போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: கமிஷனர் ஏகே விஸ்வநாதன் அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2018 02:38


சென்னை:

சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வழக்குகளில் சிக்கியுள்ள பழைய வாகனங்களை ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய வளாகங்களிலும் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டிருக்கும். கார், வேன், பஸ் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்களில் குற்ற எண் எழுதப்பட்டு அவை அனைத்தும் அந்த வழக்கு முடிவடையும் வரை ஸ்டேஷன் வளாகத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கும். அவை பார்ப்பதற்கு அசிங்கமாகவும் போலீஸ் ஸ்டேஷனின் அழகை கெடுப்பதாகவும் காட்சியளிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசிட் அடித்த கமிஷனர் விஸ்வநாதன் கண்களில் இவை பட்டன. உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி போலீஸ் நிலையங்களில் அகற்றி காவல் நிலையங்களை பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கமிஷனர் விஸ்வநாதன் அளித்த உத்தரவில் கூறியிருந்ததாவது, ‘சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்கு தொடர்பான சிடி பைல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் அழகான முறையில் பாதுகாக்கப்படவேண்டும். தேவையின்றி அவை காவல் நிலையத்தை விட்டு வெளியில் கொண்டு செல்வதை காவலர்கள் தவிர்க்க வேண்டும். திருட்டுக் குற்றங்களில் மீட்கப்படும் வாகனங்கள் கோர்ட்டில் அனுமதி பெற்று உடனடியாக உரியவர்களிடம் வழங்கப்படவேண்டும். அவை காவல் நிலையங்களில் நாள் கணக்கில் நிறுத்தப்படக் கூடாது.

சென்னையில் அனைத்து காவல் நிலையங்களும் வாரந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டும். குப்பையாக இல்லாமல் எப்போதும் சுத்தமாகவும், ஆவணங்கள் அனைத்தும் பத்திரமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தந்த காவல் மாவட்ட துணைக் கமிஷனர்கள் இதனை மேற்பார்வையிட்டு ஒழுங்குப்படுத்தல் வேண்டும். ஸ்டேஷன்களை நான் பார்வையிட வரும் போது இவை பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு ஒழுங்கீனமாக உள்ள காவல் நிலைய ஆளுநர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவில் கூறியுள்ளார். இதனையடுத்து சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணியில் பெண் போலீசார் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். அழுக்காக உள்ள போலீஸ் நிலையங்களில் வெள்ளை மற்றும் பெயிண்ட் அடிக்கும் பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன. கமிஷனரின் இந்த புதிய உத்தரவால் போலீசாருக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு அவர்கள் காவல் நிலையத்தை சுத்தமாக வைப்பதில் கண்ணும் கருத்துமாக களம் இறங்கியுள்ளனர்.