நெல்லையில் அரசு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:10


திருநெல்வேலி:

நெல்லையில் அரசு சித்த மருத்துவம், இன்ஜி.,மற்றும் சட்டக்கல்லூரிகளில் வழக்கமான உற்சாகத்துடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன்  கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அரசு சித்த மருத்துவ கல்லூரி:

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. 2வது நாளாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவிகள் கலர், கலராக கோலமிட்டிருந்தனர். கரும்பு, மஞ்சள் வைத்து 11 பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். மாணவ, மாணவிகள் ஓலை வைத்து பொங்கலிட்டனர். பால்  பொங்கியதும் குலையிட்டு உற்சாகமாக கொண்டாடினர். கல்லூரி முதல்வர் நீலாவதி மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவ, மாணவிகளும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியடைந்தனர்.

அரசு இன்ஜினியரிங் கல்லூரி:

நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் துணை முதல்வர் சித்தார்த்தன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் பானையில் சர்க்கரை பொங்கலிட்டு மகிழ்ந்தனர். சர்க்கரை பொங்கலை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உறியடி, சிலம்பம், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

நெல்லை அரசு சட்டக்கல்லூரி:

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். மாணவர்கள் சக்திராஜ், தம்புராட்டி, வவுனியா, கண்ணன் முன்னிலை வகித்தனர்.  மாணவர் சுருளி முருகன் வரவேற்றார். நிகழ்ச்சிகளை முதலாம் ஆண்டு மாணவர் முத்துராமலிங்கம் தொகுத்து வழங்கினார்.

பாரம்பரிய உடையணிந்து வந்திருந்த மாணவ,மாணவிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உறியடி, சிலம்பு, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றிபெற்றவர்களை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

இந்துசமய அறநிலையத்துறை:

பாளை., இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. உதவி ஆணையாளர் சாத்தையா தலைமையில் சமத்துவ பொங்கலிட்டனர். சர்க்கரை பொங்கல் ஊழியர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியடைந்தனர். தலைமை எழுத்தர் ரோகிணி உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.