‘பினு’ சென்னை சூளைமேடு தாதாவானது எப்படி: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.............

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2018 02:39


சென்னை:

சென்னை மாங்காட்டை அடுத்த மலையம்பாக்கத்தில் மாநாடு நடத்தும் அளவுக்கு ரவுடி பினு தனது கூட்டாளிகள் சுமார் 200 பேருடன் அரிவாளால் கேக் வெட்டி, ஆயிரம் வாளா சரவெடி பட்டாசு வெடித்து, பட்டாக்கத்தி, அரிவாள்களை சுழற்றி பிறந்த நாள் விழா கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் வந்ததும் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் சுமார் 70 பேர் கொண்ட படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவுடிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு பிறந்த ஊர் கேரளம் என்றாலும் சென்னை சூளைமேடுதான் அவனது தாய் நாடாக ஆனது. சாதாரண ஆளாக இருந்த ‘பினு’ தாதா அளவுக்கு பெயர் பெற்றது எப்படி என்பது பற்றி போலீசார் தரப்பில் சொன்ன பரபரப்பு தகவல்கள் வருமாறு:–

   கேரளாவில் சாதாரண டீக்கடை நடத்தி வந்த பினு அங்கேயே வைத்து கட்டப்பஞ்சாயத்து தொழிலை தொடங்கினான். பின்னர் அங்கிருந்து பினுவின் குடும்பம் சென்னை சூளைமேட்டுக்கு வந்தனர். சூளைமேடு காய்கறி மார்க்கெட்டில்தான் அவனது ஆரம்பக்கால ரவுடி சாம்ராஜ்ஜியம் தொடங்கியது. சூளைமேடு  மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் ரவுடி மாமூல் வசூலிக்க தொடங்கினான். அங்கு நடந்த முதல் அடிதடி வழக்கில் சூளைமேடு போலீசில் பினு மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு முன்னேறி ஆட்கடத்தல், கொலை என படிப்படியாக பினுவின் ரவுடி கிரேடு உயர்ந்து 1997ம் ஆண்டு சென்னை ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்தது. 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 15 வழக்குகள் பினு மீது பதியப்பட்டன.

அப்போது அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்கெட்ச் ராதாகிருஷ்ணன் பினுவுடன் நெருக்கமானார். இருவரும் சேர்ந்து சூளைமேடு, அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளில் மாதா மாதம் ரவுடி மாமூல் வசித்தனர். பினு சிறைக்கு சென்றால் ராதாகிருஷ்ணனும், ராதாகிருஷ்ணன் சிறைக்கு சென்றால் பினுவும் மாமூலை வசித்து அவரவர் வசம் ஒப்படைத்தனர். இந்த மாமூல் வசூலிக்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்தினர். இருந்தாலும் முன்னதாக இருவரும் இணைந்து கொலை, ஆள்கடத்தல் என பல குற்ற சம்பவங்களில் கொடி கட்டிப்பறந்ததால் இவர்களது புகழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் வரை பரவியது.

 3 கொலை வழக்குகளில் பெயர் பிரபலமானதால் சென்னையில் உள்ள ரவுடிகளில் பலம் வாய்ந்தவராக பினு உருவானார். பினுவுக்கு ஒரு அரசியல் விஐபியின் தொடர்பும் கிடைத்து அந்த கட்சிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு கட்சித்தலைமையை கவர்கிறார். பணக்காரர்களை கடத்தி பணம் பறிப்பதிலும், கூலிக்கு கொலை செய்வதிலும் பினு பலே கில்லாடி என்பதாலும், பினுவுக்கு எதிரிகள் அதிகம் பேர் முளைக்கத் தொடங்கினர். இதனால் பினுவுக்கு பார்டிகார்டாக அவரைச் சுற்றி எப்போதும் ஆஜானுபாகுவான ரவுடிகள் தயார் நிலையில் இருந்து கொண்டே இருப்பார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு வடபழனி போலீஸ் நிலையத்தில் பினு மீது ஒரு அடிதடி வழக்கு பதிவானது. அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் பின்னர் வெளியே வராமல் தலைமறைவாகி விட்டார். அதன் பின்னர் பினு பெரிய அளவில் குற்றச்செயல்களில் எதிலும் ஈடுபடாமல் அமைதியாகவே இருந்துள்ளனர். சென்னையை விட்டு சொந்த ஊாரான கேரளாவில் பதுங்கி விட்டார். அப்போது பினுவின் இடத்தை அவரது கூட்டாளி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் அடைந்தார். சிறையில் இருந்தபடியே கொலை, ஆட்கடத்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதில் ராதாகிருஷ்ணன் சூராதிசூரனாக இருந்து வந்துள்ளான். இது பினுவின் கூட்டாளிகளுக்கு அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த தகவல் பினுவுக்கு செல்லவே, ராதாகிருஷ்ணன் பினுவின் எதிரியாக மாறினார். ராதாகிருஷ்ணனை அங்கிருந்து காலி செய்து விட்டு மீண்டும் பினுவை அந்த இடத்துக்கு வரவேண்டும் என அவரது கூட்டாளிகள் வற்புறுத்தியதால் பினு மீண்டும் சென்னைக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துத்தான் பினு தனது பிறந்த நாள் கொண்டாட்ட பீர் பார்ட்டியின் மூலம் ரவுடிகளுடனான நட்பை புதுப்பிக்க திட்டம் வகுத்து மலையம்பாக்கத்தில் சினிமா பாணியில் தயார் செய்தான். கொண்டாடும் இடமான லாரி ஷெட் அமைந்துள்ள இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தாலும், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை (ரிங் ரோடு) ஒட்டியே இருப்பதால் அனைவரும் வர வசதியாக இருக்கும் என்று கருதினர். போலீஸ் தொல்லை இருக்காது என்பதால் அங்கேயே நடத்திக் கொள்ளலாம் என பினுவும் சம்மதித்தாராம். அனைத்து ரவுடிகளுக்கும் பினு வாட்ஸ்அப் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில்தான் ரவுடிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் தகவல் கிடைத்ததும் சென்னை போலீஸார் அவர்கள் அனைவரையும் கூண்டோடு பிடித்து சிறையில் தள்ளியுள்ளனர்.

பினுவின் ‘தலை’ வெட்டும் ‘ஸ்டைல்’

கொலை நடந்த இடத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் விழுந்த வெட்டுக்களின் விதத்தை பார்த்தே அது எந்த ரவுடி வெட்டியது என்று போலீசார் கணித்து விடுவார்கள். அதுவே குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக இருக்கும். அதன்படி பினுவால் கொல்லப்பட்டவர்கள் என்றால் தலை, தனியாகத் துண்டிக்கப்பட்டும், முகம் அடையாளம் தெரியாதபடி சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்டும் இருக்கும். அதை ஆதாரமாக வைத்துத்தான் போலீசார் பினுதான் கொலையாளி என்ற முடிவுக்கு வந்து அவர் மீது வழக்குகள் பதிவார்கள்.