தேசிய மாநில கட்சிகளை மிஞ்சும் வகையில் உறுப்பினர் சேர்க்கை இடம்பெறவேண்டும்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 01:30


குற்றாலம்,:

தமிழகத்தில் தேசிய, மாநில கட்சிகளை மிஞ்சும் அளவில் அதிமுக அம்மா அணியின் உறுப்பினர் சேர்க்கை இருக்க வேண்டுமென, வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட அதிமுக அம்மா அணி அமைப்பு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நெல்லை வடக்கு மாவட்ட ரீதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. புதிய வடக்கு மாவட்ட  செயலாளராக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய பாப்புலர் முத்தையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை குற்றாலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை இல்லத்தில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி அமைப்பு செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாப்புலர் முத்தையா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

நெல்லை மாவட்டத்தில் கட்சி 3 அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பொதுசெயலாளர் சசிகலா, துணை பொதுசெயலாளர் எம்.எல்.ஏ., தினகரன் ஆகியோரது பரிந்துரையின்படி, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கையை காலதாமதமின்றி, இன்று (13ம் தேதி) முதல் துவக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகளை மிஞ்சும் வகையில், உறுப்பினர் சேர்க்கை நமது அணியில் இடம்பெற வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலை போல அனைத்து தொகுதிகளிலும் மக்களின் ஆதரவை பெற்று வெற்றிபெற வேண்டும். அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், அதனை நிறைவேற்ற பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிமுக அம்மா அணி தான் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில், மக்களோடு இணைந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் பண்டாரம், பெரியதுரை, நகர செயலாளர்கள் முத்துக்குமார், சங்கரபாண்டியன், பண்பொழி பேரூர் செயலாளர் பரமசிவன், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் பாலசுப்பிரமணியன், பண்பொழி டவுன் பஞ்., முன்னாள் துணை தலைவர்  காஜாமைதீன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி துப்பாக்கி பாண்டியன், அண்ணா தொழிற்சங்கம் வேல்முருகான், வக்கீல் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.