ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர் விடுதலை : மத்திய அமைச்சருக்கு நன்றி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 01:14


நாகர்கோவில்,:

ஈரானில் சிறை பிடிக்கப்பட்டு ஊர் திரும்பிய மீனவர் குடும்பத்துடன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

துபாயிலிருந்து மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டியதாக கூறி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சார்ந்த 15 மீனவர்களை ஈரான் படையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். துறைமுக அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் விசைப்படகுகளிலேயே அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். அந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி மத்திய, மாநில அரசுகளுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் வைத்தார்.  கிராஸ்லின் என்ற மீனவர் நெஞ்சுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததால் அவரை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளால் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஈரானிலிருந்து  விடுதலையான மீனவர் கிராஸ்லின் தனது மனைவி சுனிதாவுடன் நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறினார். அவருடன் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி உடனிருந்தார். மேலும் சிறைவைக்கப்பட்டிருக்கும் 14 மீனவர்களையும் மிக  விரைவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.