பூ விற்பது போல கஞ்சா விற்ற 2 மூதாட்டிகள் உள்பட 4 பேர் கைது

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:27


சென்னை:

ஆந்திராவில் கஞ்சாவை கடத்தி வந்து சென்னை நகரம் முழுவதும் சப்ளை செய்த பலே பூ விற்கும் பெண் உள்பட 3 பேரை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை போலீசார் பள்ளிக்கரணையில் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று காலையில் பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேகமாக வந்த டாடா இன்டிகா காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அதற்குள் கம்பு பைகளில் உலர்ந்த கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சுமார் 25 பைகளில் இருந்த 180 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த ஜல்லடியான் பேட்டையைச் சேர்ந்த ஹயாத் பாஷா (வயது 44), தேனி, கம்பத்தைச் சேர்ந்த மூதாட்டி முத்துலட்சுமி (65) அவரது மகன் குமரேசன் மற்றும் திண்டிவனத்தைச் சேர்ந்த முனியம்மா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தததாகவும் அதனை சென்னையில் பொட்டலம் போட்டு முத்துலட்சுமி விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கைதான முத்துலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, ‘‘எனது சொந்த ஊர் தேனி மாவட்டம், கம்பம். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கஞ்சாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த சில மாதங்களாக கஞ்சாவை கடத்தி வந்து விற்றதும் ஊருக்கு திரும்ப சென்று விடுவேன். ஆனால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் கஞ்சா நிறைய ஆர்டர் வந்ததால் பள்ளிக்கரணை பகுதியில் 4 ஆயிரம் வாடகைக்கு வீடு பார்த்து அங்கேயே எனது மகன் குமரேசனுடன் தங்கினேன். நானும் எனது தோழி முனியம்மாவுடன் சேர்ந்து வீட்டுக்கு அருகில் பூக்கடை போடுவோம். பூ விற்பது போல அங்குள்ள குடிசைப்பகுதிகளில் ரகசியமாக கஞ்சா விற்பேன். இதனால் போலீசுக்கு எங்கள் மீது சந்தேகம் வராது. ஆந்திராவில் இருந்து தேனிக்கு வரும் கஞ்சாவை ஒரு கிலோ 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு வந்து இங்கு 10 ஆயிரத்துக்கு விற்று விடுவேன். சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளில் தனது ஆட்டோவில் கொண்டு போய் ஹயாத்பாஷா பொட்டலம் போட்டு 50 கிராம் கஞ்சா 100 ரூபாய் என விற்று வருவார். நல்ல லாபம் கிடைத்து வந்த நிலையில், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, இப்போது போலீசில் சிக்கிக் கொண்டேன்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குப் பின்னர் கைதான முத்துலட்சுமி, முனியம்மா, ஹயாத்பாஷா, குமரேசன் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 18 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.