நபர்கள் சுரேஷை காப்பாற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதி பெற்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மெரீனா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.