பாலப்பள்ளம் கோயிலில் திருட்டு

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 01:13


நாகர்கோவில்,:

பாலப்பள்ளம் முத்துமாரியம்மன் கோயிலில் திருடியவர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.

கருங்கல் அருகே பாலப்பள்ளம் நடுப்பிடாகையில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட்டது. நேற்று காலை சுமார் 6 மணியளவில் பூஜைக்காக கோயிலை திறக்க பூஜாரி வந்திருக்கிறார். அப்போது கோயில் கதவுகளில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஊர் நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். ஊர் நிர்வாகிகள் கருங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது கோயில் கருவறையில் அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை, வெள்ளி சூலாயுதம் மற்றும் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ஆகியவையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலப்பள்ளம் நடுபிடாகை ஊர் தலைவர் மகேஷ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.